A to Z.. ஜிஎஸ்டி வரிகளில் அதிரடி மாற்றம்.. விலை குறையப்போகும் பொருள்கள் என்னென்ன தெரியுமா?
12 மற்றும் 28 விழுக்காடு ஜி.எஸ்.டி வரிவிதிங்கள் கைவிடப்பட்டு, 5 மற்றும் 18 விழுக்காடு வரி விகிதங்கள் மட்டுமே இனி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாற்றப்பட்ட வரி விகிதங்கள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று (செப்.3) தொடங்கியது. இன்றும் இக்கூட்டம் நடைபெற இருக்கிறது. ’தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்படும்’ என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், ஜி.எஸ்.டி வரி இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) 5, 12, 18, 28 என 4 அடுக்குகளாக வரி அமல்படுத்தப்பட்டது. இதை 5 மற்றும் 18 சதவீதம் என 2 அடுக்குகளாக மாற்ற மத்திய அரசு பரிந்துரைத்தது. இந்த மாற்றத்தின்படி, 12 மற்றும் 28 விழுக்காடு ஜி.எஸ்.டி வரிவிதிங்கள் கைவிடப்பட்டு, 5 மற்றும் 18 விழுக்காடு வரி விகிதங்கள் மட்டுமே இனி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதேவேளையில், சில பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத சிறப்பு ஜி.எஸ்.டி வரி விதிப்பும் அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, UHT பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தனிநபர் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கும், இனி ஜி.எஸ்.டி வரி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறைகள், நவராத்தி பண்டிகையின் முதல்நாளான செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
அன்றாட உபயோகப் பொருட்களுக்கான வரி குறைப்பு
முக்கியமாக இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு அன்றாட உபயோகப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூந்தல் எண்ணெய், ஷாம்பு, பற்பசை, சோப், டூத் பிரஷ்கள், ஷேவிங் க்ரீம் ஆகியவற்றின் மீதான ஜி.எஸ்.டி 18 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. வெண்ணெய், நெய், பால் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி, 12 விழுக்காட்டிலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நொறுக்குத் தீனிகள், பாத்திரங்கள், குழந்தைகளுக்குப் பால் புகட்டும் பாட்டில்கள், குழந்தைகளுக்கான நாப்கின்கள், மருத்துவப் பயன்பாட்டிற்கான டையப்பர்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் அவற்றின் பாகங்களுக்கு, ஜி.எஸ்.டி 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைக்கப்படுவதால், அவற்றின் விலையும் குறையவுள்ளது.
உயிர்காக்கும் மருந்துப் பொருட்களுக்கும் விலக்கு
உயிர்காக்கும் மருந்துப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தெர்மாமீட்டருக்கான ஜி.எஸ்.டி, 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ தர ஆக்ஸிஜன், நோயறிதலுக்கான கருவிகள், குளுக்கோ மீட்டர், மருத்துவப் பரிசோதனைக்கான ஸ்ட்ரீப்புகள் உள்ளிட்டவற்றுக்கான ஜி.எஸ்.டி 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. பார்வை பிரச்னைகளுக்கான மூக்குக் கண்ணாடிகள் மீதான ஜி.எஸ்.டி, 12லிருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏசிகளுக்கான ஜி.எஸ்.டி 28 விழுக்காட்டிலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 32 இன்சுகளுக்கு மேலான டிவிகளுக்கும், மானிட்டர்கள், ப்ரோஜக்டர்கள் ஆகியவற்றுக்கும், 28 விழுக்காட்டிலிருந்து 18 ஆக ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது. DISHWASHERகளுக்கு ஜி.எஸ்.டி, 28 விழுக்காட்டிலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறிய ரக பெட்ரோல், பெட்ரோல் ஹைபிரிட், எல்.பி.ஜி, சி.என்.ஜி கார்களுக்கான ஜி.எஸ்.டி, 28 விழுக்காட்டிலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறிய ரக டீசல் மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் கார்களுக்கான ஜி.எஸ்.டியும், 28 விழுக்காட்டிலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 3 சக்கர வாகனங்கள், 350 சிசி மற்றும் அதற்குக் குறைவான திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள், சரக்குப் போக்குவரத்திற்கான மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி, 28 விழுக்காட்டிலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிமெண்டிற்கான வரியும், 18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கல்வி சார்ந்த பல்வேறு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்வி சார்ந்த பொருட்களுக்கு வரி ரத்து
மேலும், கல்வி சார்ந்த பல்வேறு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் 12 விழுக்காடு ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரைபடங்கள், சார்ட்டுகள், பூகோள உருண்டைகள் ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி ரத்து செய்யப்பட்டுள்ளது. பென்சில்களைக் கூர்மையாக்கும் கருவிகள், லப்பர்கள், கிரையான்கள், மாணாக்கர் பயன்படுத்தும் வண்ணங்கள், பயிற்சிப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டியில் செய்யப்படும் மாற்றங்களால், வேளாண் துறை சார்ந்த கருவிகள் மற்றும் பொருட்களின் விலையும் குறைவுள்ளது. டிராக்டரின் பாகங்கள் மற்றும் டயர்களுக்கான ஜி.எஸ்.டி 18 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. ட்ராக்டருக்கான ஜி.எஸ்.டி 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட உயிரி பூச்சிக்கொல்லிகள், சொட்டு நீர் பாசன அமைப்புகள், வேளாண்மை, தோட்டக்கலை இயந்திரங்கள், அறுவடை மற்றும் பதப்படுத்தலுக்கான இயந்திரங்களின் ஜி.எஸ்.டியும், 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. உரங்களுக்கான ஜி.எஸ்.டியும், 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.
