HEADLINES |ஜிஎஸ்டி மாற்றம் முதல் வெளியேறிய டிடிவி தினகரன் வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் ஜிஎஸ்டியில் கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றங்கள் முதல் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் வரை விவரிக்கிறது.
ஜிஎஸ்டி வரியில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்த மத்திய அரசு, 5 மற்றும் 18 விழுக்காடுகள் என 2 அடுக்குகளைக் கொண்டதாக மாற்றியமைத்துள்ளது.
பாஜகவின் கூட்டணியில் இருந்த அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அந்த உறவை முறித்துக்கொண்டு வெளியேறியிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என தமிழக பாஜக தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
’சசிகலாவை சந்தித்ததாக வெளியான தகவல் தவறு என்றும், எல்லாவற்றுக்கும் நாளை பதில் கிடைக்கும்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
16 குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க அன்புமணிக்கு மீண்டும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த அரசு ஊழியரை காலில் விழ வைத்த விவகாரத்தில், பெண் கவுன்சிலர் உட்பட ஐவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வரும் 9ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையிலும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் BRS கட்சியிலிருந்து விலகுவதாக கவிதா அறிவித்துள்ளார்.
உதயநிதியின் மகன் இன்பநிதி, திரைத் துறையில் கால் பதிக்கிறார் . தனுஷ் நடிக்கும் ’இட்லிக் கடை’ படத்தின் விநியோகஸ்தகராக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்தியாவுக்கு மேலும் சில எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவது குறித்து பேசி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் ஏற்கெனவே 3, எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா வாங்கியுள்ளது.