பீகார் | சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை.. விரைவில் விசாரணை!
பிஹாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் வரும் 10ஆம் தேதி விசாரிக்க உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் இந்த அறிவிப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் வழக்கத்திற்கு மாறான முறையில் திருத்தம் செய்வது குடிமக்களுக்கு அரசமைப்பு சாசனம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மனுக்களில் கூறப்பட்டுள்ளன.
பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிகாரில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் தகுதியற்ற வாக்காளர்களை அடையாளம் கண்டு பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக நடத்தி வரும் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள், பொது நல அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.