ஹரித்வார்: படிக்கட்டுகளில் மின்சாரம் பாய்ந்ததா? கூட்ட நெரிசல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழப்பு
ஞாயிற்றுக்கிழமை என்பதால், 500 அடி உயரம் கொண்ட சிவாலிக் மலை மேலே அமைந்துள்ள மான்ஸா தேவி கோயிலில், ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக திரண்டிருந்தனர். இந்தக் கோயில் ஹரித்வாரின் ஐந்து புனித தலங்கள் அல்லது பஞ்ச தீர்த்தங்களில் ஒன்றாகும். இத்தகைய சூழலில் கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததாக வதந்தி பரவியது. இதன் காரணமாக கூட்டம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், மக்களிடையே நெரிசல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களில், கோயிலுக்குச் செல்லும் கூட்டத்தில், குறிப்பாக நெரிசலுக்குள்ளான இடத்தில் பெண்களும் குழந்தைகளும் கூட இருக்கின்றனர். மற்றொரு வீடியோவில், கூட்டத்தில் இருந்த சிலர் மக்களை பின்னால் செல்லும்படி கத்துகிறார்; மேலும், சில குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்கத்தவிப்பதையும் காணமுடிகிறது.
இந்தக் கூட்ட நெரிசலில் கடுமையாக பாதிக்கப்பட்ட 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இன்று காலை 9 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புத் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நெரிசலுக்கான காரணம் குறித்து ஹரித்வார் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரமேந்திர சிங் டோபால் கூறுகையில், “கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் மின்சாரம் பாய்வதாக வதந்தி பரவியது. அதுதான் பக்தர்களிடையே பீதி ஏற்படுத்தி கூட்ட நெரிசலுக்குக் காரணமாகியிருக்கிறது” என்றார்.
மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த சம்பவம் குறித்து முகநூலில் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். “ஹரித்வாரில் மானஸா தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் அதனால் தீவிரமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. SDRF, உள்ளூர் காவல்துறை மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்தில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளன. சூழ்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. பக்தர்களின் நலனுக்காக மாதா ராணியை வேண்டுகிறேன்” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கும் தாமி, “வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலை ஒட்டிய வழக்கு குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். வதந்தியை பரப்பியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திரமோடியும் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், “நேசத்திற்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் நலமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவிகளை வழங்கி வருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட பாதை மிகவும் குறுகியதானதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முக்கிய பண்டிகைகளின் போது இது பொதுவாக மூடப்பட்டிருக்கும் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ கடுமையான நெரிசல் இருந்தபோதிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்த பிறகு, கோயிலுக்குச் செல்லும் பாதை இப்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.