”நீ என் அடிமை..” திருமணத்தை நிறுத்திய சிவனடியார்! சிலிர்க்க வைக்கும் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு!

சிவபெருமானின் திருவிளையாடலோ வேறுவிதமாக இருந்தது. நம்பியின் திருமணத்தை தடுத்து நிறுத்தை அவரை தடுத்தாட்கொள்ள நினைத்தார்.
சுந்தரர்
சுந்தரர்சைவசமயகுரவர்

வைணவத்தில் பெருமாளுக்கு பாசுரங்களை இயற்றியதில் ஆழ்வார்களும், சைவத்தில் ஈசனின் மேல் பாடல்களை இயற்றியதில் நாயன்மார்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இதில் நாயன்மார்கள் 63 உள்ளனர். அதில் நாம் இன்று சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களின் சரித்திரத்தை காணப்போகிறோம்.

யார் இந்த சுந்தரமூர்த்தி இவரின் சரித்திரம் தான் என்ன?...

திருநாவலூரில் ஆதிசைவர் குலத்தில் பிறந்தவர் நம்பியாரூரார். குழந்தையாய் இருக்கும்பொழுதே தெய்வ அம்சம் பொருந்தியவராய் இருந்தார். இவர் தாய் தந்தையர் சிவபக்தர்கள். திருமுனைப்பாடி நாட்டை ஆண்டுவந்த நரசிங்கமுனையார் என்ற அரசருக்கு குழந்தைபாக்கியம் இல்லாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். அச்சமயம் ஒரு முறை குழந்தை நம்பியாரூராரை அரசர் காண நேர்ந்தது. குழந்தையின் தெய்வ அம்சம் பொருந்திய முகத்தைக் கண்டதும், அரசர் நரசிங்கமுனையரின் மனதானது மகிழ்சி அடைந்தது. அதனால் நம்பியாரூராரை தானே வளர்க்க ஆசைப்பட்டு, அவரது பெற்றோர்களிடம் கேட்கவே, அவர்களும் மனம் உகந்து நம்பியாரூராரை அரசரிடம் ஒப்படைத்தனர்.

அன்றிலிருந்து நம்பியாரூரார் அரசனின் குழந்தையாய் அரண்மனையில் வளர்க்கப்பட்டார். வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களை கற்று தேர்ந்தார். நம்பி திருமணவயதை எட்டியதும், நம்பிக்கு விவாகம் செய்துவைப்பதற்காக, புத்தூரில் வசித்து வந்த சடங்கவி என்ற சிவாச்சாரியரின் புதல்வியை மணம் செய்து வைக்க அவரது தந்தையார் ஏற்பாடு செய்தார்.

திருமணநாள் வந்தது. ஆனால் சிவபெருமானின் திருவிளையாடலோ வேறுவிதமாக இருந்தது. நம்பியின் திருமணத்தை தடுத்து நிறுத்தை அவரை தடுத்தாட்கொள்ள நினைத்தார்.

அதனால் சிவபெருமான் தான் ஒரு வயதான சிவனடியாரைப்போல் உருவத்தை மாற்றிக்கொண்டு கையில் ஒரு சிறிய ஓலையுடன் நம்பியின் திருமண வைபவத்திற்கு வந்தார். நம்பி யாரோ ஒரு சிவனடியார் தனது திருமணத்தை காண வந்துள்ளார் என்ற விவரம் அறிந்துக்கொண்டு அவரை வரவேற்று வணங்கினார்.

ஆனால், வந்த வயோதிக சிவனடியாரோ, “நம்பியாரூரா.. எனக்கு அடிமையான நீ.. என் அனுமதி இல்லாமல் எப்படி திருமணம் செய்துக்கொள்ள முடியும்? இப்பொழுதே இத்திருமணத்தை நிறுத்திவிட்டு என்னுடன் வா..” என்றார் .

“என்னது நான் உங்கள் அடிமையா.. என்ன பிதற்றுகிறீர்கள்? நான் உங்கள் அடிமை என்பதற்கு ஏதேனும் சாட்சி இருக்கிறதா?” என்றார்.

“சாட்சி தானே.. நீ கேட்பாய் என்று எனக்குத் தெரியும். இதோ நீ எனக்கு அடிமை என்று உன் பாட்டனார் எழுதி தந்த இந்த ஓலைதான் சாட்சி” என்று தன் இடுப்பில் இருந்த ஓலையை அங்கு கூடி இருப்பவர்கள் முன் காட்டினார். அதற்குள் அவசரப்பட்டு பாய்ந்து வந்த நம்பி அவ்வோலையை பறித்து கிழித்து எறிந்தார்.

“இப்பொழுது நான் உங்கள் அடிமை என்று எப்படி கூறமுடியும்” என்று கேட்டார் நம்பி

“நம்பி என் அனுமதி இல்லாமல் எனது ஓலையை பறித்து கிழித்த நீ எனக்கு அடிமை என்பது உறுதிபடுத்தபட்டு விட்டது. ஆனாலும் என்னிடம் வேறு ஓலை ஒன்று உள்ளது. அதை உனக்கு காட்டுகிறேன். அதனால் மறுப்பு ஏதும் சொல்லாமல் என்னுடன் நீ வந்தே ஆகவேண்டும்” என சிவனடியார், நம்பியை அழைத்துக்கொண்டு திருவெண்ணெய் நல்லூர் சிவ ஆலயத்திற்குச் சென்றார்.

“சிவனடியாரே.. நான் உன் அடிமை என்று பொய் உரைத்து, என் திருமணத்தை நிறுத்தி உன் இருப்பிடம் கூட்டி வந்த நீங்கள் என்னை என்ன செய்வதாக உத்தேசம்? ” என்றார் நம்பி.

“நம்பி நான் பொய் உரைக்கிறேனா?.. சற்று பொறு.. ” என்றவர், ஆலயத்திற்குள் சென்று வேறு ஒரு ஓலையை எடுத்து வந்து நம்பியிடம் காட்டினார். அதில் நம்பியின் பாட்டனார், கையெழுத்திட்ட அடிமை சாசனம் வரையப்பட்டிருந்தது தெரிந்ததும், நம்பி செய்வதறியாது திகைத்து நின்றார்.

கூட்டத்தினரும், “சரி நம்பியாரூரார், உங்களுக்கு அடிமை என்பதை நாங்களும் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் உங்களின் இருப்பிடம் தான் எது? என்று கேட்கவும் ,

“இருப்பிடம் தானே.. இதே இடம் தான்” என்று சிவனடியார் கருவறைக்குள் சென்று மறைந்தார்.

“பெரியவரே.. என்று அடிமை நம்பியும் அவர் பின்னால் கருவறை செல்லவும் அங்கு சிவனடியார் மறைந்து சிவபெருமானாக உமாதேவியருடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.

அக்காட்சியை கண்ட நம்பியாரூராருக்கு மெய்சிலிர்த்தது, பரமனை இருகரம் கூப்பி வணங்கினார். அவருக்கு முற்பிறப்பில் கைலாயத்தில் நடந்த நிகழ்ச்சி யாவும் நினைவில் வந்தது,

கைலாயத்தில் நம்பியாரூரானுக்கு நடந்த நிகழ்சிதான் என்ன? எதற்கு சிவபெருமான் வயதான சிவனடியாராக சென்று நம்பியாரூராரின் திருமணத்தை நிறுத்தவேண்டும்?... நாளை பார்க்கலாம். காத்திருங்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com