திருப்பதிக்கு போக பிளான் இருக்கா? அப்போ கண்டிப்பாக இதை தெரிஞ்சுக்கோங்க..!
செய்தியாளர் - Vaijayanthi S
இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் திருப்பதி கோயிலும் ஒன்று. இங்கு தினமும் பல லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இங்கு ஏழு மலைகள் உள்ளது. அதனால் திருப்பதி வெங்கடாஜலபதி ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார். இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும். இங்கு கிடைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ் கல்வெட்டுகளாகும்..
இத்தகைய உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் கருடசேவை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்... அதே போல இந்த மாதம் ( ஜீலை 2025) கருட சேவை தரிசனம் நடைபெறவுள்ளது. ஆனால் ஜீலையில் நடைபெறும் கருட சேவை சற்று சிறப்பு வாய்ந்தது. காரணம் 2 முறை நடைபெறவுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் முன்கூட்டியே டிக்கெட்களை முன்பதிவு செய்துக் கொள்ளுமாறு தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கருட சேவை என்றால் என்ன?
கருட சேவை என்பது வைணவ கோயில்களில் பிரம்மோத்ஸவத்தின் போது, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்வாகும். இது ஆலய வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. கருட சேவை என்பது, பெருமாள் பக்தர்களைக் காக்க கருட வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், புண்ணியத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது.
கருட சேவையின் முக்கியத்துவம்
கருட சேவை, வைணவ சம்பிரதாயத்தில் மிகவும் புனிதமான ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் கருட சேவையின் போது பெருமாளை தரிசிப்பதால், அவர்களின் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
கருட சேவை, பக்தர்களின் துயர் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்க வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது.
மேலும் கருட சேவையின் போது திருமாலின் இரு திருவடிகளையும் கருடன் தன் இரு கரங்களால் தாங்கி வருவதாக ஐதீகம். இந்த தரிசனம், பெருமாளின் கருணையையும், பக்தியின் சிறப்பையும் உணர்த்துவதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கருட சேவை திருவரங்கம், காஞ்சிபுரம், திருப்பதி போன்ற வைணவ தலங்களில் நடைபெறுகிறது.
நவதிருப்பதிகள், திருநாங்கூர், திருநாராயணபுரம் போன்ற இடங்களிலும் கருட சேவை நடத்தப்படுகிறது. திருப்பதியில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கருட சேவை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
இரண்டுமுறை கருட சேவை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாதம் இருமுறை கருட சேவை நடைபெற உள்ளது. அதன்படி ஆனிவார ஆஸ்தான உற்சவத்தின் போது பௌர்ணமியன்று வரும் 10ம் தேதியும், கருட பஞ்சமியையொட்டி வரும் 29ம் தேதியும் மலையப்ப சுவாமியான ஏழுமலையான் கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இந்த நிகழ்வு இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது. 108 வைணவ திருத்தலத்தில் கருட வாகன சேவை சிறப்பு வாய்ந்தது.. அதேபோன்று ஏழுமலையான் கோயிலிலும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் புதுமண தம்பதிகள் இந்த கருட சேவையை பார்த்து அருள் பெற்றால் வாழ்க்கை மகிழ்வாக இருக்கும். பிறக்கும் குழந்தையும் கருடனைபோல் வலிமையாக இருக்கும் என்பது நம்பிக்கை.
2025 ஆம் ஆண்டு கருட சேவை நடைபெறும் நாட்கள்
1. 12-05-2025 - திங்கள்
2. 10-07-2025 - வியாழன்
3. 09-08-2025 - சனி
4. 07-10-2025 - செவ்வாய்
5. 05-11-2025 - புதன்
கருட சேவை ரத்து செய்யப்படும் தேதிகள் மற்றும் காரணங்கள்
1. 11-06-2025 புதன் - ஜேஷ்டாபிஷேகம் (மூன்றாம் நாள்). ஜேஷ்டாபிஷேகம் என்பது வருடாந்திர அபிஷேகம். இது ஜூன் மாதத்தில் நடைபெறும்.
2. 07-09-2025 ஞாயிறு - சந்திர கிரகணம். சந்திர கிரகணம் அன்று கருட சேவை ரத்து செய்யப்படுகிறது.
3. 04-12-2025 வியாழன் - கார்த்திகை தீபோற்சவம். கார்த்திகை தீபத் திருவிழாவின்போது கருட சேவை ரத்து செய்யப்படுகிறது.
மாதந்தோறும் பெளர்ணமி நாளில் கருட சேவை உற்சவம் நடைபெற்றாலும் சில முக்கிய மற்றும் விசேஷ நாட்களில் கருட சேவை ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த வருடம் (2025) ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் மட்டும் பெளர்ணமி கருட சேவை திருமலையில் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, பக்தர்கள் இந்த தேதிகளை கவனத்தில் கொண்டு திருப்பதி தரிசனத்திற்கு பிளான் பண்ணுவது நல்லது..