பீகார் | ”வாக்காளர் பட்டியல் வெளியிடத் தடை இல்லை” - உச்ச நீதிமன்றம்!
பீகாரில், இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்தப் பணி கடந்த ஜூலை 25ஆம் தேதியுடன் நிறைவுற்றது. அதன்படி,பீகாரில் உள்ள 7.9 கோடி வாக்காளர்களில் இறப்பு, இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரு இடங்களில் பதிவு என மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1-ந்தேதி வெளியிடப்படும் என்றும், அதில் தகுதியுள்ள அனைவரும் சேர்க்கப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அதேநேரத்தில் இந்த நீக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள எந்தப் பெயர்களும் நீக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் விதிமுறைகளுக்குட்பட்டே எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், பீகாரில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட தடையில்லை என கூறியுள்ள உச்ச நீதிமன்றம் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை தகுதிச்சான்றாக ஏற்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், வாக்காளர் பட்டியல் இறுதிசெய்யவும் வெளியிடவும் இடைக்கால தடை விதிக்கக் கோரப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1இல் பட்டியலை வெளியிட அனுமதித்தது. மேலும் வாக்காளராகப் பதிவு செய்ய ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையைத் தகுதிச்சான்றாக ஏற்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கு குறித்த விசாரணையை நாளை மேற்கொள்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.