இலக்கியங்கள், புராணங்கள் போற்றும்.. திருப்பரங்குன்றத்தின் வரலாறும் அதன் சிறப்புகளும்..!
முருகன் எனும் அழகன்..!
முருக வழிபாடு என்பது தமிழர் மரபில் தொன்று தொட்டு நீடித்துக் கொண்டிருப்பது. சங்க காலத்தைச் சேர்ந்த முருக வழிபாட்டுத்தலம் மாமல்லபுரம் புலிக்குகை அருகே சாளுவன் குப்பம் என்ற இடத்தில், சுனாமியின்போது வெளிப்பட்டது. இதன்மூலம் முருக வழிபாட்டின் தொன்மையும், தொடர்ச்சியும் நமக்கு விளங்கும். குன்றுதோறும் குமரன் இருப்பான். குமரன் குடியிருக்கும் இடங்களில் அவன் பக்தர்கள் இருப்பர். சங்ககாலம் தொடங்கி தற்போதைய காலம் வரை பன்னெடுங்காலமாக வழிபாட்டில் உள்ள கோயில் திருப்பரங்குன்றம்.
புராணங்கள் சொல்வதென்ன..
குரு இல்லாமல் பிரணவ மந்திரத்தை கேட்கக்கூடாது என்பார்கள். ஆனால், பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தபோது, பார்வதி தேவியின் மடியில் அமர்ந்திருந்த முருகன் பிரணவத்தின் பொருளை கேட்டார். குரு இல்லாமல் கற்ற குற்றத்திற்கு பரிகாரமாக திருப்பரங்குன்றத்துக்கு முருகப்பெருமான் வந்து தவமியற்றியதாக புராணம் கூறுகிறது. தவம் இயற்றிய மகனுக்கு பரங்கிநாதர்- ஆவுடைநாயகியாக சிவபெருமான், பார்வதி காட்சியளித்த இடமே திருப்பரங்குன்றம். இவ்வாறு காட்சி அளித்த, தை மாத பூச நட்சத்திர நாளில் இப்போதும் தைப்பூசத் திருவிழா பத்துநாட்கள் கொண்டாடப்படுகிறது.
தேவர்களை சிறைவைத்த சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை அழிக்க முருகப்பெருமான், வீரபாகு உள்ளிட்ட வீரர்களுடன், அண்டாபரணர், உக்கிரமூர்த்தி படையுடன் சஷ்டி நாளில் பார்வதி தேவியிடம் வேல் பெற்று, செல்கிறார். அந்த வேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்து ஆட்கொண்டு தேவர்களை மீட்கிறார் முருகப்பெருமான். அசுரர்களை அழித்து தேவர்களை காத்த முருகப்பெருமானுக்கு தனது மகளான தெய்வானையை இந்திரன் திருமணம் செய்வித்து தந்த தலமாக திருப்பரங்குன்றம் குறிக்கப்பெறுகிறது.
தெய்வானையை மணந்து அமர்ந்த கோலத்தில் எம்பெருமான் முருகன் காட்சியளிக்கிறார். திருமணத்தலம் என்பதால், அனைத்து மூர்த்திகளும் மகிழ்ச்சியான கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பு.
இலக்கியங்களில் திருப்பரங்குன்றம்
எந்த நேரமும் விழாக்கோலம் பூண்டிருக்கும் கூடல் நகரமாம் மதுரையும், அதன் அருகில் உள்ள திருப்பரங்குன்றமும் என சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. மதுரைக்கு மேற்கில் திருப்பரங்குன்றம் இருப்பதை “கொடி நுடங்கு மறுகிற் கூடல் குடா அது” என சங்க இலக்கியம் கூறுகிறது.
“கூடல் பதியின் மேற்கே ஒருபால் சுனையுடன் கூடிய குன்றில், முருகன் எழுந்தருளியுள்ளான்” என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார் . “பரங்குன்று இமயக்குன்றம் நிகர்க்கும்” என பரிபாடலில சல்லந்துவனாரும் திருப்பரங்குன்றத்தை குறிப்பிடுகிறார். பரிபாடல், திருமுருகாற்றுப்படை, அகநானூறு, கலித்தொகை மற்றும் மதுரைக்காஞ்சி ஆகிய இலக்கியங்களில் பாடப்பெற்றுள்ள தலமாக திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது.
திருப்பரங்குன்றத்துக்குத்தான் எத்தனை எத்தனை பெயர்கள் இருக்கின்றன. “தண்பரங்குன்று” என்று குறிக்கப்பட்டு பின் “தென்பரங்குன்று” என்றாகி இன்று “திருப்பரங்குன்றம்” என்று குறிபிடப்படுகிறது. “பரன்குன்று” என்பதன் சமஸ்கிருத வடிவம் பரங்கிரி. இதனால் இங்குள்ள இறைவன் பரங்கிரிநாதர். இதன் தொடர்ச்சியாக இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
திருப்பரங்குன்றமும், மன்னர்கள் தந்த முக்கியத்துவமும்..