புகையிலை மற்றும் சொகுசு கார்களுக்கு, 40 சதவீத சிறப்பு ஜி.எஸ்.டி விதிக்கப்படவுள்ளது. பான் மசாலா, புகையிலைப் பொருட்கள், சிகரெட்டிற்கு, 40 சதவீத ஜி.எஸ்.டி அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலை மற்றும் சொகுசு கார்களுக்கு 40 சதவீதம் வரி
புகையிலை மற்றும் சொகுசு கார்களுக்கு, 40 சதவீத சிறப்பு ஜி.எஸ்.டி விதிக்கப்படவுள்ளது. பான் மசாலா, புகையிலைப் பொருட்கள், சிகரெட்டிற்கு, 40 சதவீத ஜி.எஸ்.டி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களுக்கான வருவாய் இழப்பை ஈடுசெய்ய பெறப்பட்ட கடன்கள் திருப்பிச் செலுத்தப்படும் வரை, குட்கா, சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி, 28 சதவீதமாகவே இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 1,200 சிசி மற்றும் 4 ஆயிரம் மில்லி மீட்டருக்கு மேல் உள்ள அனைத்து வாகனங்களுக்கும், 40 விழுக்காடு ஜி.எஸ்.டி வரும் 22ஆம் தேதி முதல் விதிக்கப்படவுள்ளது. 350 சிசி-க்கு அதிகமான இருசக்கர வாகனங்கள், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான விமானங்கள் மற்றும் படகுகள், சர்க்கரை மற்றும் காஃபின் சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் மது அல்லாத பானங்களுக்கு, 40 விழுக்காடு ஜி.எஸ்.டி விதிக்கப்படவுள்ளது. அதேபோல், ஐபிஎல் மற்றும் ஐபிஎல் போன்ற விளையாட்டுத் தொடர்களுக்கான டிக்கெட்டுகளுக்கு, 40 விழுக்காடு ஜி.எஸ்.டி விதிக்கப்படவுள்ளது. இதனால், ஐபிஎல் டிக்கெட்டுகளின் விலை உயரவுள்ளது.
ஜிஎஸ்டி மாற்றம் குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
ஜி.எஸ்.டி சீர்திருத்தம் இந்திய குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தனது எக்ஸ் தள பதிவில் அவர், இந்தச் சீர்த்திருத்தம் வணிகம் செய்வதை எளிதாக்கும் எனவும், குறிப்பாக சிறு வியாபாரிகளும், சிறு தொழில்களும் பயன்பெறும் எனவும் தெரிவித்துள்ளார். நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்குப் பயனளிக்கும் ஜி.எஸ்.டி சீர்த்திருத்த முன்மொழிவுகளுக்கு, மத்திய அரசு மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய ஜி.எஸ்.டி கவுன்சில் ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அமெரிக்க வரி விதிப்பிற்கும் ஜி.எஸ்.டி சீர்திருத்தத்திற்கும் தொடர்பில்லை எனவும், சீக்கிரமாக ஏற்றுமதி செய்யும் அனைவருக்கும் நல்ல அறிவிப்பு வரும் எனவும், அமெரிக்கா விதித்த வரியால் நஷ்டமடைபவர்களுக்கு உதவியாக அரசு இருக்கும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கவலை தெரிவிக்கும் மாநிலங்கள்
இரு அடுக்கு ஜிஎஸ்டி வரி விகித அமைப்புக்கு மாநிலங்கள் ஒருமித்த ஆதரவை வழங்கினாலும், அதன்மூலம் ஏற்படக்கூடிய வருவாய் இழப்பிற்கான இழப்பீட்டு வழிமுறை குறித்து தெளிவான உறுதிமொழியை அவை கோரி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அடுக்கு ஜிஎஸ்டி வரி விகித அமைப்பு அமல்படுத்தப்படும் நிலையில், மாநிலங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த இழப்பு, தங்கள் சமூக நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை நேரடியாகப் பாதிக்கும் என மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன.
’உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ - காங் வலியுறுத்தல்
ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கப்படும் விஷயம் என்றாலும் மாநிலங்களின் வருவாய்க்குக் குறைந்தபட்ச உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, மறைமுக வரி மாநிலங்களிடம் இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், ஜிஎஸ்டி வசூல் குறைந்தால், தங்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் என மாநிலங்கள் அச்சப்படுவதாக தெரிவித்தார். எனவே, ஜிஎஸ்டி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒற்றுமையாக தீர்வு காண வேண்டும் என பிரவீண் சக்கரவர்த்தி வலியுறுத்தினார்.