பீகார் சட்டமன்றத் தேர்தல்.. சுயேட்சையாகப் போட்டியிடும் லாலு பிரசாத் மகன்!
பீகாரில் ராஸ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) நிறுவனரும் அதன் தலைவருமாக இருப்பவர், லாலு பிரசாத் யாதவ். இவருடைய மகன்களில் ஒருவரான தேஜ் பிரதாப் யாதவ், கடந்த மே மாதம் 25ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இதுகுறித்து அப்போது அவர், “தேஜ் பிரதாப் யாதவின் செயல்பாடுகள், பொது நடத்தை எங்கள் குடும்பத்தின் மதிப்புகளுக்கு ஏற்ப இல்லை. தற்போதைய சூழ்நிலையில், அவரை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கப்படுகிறார். இனிமேல், அவருக்கு கட்சியிலும் குடும்பத்திலும் எந்தப் பங்கும் இருக்காது. அவர் ஆறு ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.
தேஜ் பிரதாப் யாதவின் இந்த நீக்கத்திற்கு, அவருடைய சமூக ஊடகப் பதிவுதான் காரணம் எனக் கூறப்பட்டது. அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுடன் உறவில் இருப்பதாகவும், அவரையே திருமணம் செய்யவிருப்பதாகவும், அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்தே, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் தனது பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி அந்த ஃபேஸ்புக் பதிவை நீக்கினார். தொடர்ந்து, தனக்கும் தனது தம்பி தேஜஸ்வி யாதவிற்கும் இடையே பிளவை ஏற்படுத்த சதி நடப்பதாகவும் தேஜ் யாதவ் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த முறை, நான் மஹுவா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடுவேன். எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தேஜ் பிரதாப் யாதவ் 2015 சட்டமன்றத் தேர்தல் மூலம் முதல்முறையாக அரசிலுக்குள் நுழைந்தார். குறுகிய காலம் அமைச்சராகவும் இருந்த அவர், தற்போது சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். முன்னள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ் - ராப்ரி தேவி தம்பதியருக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். அதில் நான்கு பேர் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.