ஒரே பிடி பஞ்சாப் மட்டுமே... அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஆம் ஆத்மி தீவிரம்..!
பஞ்சாப் ஆம்ஆத்மி MLAக்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை
பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் உள்ளிட்ட பஞ்சாப் மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை இன்று சந்திக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். எம்.பி.க்கள் ராகவ் சாதா மற்றும் சந்தீப் பதக் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. பஞ்சாப் ஆம் ஆத்மியில் தீவிரமடைந்த உட்கட்சிப் பூசல் காரணமாகவே இச்சந்திப்பு என கூறப்பட்டாலும், இது வழக்கமான சந்திப்பு என ஆம் ஆத்மி எம்பி மல்விந்தர் சிங் காங் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஒரு கட்சி தொடர்ச்சியான செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற கூட்டங்கள் தொடர்ச்சியான இடைவெளிகளில் நடத்தப்படுகின்றன. கட்சியின் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டுதான் எதிர்கால உத்திகள் வடிவமைக்கப்படுகின்றன. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலுடன் விவாதிக்க உள்ளார்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கிட்டத்தட்ட 30 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா, 30 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தனது கட்சியுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் எம்எல்ஏக்களைச் சந்திக்க இருக்கிறார்.
கட்சி எதற்காக உடையப்போகிறது?
பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏவும், அமைச்சருமான பல்ஜித் கவுர் இதுதொடர்பாகக் கூறுகையில், “கட்சி எதற்காக உடையப்போகிறது? டெல்லி தேர்தலில் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம். பாஜக வேறு வழிகளைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றது என்பது வேறு விஷயம். எங்கள் குறைபாடுகளை நாங்கள் சமாளித்து சிறப்பாக செயல்படுவோம். கட்சியை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது குறித்து நாங்கள் விவாதிப்போம்” எனத் தெரிவித்தார்.
கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு இடையேயான சந்திப்பில், டெல்லி சட்டமன்ற தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான உத்திகளைத் தயாரிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் ஏற்பட்ட தோல்வி, பஞ்சாபில் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான ஆம் ஆத்மியின் கவனத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஏனென்றால், டெல்லியில் அடைந்த தோல்வியை அடுத்து, ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்றால் அது பஞ்சாப் மட்டுமே. அங்கும் தோல்வி அடைந்தால் ஆம் ஆத்மியின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் அபாயம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆளும் ஒரே மாநிலம் பஞ்சாப்
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களை வென்றது, அதே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை மட்டுமே பெற்றது. தேர்தல் பரப்புரையில் பஞ்சாப் முதல்வர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டனர். ஆம் ஆத்மி அரசின் தலைமையில் பஞ்சாப் பெற்ற பயன்கள் குறித்து அந்த பரப்புரைகள் அமைந்திருந்தன. ஆனாலும், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை கண்ட நிலையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
பஞ்சாபில் 2022 சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 117 இடங்களில் 92 இடங்களைப் பிடித்து மகத்தான வெற்றியைப் பெற்றது. இருப்பினும் தற்போது பஞ்சாப் ஆம் ஆத்மி தலைமை மீது கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் , அர்விந்த் கேஜ்ரிவால் பஞ்சாபில் தனது கவனத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. பஞ்சாப் லூதியானா சட்டமன்றத் தொகுதி தற்போது காலியாக இருப்பதால், கெஜ்ரிவால் அங்கிருந்து போட்டியிட்டு பஞ்சாப் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது குறித்தும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
தற்போது ஆம் ஆத்மி ஆளும் ஒரே மாநிலம் பஞ்சாப் என்பதால் இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வந்ததாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பஞ்சாபில் மாநில பட்ஜெட் அறிவிப்புக்கான நாள் நெருங்குவதால், தேர்தலைக் கருத்தில்கொண்டு ஆம் ஆத்மி முக்கிய கொள்கை முடிவுகளை அறிமுகப்படுத்தலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.