சீசன் முழுதும் மரணபயம் காட்டிய கெயில்.. 3 பந்தில் சம்பவம்செய்த அஸ்வின்.. CSKக்கு மறக்க முடியாத நாள்!

ஐபிஎல்லில் அதிரடி பேட்டிங் என்றால் பலருக்கும் பலரது பெயர் ஞாபத்திற்கு வரலாம். ஆனால் ‘Universe Boss’ க்றிஸ் கெயில் என்று சொல்லுவோர் யாருக்கும் ஐபிஎல் 2011 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசன் ஞாபகத்திற்கு வராமல் இருக்காது.
csk vs rr
csk vs rrPT

‘Universe Boss’ க்றிஸ் கெயில்

ஐபிஎல்லில் அதிரடி பேட்டிங் என்றால் பலருக்கும் பலரது பெயர் ஞாபத்திற்கு வரலாம். ஆனால் ‘Universe Boss’ க்றிஸ் கெயில் என்று சொல்லுவோர் யாருக்கும் ஐபிஎல் 2011 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசன் ஞாபகத்திற்கு வராமல் இருக்காது. ஏனென்றால் god of massஆக ஒவ்வொரு பந்து வீச்சாளரையும் துவம்சம் செய்து கொண்டிருந்தார் கெயில்.

2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாட ஆரம்பித்த கெயில், பின் 2011 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடினார். பெங்களூரு அணிக்கு மாறியபின் முதல் 4 போட்டிகளில் கெயில் களமிறக்கப்படவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக தில்ஷனும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். நான்கு போட்டிகளிலும் ஒருவர் ரன்களை அடித்தால் மற்றொருவர் வேகமாக வெளியேறுவதும், அல்லது இருவரும் அவுட்டாகி வெளியேறும் நிலை மட்டுமே தொடர்ந்தது. இதில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி வேறு மழையால் கைவிடப்பட்டிருந்தது.

முதல் போட்டியிலேயே சதம்

இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான 24 ஆவது லீக் போட்டியில்தான் கெயில் களமிறக்கப்பட்டார். அது பெங்களூரு அணிக்கு 6ஆவது போட்டி. கொல்கத்தா நிர்ணயித்த 175 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிய கெயில் 55 பந்துகளில் சதமடித்து அசத்தினார். தனது பழைய அணிக்கு எதிராக, புதிய அணியான பெங்களூருவுக்காக முதல் போட்டியிலேயே சதம். அவருடன் தில்ஷன், பின் விராட் என நல்ல பார்ட்னர்ஷிப் அமைய பெங்களூரு அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 175 ரன்களை எடுத்து 18.1 ஓவர்களிலேயே வெற்றி பெற்றது.

csk vs rr
India Head Coach| “தோனி வந்தால் சிறப்பாக இருக்கும்..” - குறிவைக்கும் விராட் கோலியின் குரு!

அதிரடியில் மிரட்டிய கெயில்

அடுத்து டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா என தான் சந்தித்த அடுத்தடுத்த போட்டிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினார் கெயில். பின் பெங்களூரு அணி தனது 47 ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 205 ரன்களை குவித்தது. ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும் நங்கூரமாக நின்ற கெயில் எதிரணி பந்துவீச்சாளர்களை ஓடவிட்டார். 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதில் 10 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் அடக்கம். அந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய கெயில் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து தினேஷ் கார்த்திக் உட்பட 3 முக்கிய விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்.

அடுத்த போட்டி கொச்சி டஸ்கர்ஸ் உடன். கொச்சி அணியோ பெங்களூரு பந்துவீச்சில், கிட்டத்தட்ட சிதைந்தேவிட்டது. 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது. க்றிஸ் கெயிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் கெயில் 16 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 44 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அந்த போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 275. 13 ஓவர்களிலேயே பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணியை வெல்ல வேண்டுமானால் க்றிஸ் கெயிலைத் தாண்டித்தான் வெல்ல வேண்டும் என்ற நிலை உண்டானது. ஏனெனில் சுவராக பெங்களூருவை காத்து நின்றார் கெயில்.

csk vs rr
உலகக்கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் இந்திய வீரர்.. ரிக்கி பாண்டிங் சொல்வதென்ன?

வேகத்திற்கு வந்த வேகத்தடை

ராஜஸ்தான் உடன் 44 பந்துகளில் 70 ரன்கள், பின் மீண்டும் கொல்கத்தா அணியை எதிர்கொண்டு 12 பந்துகளில் 38 ரன்கள் என துவம்சம் செய்தார் கெயில். எத்தனை வேகமாக போனாலும் வேகத்தடைகளும் அவ்வப்போது வரத்தானே செய்யும். பஞ்சாப் உடனான போட்டியில் டக் அவுட். ரியான் ஹாரிஸ் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் கெயில். பஞ்சாப்பிற்கு ஒரு ராசி உண்டு. ஒரு சீசன் முடிவில் கோப்பை வெல்லும் அணியோ அல்லது சாதரணமாக வெல்ல முடியாத அணியோ, அந்த அணி அந்த சீசனில் பஞ்சாப்பிடம் தோற்றிருக்கும். இது 2011 சீசனிலும் நடந்தது. சென்னை அணியும் பஞ்சாப்பிடம் அந்த சீசனில் தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 69 ஆவது லீக் போட்டியில் எதிர்கொண்டு, அதிலும் 50 பந்துகளில் 75 ரன்களை எடுத்து அசத்தலாக வெற்றியை தேடித்தந்தார் கெயில். மீண்டும் குவாலிபயர் 1 போட்டியில் சென்னையை எதிர்கொண்டது பெங்களூரு அணி. இம்முறை சென்னைக்கு மிஸ் ஆகவில்லை. ஆபத்தான கெயிலை 8 ரன்களிலேயே வெளியேற்றினார் அஸ்வின். ஆனால் அந்த போட்டியில் விராட் நின்று 70 ரன்களை அடித்துக் கொடுத்தார் என்றாலும், சென்னையில் ‘சின்ன தல’ ரெய்னாவின் ஆட்டத்தால் சென்னை அணி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த போட்டியில் ரெய்னா 50 பந்துகளில் 73 ரன்களை எடுத்திருந்தார்.

csk vs rr
“நீங்க ஒரு ஜோக்கர்..” கோலி குறித்து சர்ச்சை பேச்சு! நேரலையில் ராயுடுவை அசிங்கப்படுத்திய பீட்டர்சன்!

