WTC 2025: போர் படைப்போர் யாரோ? போரில் வெல்வோர் யாரோ?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்ரிக்க அணியும் இன்று மோதுகிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.
அனுபவம் + திறமை = ஆஸ்திரேலியா
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி அனுபவம் மற்றும் திறமை என தரமான வீரர்களுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. புதிய தொடக்க வீரராக மார்னஸ் லபுஷேன் அனுபவமிக்க உஸ்மான் கவாஜாவுடன் களமிறங்க இருக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில் லபுஷேன் தற்போதுதான் - இரண்டாவது முறையாக - தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார். ஏனெனில், வார்னருக்கு மாற்றாக ஒரு வீரரை ஆஸ்திரேலிய அணி இன்னும் கண்டுகொள்ளவில்லை என்பதால், கடந்த சில ஆண்டுகளாக டெஸ்டில் சரியாக செயல்படாத லபுஷேனிற்கு மீண்டுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அணியின் கேப்டன் கம்மின்ஸ் இதை நேர்மறையாகவே அணுகுகிறார். அவர் கூற்றுப்படி, லபுஷேன் இங்கிலாந்திலும், லார்ட்ஸிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவரது சராசரி அங்கு 40க்கும் மேல் உள்ளது. எனவே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்.
அதுமட்டுமின்றி கேமரூன் க்ரீன் வருகையால் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் மேலும் பலப்பட்டிருக்கிறது. இதைத்தாண்டி ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் என ரன்களுக்காகவே பிறப்பெடுத்த வீரர்கள் அணியில் இருக்கின்றனர். பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் என மும்மூர்த்திகளுடன் களமிறங்குகிறது ஆஸ்திரேலிய அணி.
இளரத்தங்களுடன் தென்னாப்ரிக்கா
ஆஸ்திரேலிய அணிக்கு இணையாக வலுவான வீரர்களுடனே களமிறங்குகிறது தென்னாப்ரிக்க அணி... பேட்டிங்கில் இள ரத்தங்களை நம்பி வழிநடத்துகிறார் டெம்பா பவுமா.. ரியான் ரிக்கல்டன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் வியான் முல்டர் போன்ற வீரர்கள் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள்தான் என்றாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எனும் மிகப்பெரிய மேடையில் அவர்களது செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணி அனுபவம், வலு மற்றும் திறமையான பந்துவீச்சாளர்களால் கட்டமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பேசிய தென்னாப்ரிக்க அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், “பேட்டிங் குழுவில் அமைதியுடன் நம்பிக்கையும் உள்ளது. அவர்கள் சூப்பர்ஸ்டார்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், கூட்டு அணியாக நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், இங்கிலாந்தில் நடைபெறும் போட்டி என்பதால் பந்துவீச்சுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, தற்போது ஃபார்மில் இருக்கும் பேட்டர்சனை விட அணியின் மூன்றாவது பந்துவீச்சாளராக அனுபவம் வாய்ந்த லுங்கி இங்கிடி அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிடி 19 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்களை வீழ்த்தியிருந்தாலும், கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் இங்கிடி ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடவில்லை. மறுபுறம் பேட்டர்சனோ வேகத்தைவிட மெதுவான பந்துகளால் எதிரணிக்குத் தொல்லை தரக்கூடியவர். கடந்த டிசம்பரில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி, கடந்த இரு மாதங்களாக இங்கிலீஸ் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் மிடில்செக்ஸிற்காக லார்ட்ஸ் மைதானத்தில் மூன்று முறை ஆடியுள்ளார். ஆனாலும் அவர் அணியில் இடம்பெறாதது தென்னாப்ரிக்க கிரிக்கெட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ரபாடா தலைமையிலான தென்னாப்ரிக்காவின் பந்துவீச்சில் மார்கோ யான்சன், லுங்கி இங்கிடி, கேசவ் மகாராஜ் போன்றோர் இருக்கின்றனர்.
சரிசமமாக ஒரு பைனல்
இன்னும் சுவாரஸ்யமாக சொல்ல வேண்டுமென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 என்பது பந்துவீச்சாளர்களுக்கான போட்டி. ஏனெனில், டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசியின் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றிருக்கும் 5 வீரர்கள் இந்த இரு அணிகளையும் சேர்ந்தவர்கள்.
தென்னாப்ரிக்கா தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களது இரண்டாவது நீண்ட வெற்றியாகும்.. முன்னதாக, மார்ச் 2002 முதல் மே 2003 வரையிலான காலக்கட்டங்களில் தென்னாப்ரிக்க அணியினர் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பதிவு செய்திருந்தனர். மறுபுறம் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய கடைசி 23 டெஸ்ட் போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளனர். 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 9 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். அழுத்தம் நிறைந்த போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்றும் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
மைதானம் எப்படி?
இறுதிப்போட்டியின் போக்கில் வானிலை முக்கியப்பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஒரு வாரமாக நாடுமுழுவதிலும் மழை பெய்திருந்தது. ஆனாலும், கடந்த சில தினங்களில் மழை நின்று வானிலை தெளிவாக இருந்ததால், இரு அணிகளும் பயிற்சி பெற முடிந்தது. அதுமட்டுமின்றி, போட்டி முழுவதும் ஓரளவு வெயில் இருக்குமென்றும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லார்ட்ஸில் உள்ள மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப கட்டங்களை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளைக் கொடுக்காமல் கடந்துவிட்டால், மிகப்பெரிய ஸ்கோரை எட்ட ஆடுகளம் உதவுமென வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.