புடின் ஆலோசனை அறைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பிரதமர்.. நடந்தது என்ன?
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் புடின் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் இருவரும் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த அறைக்குள் அனுமதியின்றி நுழைந்தார். 40 நிமிடங்கள் காத்திருந்த பிறகு நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, ஷெரீப் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டார். ஆர்டி இந்தியா வெளியிட்ட வீடியோ பின்னர் நீக்கப்பட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் இருவரும் தனியறைக்குள் முக்கியமான ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அனுமதியில்லாமல் அத்துமீறி உள்ளே நுழைந்ததாகவும், இது அவர் 40 நிமிடங்கள் காக்கவைக்கப்பட்ட பிறகு நடந்ததாகவும் வீடியோ ஒன்று வைரலானது.
ஆர்டி இந்தியா வெளியிட்ட அந்த வீடியோ பதிவின் படி, துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத்தில் நடந்த சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பதற்கு சுமார் 40 நிமிடங்கள் பாகிஸ்தான் பிரதமர் காத்திருந்தார். பின்னர் பொறுமையை இழந்த அவர், ரஷ்ய மற்றும் துருக்கி அதிபர்கள் ஆலோசனை நடத்திய அறைக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக வீடியோ வெளியிட்டு பதிவிட்டது.
இந்த செய்தி மற்றும் வீடியோ வைரலானதை தொடர்ந்து சமூக வலைதளத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இந்தசூழலில் முன்பு பதிவிட்டிருந்த வீடியோவை ஆர்டி இந்தியா டெலிட் செய்துள்ளது.
என்ன நடந்தது?
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க காத்திருந்ததாக வீடியோ வெளியிட்ட ஆர்டி இந்தியா, "பிரதமர் ஷெரீப், அதிபர் புடினுக்காக 40 நிமிடங்களுக்கும் மேலாகக் காத்திருந்து சோர்வடைந்து, எர்டோகன் உடன் புடின் நடத்திய சந்திப்பை இடைமறித்தார். பின்னர் உள்ளே நுழைந்த பாகிஸ்தான் அதிபர் பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியேறினார்" என்று ஆர்டி இந்தியா முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடின் உடன் தனியாக நடக்கவிருந்த பாகிஸ்தான் பிரதமரின் சந்திப்பு நடக்கவில்லை என கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் ஊடகங்கள் அதிபர் புடின் மற்றும் எர்டோகன் இருவரையும் சந்தித்து ஷெரீப் உரையாடியதாகவும், இந்த சந்திப்பில் இருதரப்பு மற்றும் பிராந்திய நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் ஆர்டி இந்தியா வெளியிட்டிருந்த வீடியோ வைரலாகி பாகிஸ்தான் பிரதமர் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்தபதிவை நீக்கியிருக்கும் ஆர்டி இந்தியா ’அந்த வீடியோ நிகழ்வை தவறாக சித்தரிக்க வழிவகுக்கும் என்பதால் நீக்கப்பட்டுவிட்டது’ என பதிவிட்டுள்ளது.

