ஜிஎஸ்டி விகிதங்களை 2 அடுக்குகளாக மாற்ற அமைச்சர்கள் குழு ஒப்புதல்!
ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் தொடர்பான மத்திய அரசின் முடிவால் ஏசி, டிவி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
ஜிஎஸ்டி விகிதங்களை 2 அடுக்குகளாக மாற்றுவதற்கான மத்திய அரசின் முன்மொழிவிற்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பிஹார் துணை முதல்வரும், ஜிஎஸ்டி தொடர்பான அமைச்சர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான சாம்ராட் சவுத்ரி தெரிவித்துள்ளார். அதன்படி, 5 மற்றும் 18 என 2 அடுக்கு வரி விகிதங்களுக்கு மாறவும், 12 மற்றும் 28 சதவீத வரி அடுக்குகளை நீக்கவும் அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதேநேரம், இதுகுறித்த இறுதி முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும் என சாம்ராட் சவுத்ரி தெரிவித்தார். ஜிஎஸ்டியின் கீழ், ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டிற்கு வரி விதிக்கக்கூடாது என்று அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்காரணமாக, காப்பீட்டு பிரீமியங்கள் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் அல்லது பூஜ்ஜியமாக வாய்ப்புள்ளது.
சிறிய கார்கள், ஏசி, டிவி உள்ளிட்ட பொருட்களின் விலை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது. பேஸ்ட், கெட்ச்அப், ஜாம், பேக்கிங் செய்யப்பட்ட பழச்சாறுகள், பாஸ்தா, நூடுல்ஸ், வெண்ணெய் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்களின் விலையும் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மருந்து பொருட்கள், ஜவுளி, காலணிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு நாள் நடந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”எளிமைப்படுத்தப்பட்ட இந்த அமைப்பு சாமானியர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சிறு வணிகர்களுக்கு பயனளிக்கும் என்றும், அதே நேரத்தில் GST-ஐ மேலும் வெளிப்படையானதாகவும் வளர்ச்சி சார்ந்ததாகவும் மாற்றும் என்றும் கூறியிருந்தார். மாற்றங்களின் ஒரு பகுதியாக, தற்போது 12 சதவீத பிரிவில் உள்ள அனைத்து பொருட்களும் 5 சதவீத அடுக்குக்கு மாற்றப்படும்” என்றும் தெரிவித்தார்.
இதேபோல், ”28 சதவீத வரி விதிக்கப்படும் பெரும்பாலான பொருட்கள் 18 சதவீத வரி வரம்பிற்கு மாறும், இது இணக்கத்தை மேம்படுத்தும் மற்றும் சிக்கலைக் குறைக்கும்” என்று கூறினார்.
மேலும். “ தனிநபர் சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற மையத்தின் பரிந்துரையையும் இந்த குழு மதிப்பாய்வு செய்தது” என்றார். அத்துடன், “பெரும்பாலான மாநிலங்கள் இந்த யோசனையை ஆதரித்தாலும், காப்பீட்டு நிறுவனங்கள் உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு நன்மையை வழங்குவதை உறுதி செய்ய கடுமையான மேற்பார்வையின் அவசியத்தை அவர்கள் குறிப்பிட்டனர். இந்த விலக்கு ஆண்டு வருவாயில் சுமார் ரூ.9,700 கோடி செலவாகும்” என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் மீதான இறுதி முடிவு, வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.