ரூ.6.64 லட்சம் கோடி! எதிர்பார்த்ததை விட அதிகமாக முதலீடு ஈர்ப்பு - யார் யார் எவ்வளவு கோடி? முழுவிவரம்

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ட்விட்டர்

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று (ஜன.7) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்த இந்த மாநாடு, இன்றும் தொடர்ந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள், தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதன்படி, நேற்று நடைபெற்ற மாநாட்டில் முதல்நாளிலேயே ரூ. ஐந்தரை லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, குவால்காம், கோத்ரேஜ், பெகாட்ரான், டிவிஎஸ், ஹூண்டாய், JSW Energy, டாடா, வின்ஃபாஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு முதலீடு செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த நிலையில், இன்றும் சில நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு

அந்த வகையில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழ்நாடு பெற்ற முதலீடுகளின் மதிப்பு குறித்து அறிவோம். இம்மாநாட்டில், 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை, இந்தியாவே உற்றுநோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.

4 ஒப்பந்தகளில் அதானி நிறுவனம்; 10,300 பேருக்கு வேலைவாய்ப்பு!

அதன்படி, இன்று டாடா நிறுவனம் ரூ.70,800 கோடி அளவுக்கு ஒப்பந்தம் செய்ய உள்ளது. இதன்மூலம் 3,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. இதற்கு அடுத்து அதானி நிறுவனம் 4 ஒப்பந்தகளில் ரூ.42,768 கோடி அளவுக்கு ஒப்பந்தம் செய்ய உள்ளது. இதன்மூலம் 10,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. அடுத்து சிபிசிஎல் நிறுவனம் ரூ.17 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்ய உள்ளது. இந்த நிறுவனம் 2400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளது. இதுதவிர வேறு பல நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன.

எல் & டி நிறுவனம் - சென்னை - ரூ.3,500 கோடி - 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு

ராயல் என்ஃபீல்டு - காஞ்சிபுரம் - ரூ.3 ஆயிரம் கோடி - 2000 பேருக்கு வேலைவாய்ப்பு

மைக்ரோசாஃப்ட் - சென்னை - ரூ.2,740 கோடி - 167 பேருக்கு வேலைவாய்ப்பு

ஹைலி குளோரி ஃபுட்வேர் - கள்ளக்குறிச்சி - ரூ.2302 கோடி -20,000 பேருக்கு வேலைவாய்ப்பு

ராமகிருஷ்ணா டிட்கார் ரயில் வீல்ஸ் - திருவள்ளூர் - ரூ.1,850 கோடி - 1400 பேருக்கு வேலைவாய்ப்பு

களத்தில் குதித்த காவேரி மருத்துவமனை

காவிரி மருத்துவமனை ரூ.1,200 கோடி மதிப்பில் தொழில் தொடங்க உள்ளன. இதுதவிர, தலா ரூ.ஆயிரம் கோடி மதிப்பில் இ.என்.இ.எஸ்., ஷாகி எக்ஸ்போர்ட்ஸ், ஜே.ஏ.எம். உள்ளிட்ட நிறுவனங்கள் தொழில் தொடங்க உள்ளன. இதன்மூலம் 35,500 வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன. மேலும் பிரபல நிறுவனங்களான மகேந்திரா, ஹிட்டாச்சி, டஃபே உள்ளிட்ட நிறுவனங்களும் தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளன.

இதில் Stellantis group நிறுவனம் திருவள்ளூரில் ரூ.2000 கோடிக்கு முதலீடு செய்யவுள்ளது. அதேநேரத்தில், ஷெல் மார்க்கெட் இந்தியா நிறுவனம் வெறும் 1,070 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் முதலீடு செய்திருந்தாலும், கிட்டத்தட்ட 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளது.

தொழில்துறையினருக்கு முதல்வர் கொடுத்த வாக்குறுதி!

இரண்டு நாள் மாநாட்டை நிறைவு செய்யும் முன் தமிழ்நாடு முதலமைச்சர் பேசும் போது தொழில்துறையினருக்கு சில வாக்குறுதிகளை உறுதியளித்தார்.

முதல்வர் பேசுகையில், “எங்கள் அரசு மீதும் கொள்கைகள் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவது எங்கள் தலையாய கடமை. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போடுவதிலிருந்து தொழிற்சாலை முழுமையாக அமைத்து உற்பத்தி தொடங்கும் வரை, அதற்குப் பிறகும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். உங்களுக்குத் தேவையான எல்லா clearance-ம் Single Window System மூலமாக விரைந்து வழங்கப்படும் என்று உறுதி கூற விரும்புகிறேன்.

”தொடர்ந்து கண்காணிப்போம்...”

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தொழிற்துறை அமைச்சர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படும். அதில் தொழிற்துறை அமைச்சர், guidance அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்பர். ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தொடர்ந்து கண்காணித்து அதை முழுமையாக தொழிற்சாலையாக மாற்ற அவர்கள் முழுமையான முயற்சிகளை மேற்கொள்வர்.

“நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்”

உங்களுக்கு எந்தத் தருணத்திலும் என்னிடம் எதுவும் தகவல் தெரிவிக்க வேண்டுமென்றால் என்னுடைய அலுவலகத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். இந்த உறுதியை நான் தொழிற்துறை அமைச்சர், மற்ற அலுவலர்கள் முன்னிலையில் வழங்குகிறேன். நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்.

"நல்லெண்ணத் தூதுவர்கள் நீங்கள்!"

இம்மாநாட்டில் முதலீடு செய்யாதவர்களை, எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என அன்போடு அழைக்கிறேன். உங்கள் எல்லோரையும் தொழில் முனைவராக மட்டுமல்ல. தமிழ்நாட்டின் நல்லெண்ணத்தூதுவராகப் பார்க்கிறேன். எனவே தமிழ்நாட்டை உலகுக்கு அறிமுகம் செய்யுங்கள். உலக நாடுகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வாருங்கள்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

சுருக்கமாக முதலீடு ஈர்ப்பு விவரம்:

ஈர்க்கப்பட்டுள்ள மொத்த முதலீடு - ரூ.6,64,180 கோடி

நேரடி வேலை வாய்ப்பு - 14,54,712

மறைமுக வேலைவாய்ப்பு - 12,35,945

முக்கிய துறைகள் வாயிலாக ஈர்க்கப்பட்ட முதலீடுகள்

தொழில் மற்றும் வணிகத்துறை - ரூ.3,79,809 கோடி

ஆற்றல் துறை - ரூ.1,35,157 கோடி

வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாடு - ரூ.62,939 கோடி

ஐடி மற்றும் டிஜிட்டர் சர்வீஸ் - ரூ.22,130 கோடி

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் - ரூ.63,573 கோடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com