WPL 2026 | இன்று தொடங்குகிறது மகளிர் ஐபிஎல்.. முதல் போட்டியில் MI vs RCB மோதல்!
2026 மகளிர் ஐபிஎல் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. மும்பை நடப்பு சாம்பியனாக இருப்பதால், ஆர்சிபி அணியின் ஸ்மிருதி மந்தனா தலைமையில் கடும் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கு முன் யோ யோ ஹனி சிங் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் கலை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாகக் ஐபிஎல் கொண்டாடப்படும் நிலையில், மகளிர் கிரிக்கெட்டர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் WPL என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2023ஆம் ஆண்டு தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக் தொடரானது, இதுவரை 3 சீசன்களை கடந்துள்ளது. முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், 2வது சீசனில் ஆர்சிபியும் கோப்பை வென்ற நிலையில், 2025 மகளிர் ஐபிஎல் தொடரையும் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சாம்பியனாக இருக்கிறது.
இந்தநிலையில், உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் இடையிலான 4-ஆவது மகளிர் பிரிமீயர் லீக் தொடர் இன்றுமுதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
2026 மகளிர் ஐபிஎல் தொடர் ஜனவரி 9ஆம் தேதியான இன்றுமுதல் தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இத்தொடருக்கான முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவிருக்கும் நிலையில், முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டு மோதவிருக்கிறது ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி. போட்டி தொடங்குவதற்கு முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.
இசை நட்சத்திரம் யோ யோ ஹனி சிங் மற்றும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் போட்டிக்கு முந்தைய கலை நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவார்கள் என மகளிர் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது..

