கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாருதி என்பவர், கெரு மரடி கொல்லரஹட்டி கிராமத்தில் ஜேசிபி மூலம் சில பணிகளை மேற்கொள்வதற்காக கோயில் பகுதிக்குள் சென்றுள்ளார். அவரைப் பற்றி விசாரித்த அப்பகுதி மக்கள், அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும் அவரைத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 11 குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதாகவும், துணைக் கண்காணிப்பாளர் வி.எஸ்.ஹாமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிராமத்தில் உள்ள இரண்டு கோயில்களைக் காலங்காலமாகத் புனிதப்படுத்தும் சடங்குகளின் ஒரு பகுதியாக மூடிவிட்டனர். அதாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கோயிலுக்குள் அந்த இளைஞர் நுழைந்து அவமதிப்பு செய்துவிட்டதாகவும், புனிதப்படுத்தும் சடங்குகளுக்காக உள்ளூரில் உள்ள கோயில்கள் மூடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணரின் வழித்தோன்றல்கள் என்று தங்களை நம்பும் அச்சமூகத்தினர், கம்பட ரங்கசுவாமி மற்றும் திம்மப்பா ஆகிய இரண்டு கோயில்களை பூட்டி வைத்துள்ளனர். இந்த விஷயத்தில் காவல் துறை மற்றும் பிற துறை சார்ந்த அதிகாரிகள் அம்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், கோயில்களை மூடியே வைப்பதிலேயே அவர்கள் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக நலத்துறை இணை இயக்குநர் சி.யோகேஷ், ”பட்டியல் சமூகத்தினரை இழிவாக பார்ப்பது தவறு. இதுபோன்று மீண்டும் நடக்கக்கூடாது என அக்கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த துறை அதிக முயற்சிகளை மேற்கொள்ளும்” என்றார்.
இதுதொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், “பட்டியலின பிரிவின் கீழ்வரும் சில சமூகங்களுக்கு இங்கு நுழைவு இல்லை என்பது தங்களின் பழமையான நடைமுறை. பல தலைமுறைகளாக தங்கள் கிராமத்தில் புனிதப்படுத்தும் சடங்கு நடைமுறையில் உள்ளது ” என்றார். அவரிடம் சமுதாயத்தில் சமத்துவம் குறித்து கேட்டபோது, ”பெரியவர்கள் வகுத்த விதிகளை மீற முடியாது. போலீஸ் வழக்குகள் முடிவடைந்த பிறகு சடங்குகள் செய்த பிறகே கோயில்களை திறப்போம்” என்றார்.
கொல்லா சமூகத்தைச் சேர்ந்த தலைவர் ராஜப்பா ஜி, ”தனது சமூகத்தில் உள்ள சிலர் பழைய நடைமுறைகளையே பின்பற்றுவதாகவும், இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடைமுறைகளை ஆதரிப்பது தவறானது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூகநலத் துறை திட்டங்களின் மூலம் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். எங்கள் படித்த இளைஞர்களும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதுபோன்ற பழக்கங்களை ஒழிக்க கோயில்களை திறக்க எங்கள் தலைவர்கள் மற்றும் ஊர் பெரியவர்களை வற்புறுத்த முயற்சிக்கிறோம்” என்றார்.
இது ஒருபுறமிருக்க மறுபுறம், இளைஞர்கள் தாக்கப்பட்ட இடத்துக்குச் சென்று தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக அப்பகுதியில் போராட்டம் நடத்த பட்டியலின அமைப்புகள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
கெருமரடி கொல்லரஹட்டி கிராமத்தில் கொல்லா சமூகத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனவும் அவர்கள் அங்கு அதிகம் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கிராமம் முக்கியமாக கொல்லா சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவில் கொல்லர்கள் ’யாதவர்கள்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பரில், மத்திய அமைச்சர் ஏ.நாராயணசாமி தனது சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியை ஒட்டிய தும்குரு மாவட்டத்தில் உள்ள பாவகாட் தாலுகாவில் உள்ள பெம்மனஹள்ளி என்ற கிராமத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதற்குக் காரணம், அவரது ஜாதிதான் (பட்டியலினம்) எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.