ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்pt web

‘மதச்சார்பற்ற’ வார்த்தை நீக்கம்… ஹிந்து ராஷ்டிரத்துக்கான பாதை!

ஹிந்து ராஷ்டிர ஆதரவாளர்களுக்கு ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையே அருவருப்பு தரும் சொல்லாக இருக்கிறது; வெவ்வேறு மதங்களும் கலாசாரங்களும் உள்ள ஜனநாயக நாடு மதச்சார்பற்றதாக இல்லாமல், வேறு எப்படிப்பட்டதாக இருக்க முடியும்?
Published on

முந்தைய கட்டுரைகளைப் படிக்க

‘ஹிந்து ராஷ்டிரம்’ உருவாக்கப்பட வேண்டும் என்பது ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிரந்தர இலட்சியம். ‘ஹிந்து ராஷ்டிரம்’ என்ற கருத்தியலானது ‘உரோமானியப் பேரரசு’ (800 – 1800 பொது ஆண்டு), ‘இஸ்லாமியப் பேரரசு’ (கலீஃபா காலம் 632-1258 பொது ஆண்டு) போல, வேதம் - உபநிடதங்கள் அடிப்படையிலான ஆட்சியாகும். சில வேளைகளில் ஆர்எஸ்எஸ் இந்தக் கோட்பாட்டிலிருந்து பின் வாங்கிவிட்டதைப்போலத் தோன்றும், ஆனால் அது எப்போதும் தன்னுடைய இலக்கிலிருந்து விலகி வழி தவறாது; இலக்கை அடைவதற்கு உரிய காலம் வரும்வரை காத்திருக்கும். ‘ஹிந்து ராஷ்டிரம்’ என்கிற பெரிய இலக்குக்குள் எத்தனையோ துணை இலக்குகள்; ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ‘தனி அந்தஸ்து’ வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவது, அயோத்தியில் ராமருக்குப் பெரிய கோவிலைக் கட்டுவது, வாரணாசி – மதுரா ஆகிய புனிதத் தலங்களுக்கு தனியுரிமை கோருவது, பாபா சாஹேப் அம்பேத்கர் வகுத்த அரசமைப்புச் சட்டத்துக்குப் பதிலாக ‘மனு ஸ்மிருதி’ அடிப்படையில் புதிய அரசமைப்புச் சட்டத்தை இயற்றுவது என்பவை அதில் சில.

ப.சிதம்பரம்
இந்தியன் ரன் மெஷின்... சரவெடி கேப்டன் சுப்மன் கில்..!

ஆர்எஸ்எஸ் சிந்தனையின் ஊற்றுக்கண்

நவீன ‘தேசிய அரசு’ குடியுரிமையைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஹிந்து தேசியத்தின் மையத் தூணாக ஹிந்து மதம் மட்டுமே இருக்கும். ‘குருஜி’ என்று ஆதரவாளர்களால் அழைக்கப்பட்ட, ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது ‘சர்-சங்க-சாலக்’ (1940-1973) எம்.எஸ். கோல்வால்கர், ‘நாம் – நமது வரையறுக்கப்பட்ட தேசியம்’ என்ற நூலில் பின்வருமாறு எழுதுகிறார்:

“ஹிந்துஸ்தானத்தில் வாழும் ‘அன்னிய இனங்கள்’ ஹிந்து கலாசாரத்தையும் மொழிகளையும் ஏற்றுப் பின்பற்ற வேண்டும், ஹிந்து மதத்துக்கு மரியாதை செலுத்தவும் உயர்வாகக் கருதவும் கற்றுக்கொள்ள வேண்டும், ஹிந்து இனத்தையும் கலாசாரத்தையும் புகழ்ந்து வணங்குவதைத் தவிர வேறு எதையும் கருதக்கூடாது; அதாவது ‘அவர்கள்’ (அன்னிய இனத்தவர்) தங்களுடைய தனி அடையாளத்தைக் கரைத்துக் கொண்டு ஹிந்து இனத்துடன் இணைந்துவிட வேண்டும்; ஹிந்து ராஷ்டிரத்துக்குக் கட்டுப்படுவதாக இருந்தால் தொடர்ந்து இங்கு வசிக்கலாம், இல்லையென்றால் எந்த சிறப்புரிமைகளையும் கோரக் கூடாது, தங்களுக்கு ‘தனி கவனிப்பு’ தரப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது, குடிமக்களாக இருக்கும் உரிமையைக்கூட எதிர்பார்க்கக் கூடாது”.

ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்|‘ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் –புறக்கணிப்பு வேண்டாம்’

ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் மிகவும் மதிக்கப்படுபவர் கோல்வால்கர், ஆர்எஸ்எஸ் சிந்தனையின் ஊற்றுக்கண் அவரே. ஹிந்து ராஷ்டிரம் தொடர்பான தனது கோட்பாட்டை ஆர்எஸ்எஸ் மாற்றிக்கொண்டதற்கான சான்று எதுவும் இதுவரை இல்லை. அதற்கும் மாறாக, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடிமக்கள் சட்ட திருத்தம் (சிஏஏ) ஆகியவற்றுக்கு வெளிப்படையாக உரத்த குரலில் ஆதரவு வழங்கியது. வங்கதேசத்திலிருந்து ‘சட்ட விரோதமாக’ இந்தியாவுக்குள் குடியேறியவர்களையும் ரோங்கியா இன முஸ்லிம்களையும் மீண்டும் அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் அரசின் முயற்சிகளை ஆதரிக்கிறது. (வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாகக் குடியேறியவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் ஹிந்துக்கள் என்பது தெரிந்ததால்தான் ‘தேசியக் குடிமக்கள் பதிவேடு’ திட்டத்தை அமல் செய்யும் வேகத்தைக் கைவிட்டது ஒன்றிய அரசு.)

மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரண்டாவது முறையாக 2019-இல் ஆட்சிக்கு வந்தவுடன் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் மீது நடவடிக்கையைத் தொடங்கியது;

அரசமைப்புச் சட்டத்தின் 370 (1) (டி) ஆகிய பிரிவுகளைப் பயன்படுத்தி, அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை செல்லாததாக்கிய செயல் விசித்திரமானது மட்டுமல்ல… அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் ‘சந்தேகத்துக்கும்’ உரியது. ‘அரசமைப்புச் சட்டத்தின் 368-வது பிரிவில் கூறியுள்ளபடி நடைமுறைகளைப் பின்பற்றாமல், காஷ்மீர் மாநிலம் தொடர்பாக அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டமானது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இருந்தும், மற்றொரு விளக்கம் மூலம் ஒன்றிய அரசைக் காப்பாற்றியது; ‘அரசமைப்புச் சட்டத்தின் 370 (1) (டி) பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது ஜம்மு – காஷ்மீரைப் பொருத்தவரையில் அமலில் இருந்த 370-வது பிரிவை ரத்து செய்வதில் அதே விளைவை ஏற்படுத்திவிட்டது’ என்று கருத்து தெரிவித்தது. அதே வேளையில் உச்ச நீதிமன்றம், குழப்பங்களுக்கு விளக்கம் பெறாமல் - பல கேள்விகளுக்கு விடையே இல்லாமல் விட்டுவிட்டது. 370-வது பிரிவை ரத்து செய்ய உரிய சட்ட நடைமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டாலும், தான் ஏதோ சரியான வகையில் செயல்பட்டுவிட்டதைப் போல பீற்றிக்கொள்ளும் உரிமையை ஒன்றிய அரசு இதனால் பெற்றது.

ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்..| தரவுகள் அடிப்படையில்தான் விமர்சனம்!

‘400’ இலக்கு: அவமானகரமான தோல்வி

தன்னுடைய தலைமையிலான பத்தாண்டு ஆட்சி நாட்டின் ‘பொற்காலம்’ என்று தவறாக முடிவு கட்டிய பிரதமர் மோடி, 2024 ஏப்ரல் மக்களவை பொதுத் தேர்தலின்போது பாரதிய ஜனதாவுக்கு மட்டும் ‘400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி’ என்று நிர்ணயித்து அதை வெளிப்படையாக அறிவித்து பிரசாரம் செய்து அதை எட்ட முடியாமல் அவமானகரமான வகையில் தோல்வி அடைந்தார். ‘அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம்’ என்று கூறி இந்தியா கூட்டணி உணர்ச்சி பொங்க தேர்தலில் எதிர் முழக்கமிட்டு உறுதியுடன் போட்டியிட்டது. மக்கள் அதை ஏற்று, பாஜக தலைமையிலான கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தாலும் அந்தக் கட்சி எதிர்பார்த்த ‘400 தொகுதிகளில் வெற்றி’ என்பது கிடைத்துவிடாமல் வாக்களித்தனர். பாஜகவுக்கு 240 தொகுதிகளில் மட்டும் வெற்றி கிட்டியது, அது மக்களவையில் ‘அறுதிப் பெரும்பான்மை’ வலுவைவிடக் குறைவானது. அந்தத் தடை தான், விரும்பியபடி அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி விடாமல் மோடியின் கையைக் கட்டிப் போட்டிருக்கிறது – இதுவரையில்.

ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்|மோடியின் 11 ஆண்டு ஆட்சி: ஓர் பகுப்பாய்வு!

இந்த முடிவால் சிறிதும் கலங்கிவிடாமல் ஆர்எஸ்எஸ் தனது இலக்கை அடையும் முயற்சிகளைத் தொடர்கிறது:

Ø இதன் முதல் கணைதான், போலி ஜனநாயக முழக்கமான ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’. ஏற்கெனவே எழுதப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை நாடு முழுவதும் சுற்றி வந்து தேவைப்படும் கருத்துகளைக் கோர்த்து அறிக்கையாகத் தயாராகி வருகிறது – ‘உரிய நேரம் வரும்போது’ ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான மசோதாக்கள் கொண்டுவரப்படும்.

Ø அடுத்த கணையை ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே தொடுத்திருக்கிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் ‘மதச்சார்பற்ற – சோஷலிச’ என்ற வார்த்தைகளைச் சேர்த்ததே அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் என்று கூறி, அவற்றை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். காங்கிரஸும் பிற அரசியல் கட்சிகளும் அந்த கோரிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘அவ்விரு வார்த்தைகளும் ஆறாத புண்கள்’ என்று கூறி குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கண்டித்திருக்கிறார். ஹொசபலே இப்படியொரு கோரிக்கையை முன் வைத்திருப்பதும் தன்கர் அதில் தானாக முன்வந்து கருத்து தெரிவித்திருப்பதும் பலருடைய புருவங்களையும் உயர்த்தியுள்ளன.

ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்.. | ‘ஒன்றுபட்ட’ சீனா - பாகிஸ்தானுடன் போர்!

வகுப்புவாதத் தீயைக் கடைய…

ஹிந்து ராஷ்டிர ஆதரவாளர்களுக்கு ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையே அருவருப்பு தரும் சொல்லாக இருக்கிறது; வெவ்வேறு மதங்களும் கலாசாரங்களும் உள்ள ஜனநாயக நாடு மதச்சார்பற்றதாக இல்லாமல், வேறு எப்படிப்பட்டதாக இருக்க முடியும்? பிரெஞ்சுக்காரர்களை நான் மிகவும் மதிக்கிறேன், பெரும்பான்மையினர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்தாலும் மதச்சார்பின்மையில் நெருப்பாக இருக்கின்றனர். ‘சோஷலிசம்’ என்பதற்கு நிலையான பொருள் ஏதுமில்லை, சமூகநல அரசைக் குறிக்கவும் அந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இந்தியா சமூகநலன் காக்கும் அரசு என்பதை பாரதிய ஜனதாவால் கூட மறுக்க முடியாது.

‘மதச்சார்பற்ற – சோஷலிச’ என்ற வார்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையை எந்த வகையிலும் மாற்றிவிடவில்லை. உச்ச நீதிமன்றம் 1973-இல் ஒரு வழக்கின்போது, மதச்சார்பின்மைதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை என்றும் சோஷலிசம் என்பது இந்திய அரசின் கொள்கையில் வழிகாட்டு நெறிகள் அனைத்திலும் ஊடுருவிப் பாய்ந்திருக்கிறது என்று சொன்னது. 1980-லும் அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

தத்தாத்ரேய ஹொசபலேவின் கோரிக்கை அரசமைப்புச் சட்டத்தின் எந்தக் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, சமூகத்தின் தேவையைக் கருதியும் அல்ல; வெவ்வேறு வகுப்பினரிடையே மோதலைத் தூண்டவும் வகுப்புவாத நெருப்பைக் கடையவும்தான்.

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், அஇஅதிமுக, லோக் ஜனசக்தி (எல்ஜேபி), மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (ஷிண்டே பிரிவு) மற்றும் ஆர்எஸ்எஸ்- பாஜகவை ஆதரிக்கும் பிறகு கட்சிகள் அனைத்தும் இந்த கோரிக்கைக்குத் துணை போனால் அது அந்தக் கட்சிகளின் அடிப்படைக் கொள்கைக்கே துரோகம் செய்வதாகும். நிச்சயம் வெல்லக்கூடிய இந்தப் போராட்டத்துக்கு ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் தயாராக வேண்டும்.

ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும் | ஒரு பக்கம் சீனா, மறுபக்கம் USA.. சுற்றி ராஜதந்திரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com