பீகார்: வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பேர் நீக்கம்!
பீகாரில், இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, ஜூலை 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 லட்சம் வாக்காளர்கள் இறந்ததும், 26 லட்சம் பேர் வெவ்வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
7 லட்சம் பேர் இரண்டு இடங்களில் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 52 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், அதில் தகுதியுள்ள அனைவரும் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2003ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் தங்களது இந்திய குடியுரிமை மற்றும் இருப்பிடத்தை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் பீகாரில் வாக்காளர் திருத்தத்தின்போது ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.