2வது கட்டமாக 20% பணிநீக்கம்.. நடவடிக்கையைத் தொடங்கிய நாசா!
நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேசன் (NASA) என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் விண்வெளி அமைப்பு, நிலவில் மனிதர்களுக்கு அனுப்புவது, செவ்வாயில் விண்கலம் மற்றும் ரோபோக்களை தரை இறக்குவது, செயற்கைக்கோள் அனுப்புவது உள்ளிட்ட மகத்தான பணிகளைச் செய்துவருகிறது. 60 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறந்து விளங்கும் இவ்வமைப்பில் விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும், மூத்த அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள ட்ரம்ப், அந்நாட்டில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் அரசின் பணி நீக்க நடவடிக்கைகளும் அடக்கம்.
அந்த வகையில், அடுத்து ட்ரம்ப் நிர்வாகம் நாசாவில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு, இந்த மாதத் தொடக்கத்தில் முதற்கட்டமாக 2,145 மூத்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை வெளியேற்றியது. இந்த நிலையில், தற்போது 2வது முறையாக நாசாவில் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 20 சதவீத ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அதாவது சுமார் 3,870 பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது, நாசா ஊழியர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சில நாட்களில் 20 சதவீதம் வரை ஆட்குறைப்பு இருக்கும் என்றும், இதைவிட எண்ணிக்கை வேறுபடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆட்குறைப்புகள், நாசாவின் பணியாளர்களை 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்களால் குறைக்கும் நோக்கில் ட்ரம்ப் முன்மொழியப்பட்ட பட்ஜெட்டுடன் ஒத்துப்போகின்றன. இந்த ஆட்குறைப்பு எதிர்காலத்தில் அமெரிக்காவைத் தடம்புரளச் செய்யலாம். அத்துடன், அமெரிக்கா தனது விண்வெளித் தலைமையை சீனாவிடம்கூட விட்டுக் கொடுக்கும் அபாயம் நேரிடலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.