இன்று தொடங்கும் கவுன்சில் கூட்டம்.. குறையும் ஜிஎஸ்டி விகிதங்கள்!
இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டத்தில், பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிவிகிதங்கள் கணிசமாகக் குறைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்குகிறது. தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஒரே வரியாக அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) 5, 12, 18, 28 என 4 அடுக்குகளாக வரி வசூலிக்கப்படுகிறது. இதை 5 மற்றும் 18 சதவீதம் என 2 அடுக்குகளாக மாற்ற மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த மாற்றத்தின்படி, 28% வரி வரம்புக்குள் இருந்த பொருட்கள் 18% அடுக்குக்கு மாற்றப்படலாம். அதேபோல், 12% வரி வரம்புக்குள் இருந்த பொருட்கள் 5% அடுக்குக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது.
அந்த வகையில், அத்தியவாசிய பொருட்களின் விலையை குறைக்க இந்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டத்தில், பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிவிகிதங்கள் கணிசமாகக் குறைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி அனைத்து உணவு மற்றும் ஜவுளிப் பொருட்களையும் 5% ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, சிமென்ட் மீதான வரி 28%-லிருந்து 18% ஆகக் குறைக்கப்படவுள்ளதாக தெரிகிறது. மேலும், தனிநபர் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்களுக்கான ஜி.எஸ்.டி.யை பூஜ்ஜியம் ஆக்குவதற்கான முக்கியப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நுகர்வோர் அதிகளவில் பயன்படுத்தும் நடுத்தர மற்றும் உயர்தர அழகு நிலையங்கள் மற்றும் சலூன்களுக்கான வரி 18%லிருந்து 5% ஆகக் குறைக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு வரி விகிதங்களுக்கு உட்பட்ட டிவி, ஏசி, ஃப்ரிட்ஜ் போன்றவை அனைத்தும் 18% வரிவரம்புக்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறியரக கார்களுக்கான வரி 18% ஆகவும், பெரிய கார்களுக்கான வரி 22% செஸ் உட்பட 40% ஆகவும் மாற்றியமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 2 அடுக்கு வரி மாற்றம் தவிர, புகையிலை, மதுபானம் போன்ற பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. மேலும் வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன. இதுதொடர்பாக மாநில அரசின் அனைத்து கோரிக்கைகளும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.