“இதுவும் உன் விளையாட்டு என்றால், நான் என்ன செய்ய...?” சுந்தரமூர்த்தி நாயன்மாரின் வாழ்க்கை வரலாறு
முதல் பாகம்...
இரண்டாம் பாகம்...
இவ்வாறு ஊர் ஊராக சிவபெருமான் மீது பதிகத்தை இயற்றியும் பாடல்களை பாடியும் திருவொற்றியூர் வந்து சேர்ந்தார் சுந்தரர்.
திருவொற்றியூரில் ஞாயிறு கிழவர் என்று ஒருத்தர் இருந்தார். அவருக்கு ஒரு புதல்வி உண்டு. அவரின் பெயர் சங்கிலியார். இவருக்கும் சிவபெருமான் மீது அதீத பக்தி.
சங்கிலியார் திருமண வயதை எட்டியதால் அவருக்கு மணம் முடித்து வைக்க அவரது தந்தை ஞாயிறு கிழவர் பல வரன்களை பார்த்தார். ஆனால் சங்கிலியார் தனது மனதுக்குள் ஒரு பிரக்ஞை கொண்டிருந்தார். அதாவது, தன்னைப்போல் சிவபெருமான் மீது பக்தி கொண்ட ஒருவரைதான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று. ஆதலால் சங்கிலியார் தனது தந்தை கொண்டுவந்த வரங்களில் சிவனடியாரை தேடினாள். அது இல்லாமல் போகவே அவர்களை மறுத்து வந்தாள். இந்நிலையில் சுந்தரர் திருவொற்றியூர் வந்தார். அங்கிருந்த ஆதிபுரீஸ்வரர் கோவிலில் தங்கி சிவனின் மேல் பாடல்களை இயற்றினார். அச்சமயம் சங்கிலியார் இவரின் மேல் காதல் கொண்டாள். அவரை மணக்க ஆசைப்பட்டார். சுந்தரருக்கும் சங்கிலியார் மேல் காதல் வந்தது. இவர்கள் இருவரின் மனதை அறிந்த சிவபெருமான் தனது விளையாட்டை ஆரம்பித்தார். சங்கிலியாரின் கனவில் தோன்றிய சிவபெருமான் “உன்னை சுந்தரர் மணக்க ஆசைகொண்டுள்ளான். ஆகவே நீ அவனை திருமணம் செய்துக்கொள்” என்றார்.
அதற்கு சங்கிலியாரோ “பெருமானே இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவரது மனைவி திருவாரூரில் இருக்கிறாளே... நான் இவரை மணம் செய்துக்கொண்டாள் இவர் என்னை விட்டு பிரிந்து சென்று விடுவாரே...” என்றார்.
அதற்கு இறைவன் “சுந்தரன் அவ்வாறு செய்யாமல் இருக்க நீ அவனிடம் உன்னை பிரிந்து போகாதபடி சத்தியம் வாங்கிக்கொள்” என்று கூறினார். சங்கிலியாரும் சம்மதித்தார். பிறகு சிவபெருமான் சுந்தரரின் கனவில் தோன்றி “நீ சங்கிலியாரின் மேல் வைத்த காதலை நான் அவளிடம் தெரிவித்தாகிவிட்டது. அவளும் உன்னை மணந்து கொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டாள். ஆனால் நீ அவளிடம் ‘உன்னை பிரிந்து போக மாட்டேன்’ என்று சத்தியம் செய்து தர வேண்டும்” என்று கூறினார்.
சுந்தரரும் இறைவனிடம் “இதுவும் உன் விளையாட்டு என்றால் உனக்கு முன் நான் என்ன செய்ய முடியும்....? நீ சொன்னது போல் சங்கிலியாருக்கு கோவிலின் கருவறையில் முன் சத்தியம் செய்து தருகிறேன். ஆனால், பெருமானே நீ அப்போது கருவறையை விட்டு அக்கோவிலில் உள்ள மகிழ மரத்தின் கீழ் வீட்டில் வீற்றிருக்க இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இறைவனும் சம்மதித்தார்.
