indian test cricket
indian test cricketPT

WTC வெல்வது கனவாகவே போய்விடுமா? தலைக்கு மேல் 3 பெரிய பிரச்னைகள்! சரி செய்யுமா இந்தியா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனான விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்களாலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டைட்டிலை வெல்ல முடியவில்லை என்றால், சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி எப்போது WTC கோப்பை கனவை நிறைவேற்றும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
Published on

உலக கிரிக்கெட்டில் டி20 உலகக்கோப்பையானது முதல்முறையாக தொடங்கியபோது, முதல் பதிப்பான 2007-ல் இறுதிப்போட்டிவரை முன்னேறிய இந்திய அணி கோப்பை வென்றது. அதேபோல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) என்பது முதல் முறையாக தொடங்கப்பட்டபோது, 2021 மற்றும் 2023 என முதலிரண்டு பதிப்பிலும் இறுதிப்போட்டிவரை முன்னேறி அசத்தியது இந்திய அணி.

WTC Final 2021
WTC Final 2021Twitter

ஆனால் இரண்டு இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தோற்ற இந்தியா கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டது. 2025 WTC சுழற்சியிலும் கடைசி 2 சுற்றுவரை புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தபிறகு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

india lost in 2023 wtc final
india lost in 2023 wtc finalweb

இந்த சூழலில் மோசமான டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு மூத்தவீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா, விராட் கோலி என 3 பேரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தனர். இப்படி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தூணாக இருந்த 3 மூத்த வீரர்கள் ஓய்வை பெற்றநிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்லும் என்ற கனவானது கனவாகவே போய்விடுமா? என்ற கவலை எழுந்துள்ளது.

வரலாற்றை மாற்றி எழுதுமா கில்லின் இளம்படை..

இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவராலேயே WTC டைட்டிலை வெல்ல முடியாதபோது, தற்போதுதான் வளர்ந்துவரும் கிரிக்கெட்டராக இருக்கும் கில்லின் தலைமையில் இந்தியா மகுடம் சூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் முதல் தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்ளவிருக்கிறது சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்தியா. இது மிகவும் இளம் மற்றும் அனுபவமற்ற அணியாக இருந்தாலும், போட்டிகளை வெல்லும் திறன் கொண்ட திறமைசாலிகள் அணிக்குள் இன்னும் நிறைய பேர் உள்ளனர்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

இங்கிலாந்து சுற்றுப்பயணம் என்பது எப்போதுமே இந்திய அணிக்கு ஒரு பெரிய சவாலாக இருந்துள்ளது, ஆனால் இந்த முறை சுற்றுப்பயணமானது இந்திய கிரிக்கெட்டின் கடினமான காலகட்டத்தில் வருகிறது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி என தொடர் தோல்வியிலிருந்து இந்திய அணி மீண்டு வருகிறது. எனவே, 2027 WTC சுழற்சியை பாசிட்டிவாக தொடங்க வேண்டுமானால், இங்கிலாந்தில் இதுவரை வென்றதே இல்லை என்ற வரலாற்றை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி மாற்றி மகுடம் சூட வேண்டும்.

அதற்கு 3 முக்கிய பிரச்னைகளை இந்தியா சரிசெய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறது..

1. நிலையான பந்துவீச்சு தாக்குதல் இல்லை..

2016-2021 காலகட்டமானது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொற்காலம் என்று கூறினால் பொய்யாகாது. இந்த காலகட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா முதலிய வெளிநாட்டு ஆடுகளங்களில் கூட அபாரமான வெற்றிகளை பதிவுசெய்தது. அதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட் வலுவானதாக இருந்தது.

பும்ரா
பும்ராweb

ஆனால் கடைசி இரண்டு WTC சுழற்சிகளில் பந்துவீச்சு தாக்குதலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. கடைசியாக தோற்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் கூட பும்ராவை மட்டுமே இந்தியா பெரிதாக நம்பியிருந்தது, அவரை தவிர வேறு எந்த பவுலரும் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தவில்லை. முகமது ஷமி காயத்தால் பங்கேற்க முடியாது போனது ஒரு காரணமாக இருந்தாலும் மற்ற பவுலர்கள் சிறப்பாக வீசியிருந்தால் இந்தியா ஆஸ்திரேலியாவை 3வது முறையாக வீழ்த்தி வெற்றியை ருசித்திருக்கும்.

