சுந்தரமூர்த்தி நாயன்மாரின் வாழ்க்கை வரலாறு - ஈசனின் சாபமும் சுந்தரரின் அவதார நோக்கமும்!

“அம்மா சற்று பொறுங்கள். முதலில் உங்கள் குழந்தையை விழுங்கிய அந்த முதலை இருக்கும் குளத்தை காட்டுங்கள்” என்று கூறியதும், அவர்கள் சுந்தரருடன் அக்குளத்திற்கு சென்றனர்.
சுந்தரரின் வரலாறு
சுந்தரரின் வரலாறுPT

இதுவரை...

சிவபெருமான் ஒரு வயோதிக சிவதொண்டராக வந்து சுந்தரருக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தி அவரை ஆட்கொள்ளல் செய்தார்.

சுந்தரர் பரவை நாச்சியாரை திருமணம் செய்து பிறகு சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்துக்கொண்டார்.

சிவபெருமானின் கோபத்தால் இருகண்களை பறிகொடுத்த சுந்தரருக்கு, சிவபெருமானே கண்களை தந்து அவரை பரவை நாச்சியாருடன் சேர்த்தும் வைக்கிறார்.

இனி...

சுந்தரபாண்டியன் நாட்டில் உள்ள பல திருத்தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டார் சுந்தரர். அங்கு மலைநாட்டை ஆண்டு கொண்டிருந்த சிவபக்தியில் சிறந்த மன்னன் சேரமான் பெருமாளுடன் சுந்தரருக்கு நட்பு ஏற்பட வழிவகை செய்தார் சிவபெருமான்.

சிறிது நாட்களிலேயே சேரமானுக்கு சுந்தரர் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். சுந்தரர் திருவாரூர் செல்ல தீர்மானித்த சமயம் சேரமான் தன் தோழருக்கு நிறைய பொன்னையும் பொருளையும் தந்தார்.

ஒரு சமயம் திருப்புக்கொளியூர் என்ற ஊரில் ஆலய தரிசனத்திற்காக வந்த சுந்தரருக்கு, ஒரு தெருவில் எதிரெதிரே இருந்த இரு வீடுகளில் ஒரு வீட்டில் மங்கள வாத்தியமும் எதிர் வீட்டில் அழுகுரலும் கேட்டது. என்னவாக இருக்கும் என்று அறிந்துக்கொள்ள மங்கள வாத்தியம் ஒலித்த வீட்டிற்குச் சென்றார். அவ்வீட்டில் இருக்கும் பாலகனுக்கு உபநயனம் நடந்துக்கொண்டிருந்தது. “ஓ.. அதனாலதான் மங்கள வாத்தியமா...?” என்று நினைத்தவர், மறுவீட்டில் என்ன நடந்து வருகிறது என்பதை தெரிந்துக்கொள்வதற்காக அழுகுரல் கேட்ட வீட்டை அடைந்து விஷயத்தைக் கேட்டார்.

“போன வருடம் எனது பாலகனை முதலையானது முழுங்கிவிட்டது. அவன் நினைவாக அழுதுகொண்டு இருக்கிறோம். இருப்பினும் நீங்கள் சிவனடியார். எங்கள் இல்லம் தேடி வந்து இருக்கிறீர்கள். ஆகவே... அமுது உண்ணாமல் நீங்கள் செல்லல் ஆகாது“ என்றனர். தொடர்ந்து அவர்கள் கவலைகளை துறந்து சுந்தரருக்கு விருந்து படைக்க முற்பட்டனர்.

இக்காட்சி சுந்தரரின் மனதை தொட்டது.

“ அம்மா சற்று பொறுங்கள். முதலில் உங்கள் குழந்தையை விழுங்கிய அந்த முதலை இருக்கும் குளத்தை காட்டுங்கள்” என்று கூறியதும், அவர்கள் சுந்தரருடன் அக்குளத்திற்கு சென்றனர். அங்கு சென்ற சுந்தரர், சிவபெருமானை நினைத்து சிவ பஞ்சராக்‌ஷம் பதிகம் பாடி குழந்தையை அழைத்தார். இறந்து போன பாலகன் ஓர் ஆண்டில் எவ்வளவு வளர்ச்சி பெற்று இருப்பானோ அதே பருவத்தில் முதலையின் வாயிலிருந்து வெளிவந்தான். அவனது பெற்றோர்கள் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள். சுந்தரரை வணங்கி ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

இச்செய்தி மலை நாட்டு மன்னர் சேரமான் காதிலும் விழுந்தது. சுந்தரர் வரவிற்காக சேரமானும் காத்திருந்தார். ஒருநாள் சுந்தரரை தேடி சேரமான் சென்ற சமயம், சுந்தரரை காணவில்லை. சுந்தரர் திருவஞ்சை களத்தியப்பனை வணங்க சென்றிருப்பதாக சிலர் கூறினர். அங்கு சென்று சுந்தரரை தரிசிக்கலாம் என்று எண்ணிய சேரமான் தனது குதிரையில் ஏறி புறப்பட்டார். அங்கு அவர் கண்ட காட்சியானது யாருக்கும் கிட்டாத ஒன்றாக இருந்தது.