ஆனால் நேராக சங்கிலியாரின் கனவில் சென்ற சிவபெருமான், “சுந்தரம் உன்னிடம் சத்தியம் செய்யும்போது மகிழ மரத்தின் கீழ் சத்தியம் செய்யும் படி கேட்டுக் கொள்” என்று கூறினார். சங்கிலியாரும் சம்மதித்தார்.
மறுநாள், சங்கிலியாரின் தோழிகள் சுந்தரரிடம் “சங்கிலியார் உங்களை மணம் புரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறாள். ஆனால் அவளுக்கு நீங்கள் நான் சங்கிலியாரை எப்பொழுதும் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து தரவேண்டும்” என்று கேட்டார்கள்.
சுந்தரரும்... “அதனால் என்ன...? சத்தியம் தானே! செய்து கொடுக்கிறேன்” என்றவர், கோவிலின் கருவறை முன் சத்தியம் செய்ய சென்றார். தோழிகளோ “இல்லை இல்லை ... நீங்கள் மகிழம் மரத்தின் அடியில் சத்தியம் செய்ய வேண்டும், என்று எங்கள் சங்கிலி நாச்சியார் கேட்கிறார்” என்றதும் சுந்தரருக்கு “நீலகண்டா... இது என்ன சோதனை உன் முன் சத்தியம் செய்ய வேண்டாம் என்று தானே நான் உன்னை மகிழம் மரத்தின் அடியில் இருக்கச்சொன்னேன்.... இப்பொழுது சங்கிலி நாச்சியார் என்னை மகிழம் மரத்தின் முன் சத்தியம் கேட்கிறாளே என்ன செய்வது....? ” என்று குழம்பினார். ஆனால் சிவனோ ... சிவனேனு பதில் ஏதும் கூறாமல் அமர்ந்திருந்தார். வேறு வழி இல்லாமல் சுந்தரரும் சங்கிலியாருக்கு, மகிழம் மரத்தின் முன் சத்தியம் செய்தார். சங்கிலியார் மனம் மகிழ்தார். சுந்தரருக்கும் சங்கிலியாருக்கும் திருமணம் நடைப்பெற்றது.
இருவரும் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்தினர். சில மாதங்கள் சென்றன... சுந்தரருக்கு திருவாரூர் நினைவு வந்தது. அவர் aங்கு செல்ல நினைத்ததால் சங்கிலியாரிடம் விடை பெற்றார். இறைவனின் தோழராக இருப்பினும் சத்தியம் தவறலாமா...? அதனால் சிவபெருமான் சுந்தரரின் இரு கண்களிலும் பார்வையை பறித்து விட்டார். சுந்தரர் கண் பார்வை இன்றி தவித்தப்பொழுதும் இறைவனிடம் தீரா பற்று வைத்திருந்தார். கண் பார்வை இன்றியே பல திருத்தலங்களுக்கு சென்று சிவபெருமானின் மேல் பாடல்கள் பாடி வந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு சுந்தரரின் மேல் கருணைக்கொண்ட சிவபெருமான், திருவெண்பாக்கம் என்னும் இடத்தில் சுந்தரருக்கு ஒரு ஊன்றுகோல் தந்தார். அதைப் பெற்றுக் கொண்டு பல தலங்களுக்கு சென்று பதிகங்கள் பாடி சிவபெருமானை வணங்கி வந்தார் சுந்தரர்.
அவ்வாறு காஞ்சி ஏகாம்பரநாதரை தரிசிக்க செல்கையில் சுந்தரருக்கு ஒற்றை கண்ணில் மட்டும் பார்வை வந்தது. பிறகு திருத்துறுத்தி என்னும் இடத்தில் மறு கண்ணிலும் பார்வை கிடைக்கப் பெற்றார். இவ்வாறு பயணம் செய்து இறுதியில் திருவாரூர் சென்றடைந்தார். ஆனால் பறவை நாச்சியார், சுந்தரர் சங்கிலியாரை திருமணம் செய்த செய்தி அறிந்து அவர் மீது கடும் கோபத்தில் இருந்தார்.
இதன் பிறகு என்ன நடந்தது என்பதை நாளை பார்ப்போம்.