முகமது ஷமி
முகமது ஷமிpt web

முகமது ஷமி போன்ற அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரின் காயம், பும்ராவிற்கு அதிக்கப்படியான வேலைப்பளு, ஃபிட்னஸ் பிரச்னை என்பதையெல்லாம் கடந்து, ரவிச்சந்திரன் அஸ்வின் என்ற ரெட்-பால் கிரிக்கெட்டின் ஜாம்பவான் ஓய்வை அறிவித்திருப்பது பந்துவீச்சு தாக்குதலில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஜடேஜாவும் அவருடைய கடைசிநேர கிரிக்கெட் பயணத்தில் இருப்பது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வின்
அஸ்வின்

எதிர்காலத்தில் யார் இந்தியாவின் முதல் தேர்வு சுழற்பந்து வீச்சாளர் என்பதில் தொடங்கி, பும்ரா-ஷமிக்கு பிறகு யார் வேகப்பந்துவீச்சை தாங்கிப்பிடிக்க போகிறார்கள் என்ற பல கவலைகள் இந்திய கிரிக்கெட்டை சூழ்ந்துள்ளன. இவற்றையெல்லாம் விரைவில் சரிசெய்யவேண்டிய இடத்தில் இந்தியா இருந்துவருகிறது.

2. நம்பர் 3.. நம்பர் 4 பேட்டர் யார்?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது என்றால், அதற்கு முக்கிய காரணமாக நம்பர் 3 மற்றும் நம்பர் 4 பேட்டிங் பொசிஷனில் விளையாடிய தலைசிறந்த வீரர்கள் காரணமாக இருந்துள்ளனர். அணி சரிவை நோக்கி செல்லும்போது மீட்டு எடுத்துவரும் தூண்களாக நம்பர் 3 மற்றும் நம்பர் 4 பேட்ஸ்மேன்களே இருந்துள்ளனர்.

இந்த இரண்டு பொசிஷன்களில் கடந்த பல ஆண்டுகளாக சச்சின் டெண்டுல்கர், சட்டீஸ்வர் புஜாரா மற்றும் விராட் கோலி போன்ற தலைசிறந்த வீரர்கள் அதிகப்படியான ரன்களை குவித்துள்ளனர். இந்த சூழலில் அடுத்த நம்பர் 3 மற்றும் நம்பர் 4 பேட்ஸ்மேன்கள் யார்? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

புஜாரா - கோலி
புஜாரா - கோலி

தற்போது அந்த பொசிஷனுக்கு கேஎல் ராகுல், கருண் நாயர் என்ற இரண்டு திறமையான வீரர்கள் இருந்தாலும், யாருக்கு எந்த இடத்தை உறுதிசெய்யப்போகிறார்கள் என்ற குழப்பம் நீடித்துவருகிறது. கேஎல் ராகுலுக்கு ஒரு நிரந்தர இடம் வழங்காமல் அவருடைய திறமையை பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வீணடித்துவருகிறது. அவர் எந்த இடத்தில் ஆடப்போகிறார் என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

கேஎல் ராகுல்
கேஎல் ராகுல்

சமீபத்தில் பேசியிருந்த ரிக்கி பாண்டிங் கேஎல் ராகுல் நம்பர் 3, சுப்மன் கில் நம்பர் 4 மற்றும் கருண் நாயர் நம்பர் 5-ல் விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தியா இந்த பிரச்னையை எப்படி விரைவில் சரிசெய்யப்போகிறது என்ற கவலை எழுந்துள்ளது.

3. கேப்டன்சி + ரன்கள்.. அதிக மேட்ச் வின்னர்கள்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை விராட் கோலிக்கு முன், பின் என்று எளிதாக பிரித்துவிடலாம். விராட் கோலி கேப்டன்சிக்கு முன்புவரை ஓரிரு வீரர்களை மட்டுமே நம்பியிருந்த இந்திய அணியில், பல மேட்ச் வின்னர்கள் உருவானார்கள். அதில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் என இரண்டு பக்கமும் சரிசமமான மேட்ச் வின்னர்கள் இருந்தனர்.

அதற்கும் மேல் ஸ்லெட்ஜிங், மோதல் எல்லாவற்றையும் கடந்து இந்திய அணி ரன்களை குவிப்பதில் ஒருபோதும் பின்தங்கியதில்லை. ஒரு அணி நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டுமானால் உங்கள் கேப்டனிடமிருந்து ரன்கள் வரவேண்டும் என சமீபத்தில் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். விராட் கோலி செய்ததை போல, சுப்மன் கில்லும் கேப்டன்சி உடன் ரன்களையும் குவிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்Twitter

இளம் வீரர்கள், மூத்தவீரர்கள் என அனைவரும் மேட்ச் வின்னர்களாக மாறினால் தான் இந்தியாவால் 2027 WTC சுழற்சியிலேயே நல்ல முன்னேற்றத்தை காண முடியும். அதற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சுப்மன் கில் போன்ற வீரர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கப்போகிறது.

இந்தியா இந்த 3 பிரச்னைகளை எவ்வளவு விரைவில் சரிசெய்து வெற்றிப்பாதைக்கு திரும்பப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com