‘அசைவத்திற்கு NO.. எப்போதும் சண்டை..’ காதலன் கொடுமையால் கோரக்பூர் முதல் பெண் விமானி விபரீத முடிவு!
கோரக்பூரின் முதல் பெண் விமானி
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர் சிருஷ்டி துலி (25). கோரக்பூரின் முதல் பெண் விமானி இவர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் கௌரவிக்கப்பட்டவர்.
இவர் டெல்லியில் வணிக பைலட் உரிமத்திற்கான பயிற்சியில் இருந்தபோது, ஆதித்யா பண்டிட் (27) என்பருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. ஆதித்யா பண்டிட்டும் விமானியாக பயிற்சி பெற்று வந்துள்ளார். சிருஷ்டி தனது பயிற்சியை முடித்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். பின் 2023 ஆம் ஆண்டு மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு ஆதித்யாவும் வசித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் மும்பை அந்தேரியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார் துலி. பின் தனது தாயிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்குப்பின் அவருக்கும் அவர் காதலித்து வந்த ஆதித்யா பண்டிட்டுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திங்கள் அதிகாலை 1 மணியளவில் ஆதித்யா டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அசைவ உணவை உண்ணக்கூடாது என சண்டை
பின்னர், ஆதித்யாவிற்கு போன் செய்த துலி, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். இதனால் டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புக்குத் திரும்பிய ஆதித்யா, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின், கதவை திறக்கும் சாவி செய்பவரை அழைத்து கதவைத் திறந்து பார்த்தபோது துலி மூச்சு பேச்சற்றுக் கிடந்துள்ளார். தொடர்ந்து, மாரோலில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனைக்கு ஆதித்யா அவரைக் கொண்டு சென்றுள்ளார். சிருஷ்டி துலியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
போவாய் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துலியின் உறவினர் இதுதொடர்பாக ஆங்கில ஊடகமொன்றில் கூறுகையில், “கடந்த ஆண்டு நவம்பரில் எனது காரில் என்னுடைய மகள் ராஷியும், சிருஷ்டி துலி மற்றும் அவரது காதலருமான ஆதித்யாவும் ஷாப்பிங் சென்றுள்ளனர். அப்போது துலிக்கும் ஆதித்யாவுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. எனது மகள் முன்னே சிருஷ்டியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார் ஆதித்யா.
கடந்த மார்ச் மாதத்தில் இருவரும் குருகிராமில் இரவு உணவிற்கு ராஷி மற்றும் அவர்களது நண்பர்களுடன் சென்றுள்ளனர். அப்போது சிருஷ்டியும் மற்றவர்களும் அசைவ உணவை உட்கொள்ள வேண்டும் என கூறியபோது மற்றவர்கள் முன் ஆதித்யாவை கடுமையாக திட்டியுள்ளார். இறுதியில் இவர்கள் இருவர் மட்டும் சைவ உணவை உட்கொள்ளச் சென்றுள்ளனர். சற்று நேரத்தில் ராஷிக்கு போன் செய்த சிருஷ்டி, ஆதித்யா தன்னை சாலையிலேயே விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். சிருஷ்டி ராஷியிடம், இந்த உறவில்தான் கஷ்டப்படுவதாகவும், ஆதித்யாமேல் கொண்ட அன்பினால் அவரை விலக முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
செல்போன் எண் ப்ளாக்
சில தினங்களுக்கு முன் கூட, ஆதித்யா தனது குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என சிருஷ்டியை அழைத்துள்ளார். ஆனால், அன்று பணி நிமித்தம் காரணமாக வரமுடியாத சூழல் இருந்தபோதும் ஆதித்யா தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளார். முடிவில், சிருஷ்டியின் எண்ணை 10 முதல் 12 நாட்கள் வரை ப்ளாக் செய்துள்ளார். இதன் காரணமாக சிருஷ்டி கவலையில் இருந்ததார்” என தெரிவித்துள்ளார். மேலும், சிருஷ்டி துலி தற்கொலை செய்யப்போவதாக கூறியபோது, ஆதித்யா ஏன் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை; ஆதித்யா பல தடயங்களை மறைத்துள்ளார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். அற்ப காரணங்களுக்காக தொடர்ச்சியாக சண்டையும், அடிக்கடி சிருஷ்டியின் எண்ணை ப்ளாக் செய்வதும் நிகழ்ந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் ஆதித்யாவை குற்றம்சாட்டியதை அடுத்து அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 108ன் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிருஷ்டி துலி உயிரிழந்து கிடந்த அறையில் தற்கொலைக் கடிதம் எதும் கிடைக்கவில்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை சிருஷ்டி துலி தற்கொலை செய்துகொண்டார் என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆதித்யா பண்டிட் நவம்பர் 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் இதுதொடர்பாக கூறுகையில், கடந்த மாதம் மட்டும் சிருஷ்டியின் வங்கிக் கணக்கில் இருந்து ஆதித்யாவுக்கு ரூ.65,000 பணப் பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.