திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்முகநூல்

32 தீர்த்தங்கள், இசை தூண்கள் | திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் தனிச்சிறப்புகள் பற்றி தெரியுமா?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்மிக்க நெல்லையப்பர் கோயிலில் பல அற்புதங்கள் அமைந்துள்ளன.. இதுகுறித்த பிரத்யேக தகவல்களை இதில் படிக்கலாம்.
Published on

வைஜெயந்தி. S

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில், சிவபெருமான் நெல்லையப்பராக காட்சியளிக்கிறார். அன்னை காந்திமதி அம்பாள் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். நெல்லையப்பர் கோயிலில் வருடந்தோறும் ஆனி தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் ஆனி திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. இந்த விழா நாளை (ஜூலை 9ம் தேதி) வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று காலை (ஜூலை 8ம் தேதி) மிக முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மிகப் பிரம்மாண்டமான நெல்லையப்பர் தேர் திருவிழாவில் பக்தர்கள் கடல் போல திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.. இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோயிலில் பல அற்புதங்கள் நிறைந்துள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

நெல்லையப்பர் கோயில் சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு உருவானது. இது தமிழகத்தில் உள்ள மிக பெரிய சிவாலயங்களில் ஒன்றாகும். சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் 32 தீர்த்தங்கள் உள்ளன. இந்த கோயிலில் மொத்தமாக ஐந்து தேர்கள் உள்ளன. நெல்லையப்பருக்கு ஒன்று, காந்திமதி அம்பாளுக்கு ஒன்று, விநாயகர், சுப்ரமணியர் ஆகியோருக்கு தலா ஒன்று, சண்டிகேஸ்வரருக்கு ஒன்று என ஐந்து தேர்கள் உள்ளன. இந்த தேர்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன.

யாளி
யாளி முகநூல்

அது மட்டுமல்லாமல் இந்த கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலமாக போற்றப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள யாளி சிற்பங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இது போல வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு தனிச்சிறப்பு கொண்டது. இந்த தலம் ’வேணுவனம்’ என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது மூங்கில் காடு என்று அற்தம். அம்பிகை பார்வதி கபிலை மலையில் இருந்து புறப்பட்டு, வேணுவனத்தை அடைந்து, நெல் அளந்து தொண்டு செய்து, நெல்லையப்பரை மணந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

நெல்லையப்பர் கோவிலில் நுழைந்தவுடன் முதலில் 10 அடி உயரத்தில் கம்பீரமான வெள்ளை நிற நந்தி படுத்திருக்கும். அதனை அடுத்து 9 அடியில் விநாயகர் வீற்றிருப்பார். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் இருக்கின்றன.

முதல் பிரகாரம்

முதல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சந்நிதிகள் இருக்கின்றன. சிவனுக்கு அருகிலேயே கோவிந்தப் பெருமாளும் சயன கோலத்தில் வீற்றிருக்கிறார்..

இரண்டாம் பிரகாரம்

இசை தூண்கள்
இசை தூண்கள் fb

இதற்கு அடுத்து வரும் பிரகாரம் கொஞ்சம் பெரிதாகவே உள்ளது. இங்கே ஏழிசை ஸ்வரங்களை இசைக்கும் இசை தூண்கள் அமைந்துள்ளன. இவற்றை லேசாக தட்டினாலே போதும் ஏழு ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் தாமிர சபை உள்ளது. தாமிர சபை என்பது இந்த நெல்லையப்பர் கோவிலில் அமைந்துள்ள நடராசர் சன்னிதியாகும். இங்கு ஆருத்திரா தரிசன விழாவின் போது நடராசர், சிவகாமி அம்பாளின் உருவச் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த இடத்தின் அருகிலேயே 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

மூன்றாவது பிரகாரம்

மூன்றாவது பிரகாரம்
மூன்றாவது பிரகாரம்முகநூல்

இதையடுத்து வரும் மூன்றாவது பிரகாரமும் பெரியது. இந்த பிரகாரத்திலிருந்து, அம்மன் சந்நிதிக்கு செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் இருக்கின்றன. அத்துடன் இங்கேயே முருகப்பெருமானுக்கும் தனி சந்நிதி இருக்கிறது. இங்கு முருகன் ஆறுமுகமாய், வள்ளி தெய்வானையுடன் சந்தனக்காப்பில் நின்று அருள் புரிகிறார்.

இரு மூலவரைக் கொண்ட கோயில்

இரு மூலவரைக் கொண்ட கோயில்
இரு மூலவரைக் கொண்ட கோயில்

இந்த நெல்லையப்பர் கோவில் இரு மூலவரைக் கொண்ட கோயிலாகும் நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயன கோலத்திலும் அருகருகே தனித்தனி சன்னதியில் பக்தர்களுக்குக் காட்சி தருவது வேறு எங்கும் காண முடியாத அற்புதங்களில் ஒன்றாகும்.

இந்த நெல்லையப்பர் கோவில் பல்வேறு காலங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது. தற்போது இருக்கும் நிலைவரை நின்றசீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இசைக்கல்வெட்டு

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில், வேறெங்கும் காணமுடியாத அற்புதம் மிக்க இசைக்கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதனால், இந்த கோயில் இசை - நடனத்துடன் நெருங்கிய தொடர்புடைய கோவிலாக இருக்கிறது என ஆய்வாளர்கள் பலவிதமான ஆதாரத்துடன் விளக்குகிறார்கள்..

இந்தனை சிறப்புமிக்க நெல்லையப்பர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு உள்ள அற்புதமான சிறப்புகளை பார்க்கத் தவறாதீர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com