தேவாலயத்தில் பிரார்த்தனையா!! திருப்பதி கோவில் ஊழியர் மீது பாய்ந்த நடவடிக்கை! ஏன் தெரியுமா?
செய்தியாளர் - வைஜெயந்தி.எஸ்
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஆயிரக்கணக்கில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். அப்படி ஒரு சிலர் வேற்று மதங்களை சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களின் பெயர்களும் இந்து மதத்தவர் போலவே இருகும். ஆனால் அவர்கள் வேற்று மதத்தை குறிப்பாக கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் தேவஸ்தானத்தில் பணியாற்றுபவர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. இந்த நிலையில் இந்துக்கள் அல்லாதோர் சுமார் 20 பேர் தேவஸ்தானத்தில் பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவிர மேலும் ஏராளமான இந்துக்கள் அல்லாததோர் கடைநிலை ஊழியர்களாகவும் ஒப்பந்த ஊழியர்களாகவும் பணியாற்றுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
அப்படி இருப்பவர்களில் ஒருவர்தான் ராஜசேகர் பாபு. இவர் தேவஸ்தானத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இப்படி தேவஸ்தானத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளம், குடியிருப்பு வசதி, போக்குவரத்து வசதி, குழந்தைகளுக்கு கல்வி கட்டணம், இலவசமாக தரமான மருத்துவ வசதி, உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுக்கிறது.
ஆனால் ராஜசேகர் பாபு கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர் ஆவார். அதனால் இவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது சொந்த ஊரான புத்தூரில் உள்ள தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனைகளில் கலந்து கொண்டுள்ளார். அப்படி அவர் தேவாலயம் சென்று பிரார்த்தனை செய்யும் வீடியோ தேவஸ்தானத்தின் கவனத்திற்கு வந்ததாகவும் அதனை தேவஸ்தான அதிகாரிகள் கண்டித்தும் அவர் அதை கேட்காததால் கோவில் நிர்வாகத்திற்கு விஜிலென்ஸ் துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, சேகர் பாபுவை பணியிடை நீக்கம் செய்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தேவஸ்தானத்தில் பணியாற்றும் இந்து அல்லாத அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு விருப்ப ஓய்வு அல்லது அரசு துறைகளுக்கு மாற்றம் ஆகிய ஏதாவது ஒன்றை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவுகளை மேற்கொண்டது. ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் இங்கேயே வேலை செய்வோம் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.