PilotSuicide என எப்படி சொல்வீர்கள்? ஊகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு.. விமர்சிக்கப்படும் அறிக்கை
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12ம் தேதி லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மருத்துவ பயிற்சி மையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்தனர். விமானம் விழுந்ததில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்ற ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) முதற்கட்ட விசாரணையை நடத்தியது. அதன் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணை அறிக்கையில்வெளியான சில முக்கியமான குறிப்புகள்:
விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே இரு என்ஜின்களும் செயலிழந்தன.
எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் இரண்டு ஸ்விட்சுகளும் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரன் நிலையில் இருந்து கட்-ஆஃப் நிலைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
சிறிது நேரத்திலேயே ஸ்விட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டாலும் விமானம் மீண்டும் உந்துதலை அடையும் முன்பே விபத்துக்குள்ளானது.
வாய்ஸ் ரெக்கார்டர் (Cockpit Voice Recorder) பகுப்பாய்வில், ஒரு விமானி “ஸ்விட்சை ஏன் அணைத்தீர்கள்?” என்று கேட்பதும், மற்றவர் “நான் அவ்வாறு செய்யவில்லை” என்று பதிலளிப்பதும் பதிவாகியுள்ளது.
ஆனால், அவசர அழைப்பு மற்றும் காக்பிட்டில் பதிவு செய்யப்பட்ட உரைகளில் எவை கேப்டன் கூறியவை, எவை முதல் உதவியாளர் (First Officer) கூறியவை என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை. மேலும், அந்த உரையாடலுக்கு முன்னும் பின்னுமான உரையாடலையும் விவரிக்கவில்லை. அதோடு காக்பிட் குரல் (CVR) பதிவின் முழு டிரான்ஸ்கிரிப்டையும் அறிக்கையில் சேர்க்கவில்லை. இத்தகைய சூழலில்தான் முதற்கட்ட விசாரணை அறிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த அறிக்கையை நிராகரித்து இந்திய வணிக விமானிகள் சங்கம் மற்றும் இந்திய விமானிகள் சங்கம் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.
இந்திய வணிக விமானிகள் சங்கம் (ICPA) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விமானி வேண்டுமென்றே விபத்திற்கு உள்ளாக்கினார் (pilot suicide) என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இதுபோன்ற கூறுகள் உண்மையைப் புறக்கணிக்கின்றன மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த வலியை ஏற்படுத்துகின்றன. சரிபார்க்கப்பட்ட ஆதாரங்கள் இல்லாமல் pilot suicide என்று கூறுவது தொழிலின் கண்ணியத்திற்கு அவமானம் விளைவிக்கும் செயலாகும்.
AI171 விமானத்தின் பணியாளர்கள் கடுமையான சூழ்நிலைகளில் தங்கள் பயிற்சி மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டனர். அவர்கள் ஊகத்தின் அடிப்படையிலான அவதூறுகளைப் பெறக்கூடாது. ஆதரவைப் பெற வேண்டும். நாங்கள் ஏர் இந்தியா விமானத்தின் விமானிகளுக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்குகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.
இந்திய விமானிகள் சங்கம் இதுதொடர்பாகக் கூறுகையில், “தகுதியான நபர்கள் விசாரணையில் இல்லை. விமானிகள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படும் நோக்கத்துடன் விசாரணை செய்யப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.
இத்தகைய சூழலில், முதற்கட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்ட தகவல்களை மட்டுமே அடிபடையாகக் கொண்டு எந்த ஒரு முடிவுக்கும் வருவது பொருத்தமானது அல்ல என விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உயரதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். விசாரணை அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது நிறைய மாறக்கூடும் என்றும் தெரிவித்தனர்.