ஆம், சுந்தரரை அழைத்துச்செல்ல, திருக்கயிலையிலிருந்து கணங்கள் சூழ ஒரு வெள்ளை யானை வந்திருந்தது. அது, சுந்தரரை தன் முதுகில் ஏற்றி பறந்து சென்றது. இதை கண்ட சேரமானுக்கு மெய்சிலிர்த்தது.

சுந்தரரை விட்டு பிரிய மனமில்லாத சேரமான் சுந்தரரை தொடர்ந்து செல்ல தீர்மானித்து தனது குதிரையின் காதில் சிவபஞ்சாட்சர மந்திரத்தை சொன்னார். உடனே சுந்தரரை ஏற்றி சென்ற யானையைத் தொடர்ந்து அவர் குதிரையும் சென்றது. இறுதியில் இருவரும் கைலாசத்தை அடைந்தனர். சிவபெருமான் முன் வந்து நின்று வணங்கினர். சுந்தரர் சிவபெருமானை வணங்கி, “பெருமானே என் மீது உள்ள அன்பினால் சேரமானும் என்னுடன் வந்து விட்டார்” என்றார். சுந்தரரை தனக்கு பணிபுரியவும் சேரமானை பூத கணங்களுக்கு தலைவனாக்கியும் அருள்புரிந்தார் ஈசன்.

சுந்தரரின் அவதார காரணம்:

அதன்படி சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கைலாயத்தில் சிவபெருமானுக்கு திருப்பணி புரியும் ஆலாலசுந்தராய் இருந்தார். ஒருநாள் கைலாய தோட்டத்தினுள் சென்ற சுந்தரனார் அங்கே பார்வதி தேவியின் தோழியரான கமலினி அநிந்திதை என்ற இரு கன்னிகரை கண்டதும் மனதில் சிறிது சலனம் கொண்டார். இதை அறிந்த சிவபெருமான் சுந்தரரை நோக்கி, “பெண் மீதான காமத்தை நீ கடந்தாக வேண்டும். அதனால் பூமியில் பிறந்து காமம் தணிந்து வருவாயாக” என்றார்.

இதைக்கண்டு மனம் கலங்கிய சுந்தரரோ ”நான் பூமியில் பிறந்து பூலோக ஆசைகளில் சிக்கிக் கொள்ளும் பொழுது நீ என்னை தடுத்தாட்கொள்ள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். அதன்படியே செய்வதாக சிவபெருமானும் வாக்களித்தார்.

அதனால் தான் சுந்தரருக்கு வாக்களித்தபடியே திருமண பந்தத்தில் சிக்கிக் கொள்ள இருந்தவரை தடுத்தாட்கொண்டாராம் ஈசன். பின் கமலினியையும் அநிந்திதையையும் பரவைநாச்சியாராகவும் சங்கிலி நாச்சியாராகவும் அவதரிக்க வைத்து, அவர்களை சுந்தரருடன் இல்லறத்தில் ஈடுபட செய்தார். பின் மீண்டும் பிறவாதபடியே கையிலையில் தன்னுடன் அணைத்து கொண்டார்.

சுந்தரரின் வரலாறு
“இதுவும் உன் விளையாட்டு என்றால், நான் என்ன செய்ய...?” சுந்தரமூர்த்தி நாயன்மாரின் வாழ்க்கை வரலாறு

நேயர்களே இத்துடன் சுந்தர நாயனாரின் வரலாறு முடிந்தது. நாளை வேறொரு நாயனாரின் வரலாற்றுடன் சந்திப்போம்.

சுந்தரமூர்த்தி நாயன்மாரின் வாழ்க்கை வரலாறு முந்தைய பகுதிகள்...

சுந்தரரின் வரலாறு
மீண்டும் மீண்டும் ஈசனின் திருவிளையாடல்.. பக்தியில் யாருக்கும் சளைக்காத சுந்தரமூர்த்தி நாயன்மார்!
சுந்தரரின் வரலாறு
”நீ என் அடிமை..” திருமணத்தை நிறுத்திய சிவனடியார்! சிலிர்க்க வைக்கும் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு!
சுந்தரரின் வரலாறு
“இதுவும் உன் விளையாட்டு என்றால், நான் என்ன செய்ய...?” சுந்தரமூர்த்தி நாயன்மாரின் வாழ்க்கை வரலாறு
சுந்தரரின் வரலாறு
‘என் நண்பனுக்கு தீங்கு செய்பவர்கள் யாவரும்...’ சுந்தரருக்காக சிவனடியார் மீதே கோபம் கொண்ட ஈசன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com