ஒரே நாளில் ரூ.990 உயர்ந்த சிலிண்டர் விலை.. 3 மாதத்தில் 81% உயர்வு! கூடும் உணவு விலை!
மேற்கு ஆசியப் போர்ச் சூழ்நிலை காரணமாக வணிகப் பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.990 வரை உயர்ந்து, மூன்று மாதங்களில் 81% உயர்வை எட்டியுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் விலை 3,000 ரூபாயை கடந்துள்ளது. இதனால் உணவகங்கள், சிறு வணிகர்கள் கடும் சுமையை எதிர்கொண்டு, உணவுப் பொருட்கள் விலை மற்றும் பணவீக்கம் மேலும் உயரும் அபாயம் உருவாகியுள்ளது.
வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் கடந்த மாதத் தொடக்கத்தில் வணிகப் பயன்பாடு சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 990 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து தற்போது 3,237 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் 993 ரூபாய் உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டர் 3,071 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படுகிறது. மும்பையிலும் 993 ரூபாய் உயர்ந்து 3,024 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் 994 ரூபாய் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 3,202 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான இந்த விலை உயர்வால் உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
வர்த்தக பயன்பாட்டு எரிவாயு விலை உயர்வால் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் செலவுகள் அதிகரிக்கும். இதன் தாக்கமாக உணவுப் பொருட்களின் விலை மீண்டும் உயரக்கூடும் நிலை உருவாகியுள்ளது. இதனால் வரும் நாட்களில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தி காட்டம்..
சிலிண்டர் விலை உயர்வு குறித்து பேசியிருக்கும் ராகுல் காந்தி, “இன்று வணிக எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.990 அதிகரித்துள்ளது. இதுவே ஒரு நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு. இதுதான் நீங்கள் செலுத்தும் 'தேர்தல் பில்'. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை சிலிண்டர் விலை ரூ.1,380 அதிகரித்துள்ளது. இது வெறும் 3 மாதங்களில் 81% அதிகரிப்பு” என தெரிவித்துள்ளார்.
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஒருசில ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தப்பட்டுள்ளது. சென்னையில் சில உணவகங்களில் பிரியாணி விலையில் ரூ.10 உயர்வு, பரோட்டா ரூ.5 அதிகரிக்கப்பட்டுள்ளது.

