"எல்லாரையும் நிலாக்கு அனுப்பிடலாமா?" - நிலநடுக்கம் தொடர்பான மனு., டென்சன் ஆன உச்சநீதிமன்றம்.!
இந்தியாவின் 75% மக்கள் நிலநடுக்க அபாய மண்டலங்களில் வசிக்கின்றனர் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், நிலநடுக்க பாதிப்புகளை குறைக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரரின் வாதங்களை கேட்ட நீதிமன்றம், இது அரசாங்கத்தின் கொள்கை சார்ந்த விஷயம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standard) சமீபத்தில் இந்தியாவின் நிலநடுக்க மண்டல வரைபடத்தினை வெளியிட்டிருந்தது. அதில், நாட்டில் வாழும் 75 சதவீத மக்கள் மிதமான முதல் அதிக அபாயம் உள்ள நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை, பின்னணியாகக் கொண்டு நிலநடுக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை தானே வாதிட்ட மனுதாரர், முன்பு டெல்லி மட்டுமே அதிக நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் கொண்ட மண்டலத்தில் இருப்பதாக கருதப்பட்ட நிலையில், தற்போது இந்திய மக்கள்தொகையின் 75 சதவீதம் அந்த மண்டலத்தில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். மனுதாரரின் வாதங்களைக் கேட்ட நீதிமன்ற அமர்வு, “அப்படியானால் எல்லோரையும் நிலாவுக்கோ அல்லது வேறு எங்கேயாவது இடம்பெயர்த்துவிட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தனது மனுவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தை குறிப்பிட்டுப் பேசினார். அதற்கு நீதிமன்ற அமர்வு, “முதலில் இந்த நாட்டில் எரிமலைகளை கொண்டு வந்தால்தான் ஜப்பானுடன் ஒப்பிட முடியும்” என்று தெரிவித்தது.
தனது மனுவின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, இயற்கை பேரிடர் வரைபடத்தின் அடிப்படையில், நிலநடுக்கம் ஏற்பட்டால் சேதத்தை குறைக்கும் வகையில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்தினார். அதற்கு, “இவை அனைத்தும் அரசாங்கம் கவனிக்க வேண்டிய கொள்கை சார்ந்த விஷயங்கள். இதை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும்; இந்த நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.
இங்கே குறிப்பிடத்தக்கது என்னவெனில், நிலநடுக்கம் தொடர்பான ஆய்வுகளும் முன்னறிவிப்பு எச்சரிக்கை முறைகளும், சாத்தியமுள்ள அபாயப் பகுதிகளை மட்டும் குறிக்கின்றன. முன்னறிவிக்கப்படும் அனைத்து பகுதிகளிலும் நிலநடுக்கம் கட்டாயமாக நிகழும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை.

