பீகார் | வாக்காளர் திருத்தம்.. தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த முக்கிய பரிந்துரை!
பீகாரில், இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புதான் தற்போது நாடு முழுவதும் கடும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஜூன் 24ஆம் தேதி வெளியான அந்த அறிவிப்பில். 2003ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் தங்களது இந்திய குடியுரிமை மற்றும் இருப்பிடத்தை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. அதாவது, 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் கணக்கெடுப்பு கணினிமையாக்கப்பட்ட நிலையில், அதற்குப் பிறகான கணக்கெடுப்புகளில் இடம்பெற்றவர்களை மீண்டும் உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் கோரியிருக்கிறது.
இதற்காக தேர்தல் ஆணையம் தங்களுடைய அடையாள அட்டையாக காண்பிக்க மொத்தம் 11 ஆவணங்களை பட்டியலிட்டுள்ளது. அதில் பாஸ்போர்ட், சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை போன்றவை அடங்கும். ஆனால் மிக முக்கியமாக ஆதார், ஏற்கெனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டை போன்றவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தச் சிறப்பு திருத்த முறைக்கு எதிர்ப்பு கிளம்பியதுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையை (SIR) தேர்தலுடன் இணைத்ததற்காகத் தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. ”தேர்தலுக்குச் சற்று முன்பு இந்த நடவடிக்கைக்கான காரணம் என்ன என்பதையும் தெளிவாக விளக்க வேண்டும்” என அறிவுறுத்திய நீதிபதிகள், ”ஆதார் அட்டையை ஆவணங்களின் பட்டியலில் இருந்து விலக்கியது ஏன் என்று தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், "ஆதாரை குடியுரிமைக்கான சான்றாகப் பயன்படுத்த முடியாது" என்றார். இருப்பினும் இதைக் கேட்ட உச்ச நீதிமன்றம், ஆதார் அட்டையை ஏற்க முடியாது என ஏன் குறுகிய காலத்தில் முடிவெடுக்கப்பட்டது.
முன்னரே இந்த நடவடிக்கையை தொடங்கியிருக்கலாமே? என தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டது. மேலும், ”தேர்தல் நடைமுறைகளில் இருந்து தனியாக செய்யாமல், அதோடு ஏன் குழப்ப வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ”வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதற்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை” என்று கூறியது. தொடர்ந்து, “இந்த அவசியமான பயிற்சியை ஏன் தேர்தலோடு குழப்ப வேண்டும்” என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் ”வாக்காளர் உரிமை பெற்றவர், இந்தியக் குடிமகனா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்தானே? அதற்காக மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறை நியாயமானதே” என்றும் கருத்து கூறியிருக்கிறது. தொடர்ந்து, பீகாரில் வாக்காளர் திருத்தத்தின்போது ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில் வழக்கை ஒத்திவைத்தது.