திருப்பரங்குன்றத்தில் இரண்டு குடைவரை கோயில்கள், சமணக் குகைத்தலம் ஆகியவை உள்ளன. . இரண்டு குடைவரைக் கோயிலகளில் இன்று வழிபாட்டில் இருக்கும் முருகன் கோயில், கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையனின் ஆறாவது ஆட்சியாண்டில் அவரது தளபதியான சாத்தன் கணபதி என்பவரால் கட்டப்பட்டது.
கல்வெட்டில், குடைவரைக் கோயில் சிவனுக்காக கட்டப்பட்டதாகவே குறிப்பிடப்படுகிறது. என்றாலும், சிவன், பவளக்கனிவாய் பெருமாள், முருகன், துர்ககை, விநாயகர் ஆகிய 5 கடவுளுக்கும் இங்கு தனி சன்னதிகள் உள்ளன. இரண்டு குடைவரைக்கோயில்களிலும் முருகன் துணைக்கடவுளாகவே எழுந்தருளியிருக்கிறார். ஆவுடை நாயகிக்கு கிபி. 12 ஆம் நூற்றாண்டில் தனிக்கோயில் எடுக்கப்பட்டது.
சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்றது திருப்பரங்குன்றம். பெரியபுராண காலத்தில் இக்கோயில் சிவன் கோயிலாகவே குறிப்பிடப்படுகிறது. இதனால் அதற்கு பின்வந்த காலங்களில் முருகவழிபாடு தொடங்கியிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
முற்காலப்பாண்டியர்கள் காலத்தில், குடைவரைக்கோயிலாக உருவாக்கப்பட்ட இத்திருக்கோயில், அடுத்து வந்த மன்னர்கள் காலத்தில் படிப்படியாக உருமாற்றம் அடைந்து பொலிவு பெற்று சிறப்புற்றது.
பிற்கால பாண்டிய மன்னர்கள் காலத்தில் மேலும் பொலிவுற்ற இத்திருக்கோயில், நாயக்கர் காலத்தில் அழகிய மண்டபங்களையுடைய கோபுரத்துடன் கட்டப்பட்டது. தென்புறத்தில் உள்ள குடைவரைக் கோயிலுக்கு அருகில், சமணர்களின் கற்படுக்கை அமைந்துள்ளது.
சடையவர்மன் என்னும் பட்டம் பெற்ற நெடுஞ்சடையன் பராந்தகன் காலமான கி.பி. 765 – 815 காலத்திய செப்பேடுகள் லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திம் சென்னை அருங்காட்சியகத்திலும் காணப்படுகின்றன. திருப்பரங்குன்றம் கல்வெட்டுகள் நெடுஞ்சடையன் பராந்தகனின் ஆட்சிக்கு சான்றாக இருக்கின்றன. நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் முருகப்பெருமான் வழிபாடுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
நாயக்கர் காலத்தில் புத்தெழுச்சி பெற்ற திருப்பரங்குன்றம் கோயில்!
நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இக்கோயிலுக்கு பெரிய அளவில் திருப்பணிகள் நடந்துள்ளன. கோயிலின் ராஜகோபுரத்தை வீரப்ப நாயக்கர் 1505 ஆண்டில் கட்டிக்கொடுத்துள்ளார். கோயில் திருமதிலையும் இவர் கட்டிக் கொடுத்துள்ளார். திருமலை நாயக்கர் கி.பி. 1659 ல் முருகனை எப்போதும் வழிபட்டுக்கொண்டிருப்பது போன்று தம் உருவச்சிலையையும், தன் மனைவியர் இருவரின் உருவச்சிலைகளையும் இக்கோயிலில் வடித்துள்ளார்.
திருக்கல்யாண மண்டபம் எனும் திருவாட்சி மண்டபமும், நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. ஆஸ்தான மண்டபத்தில் 48 துண்களுடன் கூடிய அழகிய கண்கவர் சிற்பங்களும், ராணி மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை.
திருப்பரங்குன்றம் கோயில் திருக்குடமுழுக்கு
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கடைசியாக 2011 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று குடமுழுக்கு விழா என்பதால், பக்தர்கள் வெள்ளமென குவிந்துள்ளனர். 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயிலில் சீரமைப்புப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பரங்குன்றம் ராஜகோபுரம், மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயில், சொக்கநாதர் கோயில்களை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்றன. ஜூலை 10 ஆம்தேதி முதல் குடமுழுக்குக்கான யாகசாலை பூஜைகள்,காலை, மாலை இருவேளைகளிலும் நடைபெற்றன.