கொல்கத்தா| பாதியில் புறப்பட்ட மெஸ்ஸி.. கோபத்தில் மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்!
கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியை காண வந்த ரசிகர்கள், அவர் பாதியிலேயே வெளியேறியதால் ஆவேசமடைந்து மைதானத்தை சூறையாடினர். காவல்துறையினர் அவர்களை சமாளிக்க முயன்றனர், இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.
கால்பந்து விளையாட்டு வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் மெஸ்ஸி, தேசம் கடந்து பல்வேறு உலக ரசிகர்களை கொண்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு முதல்முறையாக கால்பந்து உலகக்கோப்பை வென்ற ஜாம்பவான் மெஸ்ஸிக்கு இந்தியாவிலும் அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் GOAT Tour 2025 என 3 நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் மெஸ்ஸி, கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் புது தில்லி ஆகிய நான்கு நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு கொல்கத்தாவிற்கு வந்த மெஸ்ஸிக்கு அந்தநேரத்திலும் மைதானத்தில் நிரம்பியிருந்த ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பு வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கொல்கத்தாவின் லேக் டவுனில் உள்ள ஸ்ரீ பூமி ஸ்போர்ட்டிங் கிளப்பில் நிறுவப்பட்டுள்ள மெஸ்ஸியின் 70 அடி உயர சிலையை திறந்துவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தன்னுடைய சிலையை திறந்துவைத்தார்.
தொடர்ந்து சால்ட் லேக் மைதானத்தில் நிரம்பியிருந்த ரசிகர்களை பார்ப்பார் என சொல்லப்பட்ட நிலையில், மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகத்துடன் குழுமியிருந்தனர். ஆனால் அவர் பாதியிலேயே வெளியேறியதால் மைதானத்தில் இருந்த பொருட்களை எல்லாம் ரசிகர்கள் சூறையாடினர்.
மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்
கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்திற்கு வரும் மெஸ்ஸி, மைதானத்தை வலம்வந்து ரசிகர்களை பார்ப்பார் என்றும் சொல்லப்பட்ட நிலையில், மெஸ்ஸி பாதியிலேயே புறப்பட்டு சென்றதால் நிரம்பியிருந்த ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர். கோபமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை எல்லாம் சூறையாடினர்.
கட்டுக்கடங்காமல் ஸ்டேடியத்தை சேதப்படுத்திய ரசிகர்களை சமாளிக்கமுடியாமல் காவல்துறையினர் ரசிகர்களை விரட்டியடிக்க ஆரம்பித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

