இனி பெட்ரோல் விலையை கணிக்கவே முடியாது... UAE கொடுத்த ஷாக்.. அவசர ஆலோசனையில் OPEC நாடுகள்!
ஓபெக் அமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகும் முடிவு உலக எண்ணெய் சந்தையை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 1967 முதல் உறுப்பினராக இருந்த அமீரகம், சுற்றுலா மற்றும் கட்டுமான முதலீடுகளுக்காக 2027க்குள் தினமும் 5 மில்லியன் பேரல் உற்பத்தி இலக்கை நிர்ணயித்துள்ளது. ஓபெக் கட்டுப்பாடுகள் மற்றும் சவூதி-அமீரக முரண்பாடுகள் இந்த பிரிவுக்கு காரணமாக கூறப்படுகின்றன.
1960-ஆம் ஆண்டு எண்ணெய் உற்பத்தியில் தங்கள் அதிகாரத்தை உறுதிசெய்ய ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, வெனிசுலா ஆகிய எண்ணெய் உற்பத்தி நாடுகள் இணைந்து ஒபெக் (OPEC) அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பில் 1967-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் உறுப்பினராகச் சேர்ந்தது.
தற்போதைய நிலையில் இந்த அமைப்பில் அல்ஜீரியா, நைஜீரியா, லிபியா, காபோன், எக்குவடோரியல் கினியா, காங்கோ குடியரசு ஆகிய நாடுகளும் உறுப்பினராக உள்ளன. உலகளவில் கச்சா எண்ணெய் விலையை இந்த நாடுகள் எடுக்கும் முடிவுகளே நிர்ணயித்து வருகிறது.
இந்த சூழலில், இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுலா, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான வருமானத்தை திரட்ட 2027-ஆம் ஆண்டிற்குள் ஒரு நாளைக்கு 5 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், ஓபெக் அமைப்பின் விதிகள், அமீரகத்துக்கு தடையாக இருந்தது.
அதே போல கடந்த சில ஆண்டுகளாக ஓபெக் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் சவூதி அரேபியாவுக்கும் -ஐக்கிய அரபு அமீரகத்தும் இடையே பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதுவே ஓபெக் அமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகுவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஓபெக் அமைப்பின் கூட்டத்துக்கு அவசர அழைப்பு உறுப்பு நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியதால் மூலம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிக்கமுடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னர் இந்த விலை நிலவரம் ஒபெக் நாடுகளை சார்ந்தே இருந்தது. ஆனால் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் தன்னிச்சையாக கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தாலோ, குறைத்தாலோ அது சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் அங்கோலா, கத்தார், இந்தோனேசியாமற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகள் ஏற்கனவே இந்த அமைப்பிலிருந்து கடந்த ஆண்டுகளில் விலகின என்பது குறிப்பிடத்தக்கது.

