“இந்தியாவை வீழ்த்தாமல் உலகக்கோப்பை வெல்ல முடியாது..” - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணி வலிமையாக களம் இறங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமி, இந்தியாவை வீழ்த்தாமல் கோப்பை வெல்ல முடியாது என கூறியுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், 20 அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் 59 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்திய அணி 51 வெற்றிகள், 8 தோல்விகளுடன் வலிமையாக களம் புகுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் உள்ளூர் மற்றும் வெளிநாடு என அனைத்து டி20 தொடர்களிலும் தோல்வியே இல்லாமல் வெற்றிநடை போட்டுவரும் இந்திய அணியில், சிக்ஸ் ஹிட்டர்கள், ஃபினிசிங் வீரர்கள், தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் என அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பிட்டு சொல்லும்படியான குறைகள் என இந்திய அணியில் எதுவும் இல்லாமல் இருந்துவருகிறது, ஒரே கவலையாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் இருந்த நிலையில், தற்போது அவரும் அவருடைய ஃபார்மிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் சூழல் எல்லாமே இந்திய அணியே கோப்பை வெல்லும் என்ற ஆருடத்தை வழங்கும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமியும் அதே கருத்தை கூறியுள்ளார்.
இந்தியாவை வீழ்த்தாமல் கோப்பை வெல்ல முடியாது..
2026 டி20 உலகக்கோப்பை வெல்வது குறித்தும், வெஸ்ட் இண்டீஸ் அணி குறித்தும் பேசியிருக்கும் டேரன் சமி, "நாங்கள் வெற்றி பெற முடியும் என்று நம்பவில்லை என்றால் இங்கே இருக்க மாட்டோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே சூழ்நிலையைப் போலவே தற்போதும் உணர்கிறேன், அப்போது எல்லாமே எங்களுக்கு எதிராக இருந்தது, யாரும் எங்களுக்கு ஒரு வாய்ப்புகூட கொடுக்க நினைக்கவில்லை. அதேபோல தற்போது டிரஸ்ஸிங் அறையில் உள்ள எங்கள் வீரர்களையும் அவர்களது திறமையையும் நான் பார்க்கிறேன். நாங்கள் வெற்றி பெற விரும்புகிறோம், ஒரு பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம்” என பேசினார்.
மேலும் டி20 உலகக்கோப்பை வெல்வது குறித்து பேசிய அவர், “2026 உலகக்கோப்பையை எந்த அணி வெல்ல நினைத்தாலும், அவர்கள் முதலில் இந்திய அணியைத் தாண்டியாக வேண்டும். இந்தியாவை வீழ்த்தாமல் எந்த அணியாலும் கோப்பையை வெல்ல முடியாது என்பதுதான் உண்மை. சொந்த மண்ணில் அசுர பலத்துடன் பயமில்லாத கிரிக்கெட்டை விளையாடி வரும் இந்திய அணியை சமாளிப்பது எதிரணிகளுக்குக் கடினமான காரியம்” என பேசினார்.

