பரபரப்பைப் பற்றவைத்த செங்கோட்டையன்.. 1977-லேயே தொடங்கிய வெற்றிப் பயணம்.. யார் இவர்? முழு விபரம்!
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு, அத்திகடவு அவினாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது, அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
மறைந்த முதல்வர்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களைப் பயன்படுத்தாததே தான் அந்த விழாவிற்குச் செல்லாததன் காரணம் என செங்கோட்டையன் விளக்கமும் அளித்திருக்கிறார். அவரின் இந்த புறக்கணிப்பு அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்லாது, தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது.
இந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் செங்கோட்டையன் யார்? அவரின் அரசியல் பயணம் என்ன?.., விரிவாகப் பார்ப்போம்.
அதிகாரமிக்க செங்கோட்டையன்
அ.தி.மு.க போட்டியிட்ட முதல் பொதுத்தேர்தலான, 1977 முதல் 2021 வரை ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் செங்கோட்டையன். 1996 தேர்தலில் மட்டும் கோபிசெட்டிபாளையத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். 2001-ம் ஆண்டு அவருக்குக் கட்சியில் சீட் வழங்கப்படவில்லை. தவிர மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றிருக்கிறார்.
தொகுதியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கான உதாரணத்தை அவரது வெற்றியில் இருந்துகூட சொல்லலாம். கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 10 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், அதில் செங்கோட்டையன் மட்டுமே 8 முறை வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் மறைந்த தலைவர் கருணாநிதி, தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்ததாக அதிக முறை எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றவர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் செங்கோட்டையன் தான்.
அதுமட்டுமல்லாது, போக்குவரத்து, வருவாய், வனம், வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், பள்ளிக் கல்வி எனப் பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலகட்டத்தில், ஜெயலலிதா ஓபிஎஸ்க்கு அடுத்து மூன்றாம் தலைவராகவும், இரண்டாம் கட்ட அதிமுக தலைவர்களிலேயே அதிகாரமிக்க தலைவராகவும் வலம்வந்தவர்.
1991 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைத்து ஜெயலலிதா முதல்வரானபோது, செங்கோட்டையன் போக்குவரத்துத் துறை அமைச்சரானார். அதேவேளையில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர், கழக தலைமை நிலையச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் வகித்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு செங்கோட்டையன்தான் சசிகலாவால் முதல்வர் ஆக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக்கப்பட்டார்.
ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்தபோது, சசிகலா அணியில் செங்கோட்டையன்தான் அவைத்தலைவராக இருந்தார். சசிகலா சிறை சென்றபோதுகூட அக்கட்சியின் அதிகார மையமாக ஐவர் அணி செயல்பட்டது. அதில், மிக முக்கியமானவர் செங்கோட்டையன். அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்தபிறகு கட்சியின் அவைத்தலைவராக செங்கோட்டையன்தான் நியமிக்கப்படுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஓரங்கட்டப்படுகிறாரா செங்கோட்டையன்
ஒரு காலக்கட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு குருவாக அறியப்பட்டவர், தற்போது அவராலேயே ஓரங்கப்படும் நிலையில் செங்கோட்டையன் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். புதிய தலைமுறையில் இதுதொடர்பாக பேசிய மூத்த பத்திரிகையாளர்கள் கூட, நிகழ்வில் கலந்துகொள்ளாததற்கு செங்கோட்டையன் கூறும் காரணங்கள் பொருத்தமானதாக இல்லையென்றே கூறினர்.
முன்னாள் அமைச்சர்கள் சிலரின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதால் கட்சிக்குள் சிலருக்கு இபிஎஸ் மேல் அதிருப்தி இருக்கிறது என்றும் அதில் செங்கோட்டையனும் ஒருவர் என்றும் கருத்துகள் நிலவுகின்றன.
தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், இரண்டாம் இடத்திற்கான போட்டிதான் பலமாக உள்ளது. நாங்கள்தான் எதிர்க்கட்சி என பாஜகவும் நாதகவும் மீண்டும் மீண்டும் கூறும் நிலையில், அதிமுக தனது உட்கட்சிப் பூசலை சரிசெய்துகொண்டு, முழு பலத்துடன் 2026 தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.