பல்தான்ஸை அடித்து நொறுக்கிய கெயில்

அடுத்து குவாலிஃபயர் 2ல் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது பெங்களூரு. பல்தான்ஸை இறக்கம் காட்டாமல் அடித்து நொறுக்கினார் கெயில். 47 பந்துகளில் 89 ரன்களைக் குவித்து 189 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இருந்தார் கெயில். பந்துவீச்சிலும் அசத்திய அவர் 3 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அந்த போட்டியில் பெங்களூரு வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப் போட்டிக்கு, முன்பே சென்று காத்திருந்த சென்னை மீண்டும் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 205 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக முரளி விஜய் 52 பந்துகளில் 95 ரன்களை எடுத்திருந்தார். பெங்களூரு அணியில் 4 ஓவர்களை வீசிய கெயில் 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்.

CSK vs RCB இறுதிப்போட்டி

சாதாரணமான லீக் போட்டிகளிலேயே எதிரணியை கொன்று புதைத்தவர். அப்போது நடந்தது ஃபைனல். என்ன செய்ய காத்திருக்கிறாரோ என்ற பயம் அனைத்து ரசிகர்கள் மனதிலும் இருந்தது. ஏற்கனவே லீக் போட்டியில் வாங்கிய அடி வேறு ஞாபகத்திற்கு வந்தது. ஒரே ஆறுதல் அவர் அஸ்வினுக்கு எதிராக தடுமாறி இருப்பதும், ஏற்கனவே அவரிடம் விக்கெட்டை இழந்திருந்ததும் தான். எனவே இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசினார் அஸ்வின். வகுத்த திட்டத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது. மூன்றே பந்துகளை எதிர்கொண்டு தோனியிடம் கேட்ச் ஆனார் கெயில்.

பந்து வீச்சாளர்கள் பார்த்து நடுங்கிக் கொண்டிருந்த பேட்ஸ்மேன் ஒருவரை முதல் ஓவரிலேயே வெளியேற்றினார் அஸ்வின். கெயில் விக்கெட் வீழ்ந்ததும் மைதானத்தில் அப்படியொரு கொண்டாட்டம். அந்த கொண்டாட்டம் சொல்லும் கெயில் விக்கெட் எவ்வளவு முக்கியமானது என்று. கெயில் விக்கெட்டிற்கு பிறகு பெங்களூரு அணிக்கு திவாரி ஆட்டம் தவிர்த்து சொல்லும்படியாக எதுவும் இல்லை.

அந்த போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. கோப்பையை முத்தமிட்டது சென்னை அணி. அஸ்வின் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

csk vs rr
'KKR கோப்பை வென்றிருக்கலாம்.. ஆனால் நாம்தான்' தோற்ற SRH வீரர்களிடம் நம்பிக்கையாக பேசிய காவ்யா மாறன்!

சென்னை அணிக்கு மறக்க முடியாத கோப்பை

2011 ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்காக தாமதமாகவே பேட் செய்ய வந்தார் கெயில். ஆனால் ஒவ்வொரு போட்டியையும் பசுமரத்தாணி போல் பதியச் செய்தார். 12 போட்டிகளில் 2 சதம் 3 அரைசதம் என 608 ரன்களைக் குவித்தார் கெயில். அவரது சராசரி 67.55. அவரது ஐபிஎல் கேரியரில் அதுவே அதிகபட்ச சராசரி. அந்த தொடரில் மட்டும் 57 பவுண்டரிகளையும் 44 சிக்சர்களையும் விளாசி இருந்தார். 2011 ஆம் ஆண்டு ஐபிஎல்லின் தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார்.

நிச்சயமாக, இறுதிப் போட்டியில் க்றிஸ் கெயில் சற்றே நின்று ஆடி இருந்தால், சென்னைக்கு தற்போது ஒரு கோப்பை குறைந்திருக்கும் என்றே சொல்லலாம். ஆனால் துல்லியமாக வெளியேற்றினர் சென்னை அணியின் வீரர்கள். எப்படி இருந்தாலும் கெயில் அந்த தொடர் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு காட்டிய பயத்தை மறக்கவோ, மறுக்கவோ முடியாது என்பது மட்டும் உண்மை.

சென்னை அணி 2010-ஐ தொடர்ந்து 2011-ல் கோப்பை வென்று அடுத்தடுத்து கோப்பை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றது சிஎஸ்கே. கேப்டனாக உச்சத்தில் இருந்தார் தோனி. சிஎஸ்கேவுக்கு மட்டுமல்ல இறுதிப் போட்டிவரை சென்று கோட்டை விட்ட ஆர்சிபி அணிக்கு அந்த நாள் மறக்க முடியாத நாள் தான்.

csk vs rr
நியூயார்க் சென்றடைந்த இந்திய அணி.. வேறு நாட்டில் தனிமையில் விடுமுறையை கழிக்கும் ஹர்திக்.. பின்னணி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com