Exclusive | “பாடல்களும் புத்தகங்களும் வளர்த்த பிள்ளை நான்” - பாடலாசிரியர் தாமரை
பாடலாசிரியர் தாமரை.. காதலிப்பவர்களின் அந்தந்தக் கண மகிழ்வை பாடல்களாக எழுதியதோடு, அவர்களின் எதிர்கால கனவுகளையும் வரிகளாக எழுதியவர். இந்நொடி காதல் கொடுக்கும் மகிழ்வில் காதலர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், அவர்களின் எதிர்காலமும் மகிழ்வுடன்தான் இருக்கும் என திரைக்காதலர்களுக்கு எழுதினார். அதன்மூலம், அப்பாடலைக் கேட்கும் ரசிகர்களின் கனவுகளையும் வண்ணமயமாக்கினார்.
யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரம் தோறும் செதுக்கிட வேண்டும்... என எழுதியவர்.
‘அக்கம் பக்கம் பார்’ பாடலில் கூட, ‘பாதி கனாவினில் தூங்கி விடு மீதியை வாழ்ந்திடலாம்’ என எந்தப் பாடலாக இருந்தாலும் நம் கனவு வாழ்க்கையைத்தான் நாம் வாழ்வோம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தவர். இப்படி ஏராளமாகச் சொல்லலாம்.
இயக்குநர் கௌதம் மேனன் - பாடலாசிரியர் தாமரை கூட்டணியில் உருவான வரிகள்தாம் தமிழ்நாட்டில் பல காதல்களுக்கு எல்லாமே! அப்படிப்பட்ட பாடல்கள் உருவான விதம் தொடர்பாக பாடலாசிரியர் தாமரையிடமே பேசிவிட்டால் இந்தக் காதலர் தினம் முற்றுப்பெற்றுவிடும் எனத் தோன்றியது... அழைத்தோம்.. கடும் பணிச்சூழலிலும் அழகான தமிழில் வார்த்தைகளைக் கோர்த்தார்...
பாடலாசிரியராக தாமரை ஏராளமாக எழுதியுள்ளார். ஆனால், அறிமுக காலகட்டத்தில் சில அழுத்தங்கள் இருந்திருக்கும். எந்தப் பாடலில் இருந்து அழுத்தங்கள் நீங்கி உங்கள் பாணியில் எழுத ஆரம்பித்தீர்கள்?
1997ல் வெளிவந்த முதல் பாடலுக்கும், 2001ல் வெளிவந்த வசீகராவிற்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 20 பாடல்களை எழுதி இருப்பேன். அப்போதெல்லாம் என்ன எழுதினாலும் இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நன்றாக இருக்கும் வரிகளை ஏன் வேண்டாமென்கிறார்கள் எனத் தோன்றும். பின்னாட்களில் ஓரளவு புரிந்தது. அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் பாடலில் வரவேண்டும் என நினைத்திருக்கிறார்கள், அதில் தவறில்லை. ஆனால், பெண் கவிஞராக, முக்கியமாக பெண்ணாக ஒரு பாடலை அணுகும்போது வெளிப்படும் வரிகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லையோ எனத் தோன்றும். ஏனெனில், அதுவரை கவிஞர், இசையமைப்பாளர், இயக்குநர் என எல்லோரும் ஆண்களாகத்தானே இருந்தார்கள்! பெண்களின் மனவோட்டத்தை அவர்கள் புரிந்துகொள்ள முயலவேயில்லை. அவர்கள் என்ன நினைத்தார்களோ அதைத்தான் ஆண் கவிஞர்கள் எழுதினார்கள். அதனால், அவர்களுக்கிடையே ஒத்துப்போய்விட்டது. என் பாடல் ஏற்புடையதாக இல்லை.
கௌதம் மேனனிற்கு நான் எழுதிய முதல் பாடலே வசீகராதான். ‘மின்னலே’ அவருக்கு முதல் படம். எனக்கு 20ஆவது படம். உரையாடலின் இடையே கௌதமிடம், ‘நான் நினைக்கும் பாணியில் பாடல் எழுத வேண்டும்' எனச் சொன்னேன். 'ஏன் இந்தப் பாடலிலேயே அப்படி எழுதலாமே' என்றார். எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. ஏனென்றால், வசீகராவில் தென்றல், நிலவு, வானவில் என வழக்கமான சொற்கள் ஏதும் இருக்காது. பாடலை படித்துக் காட்டியதும், ‘பெண்கள் இப்படித்தான் நினைப்பார்களா?’ எனக் கேட்டார். ‘ஆமாம்' என்றேன். அவ்வளவுதான்.. ஒரு வரி கூட மாற்றவில்லை. நான் எழுதியதெல்லாம் அப்படியே வந்தது. வசீகரா பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்ததற்கு அதுவும் ஒரு காரணம்.
தாமரை - ஹாரிஸ் - கௌதம் மூவரும் சேர்ந்தாலே காதலர்களுக்குக் கொண்டாட்டம்.. உங்கள் கூட்டணியில் ஒரு பாடல் எப்படி உருவாகும்?
பொதுவாக நாங்கள் மூன்று பேரும் இணைந்து பணிபுரியும்போது பெரிதாகக் கருத்துவேறுபாடுகள் ஏதும் வரா. நானும் கௌதமும் பாடல்களுக்கான சூழல்கள் குறித்து முதலில் பேசிவிடுவோம். பின் கௌதம் ஹாரிஸ் உடன் இணைந்து மெட்டை உருவாக்குவார். ஆரம்பத்தில் மின்னலே, காக்க காக்க போன்ற சில படங்களுக்கு மெட்டமைக்கும்போது நானும் உடனிருந்திருக்கிறேன். பின்னர் மெட்டுகளை மட்டும் வாங்கிக்கொள்வேன்.
கௌதம் மேனன் படங்களில் பாடல்கள் எழுதும்போது பெரிய சுதந்திரம் கிடைக்கும். துருவ நட்சத்திரம் படத்தில் வரும் ‘நரைச்ச நெத்தி முடி’ பாடல் வரை 24 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறோம்.. நான் எழுதும் வரிகளில் தலையிடவே மாட்டார். இதன் காரணமாக மற்ற படங்களில் என்னால் செய்ய முடியாத பரிசோதனை முயற்சிகளை கௌதம் படங்களில் செய்ய முடிந்தது. எங்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் இப்போது வரை கேட்கப்படுவதற்கு இந்த முயற்சிகள் வெற்றி பெற்றதும் ஒரு காரணம்.
மாற்றுக்கருத்துகள் கொண்ட உரையாடல் நிகழ்ந்ததே இல்லையா?
எனக்கும் ஹாரிஸ்-க்கும் இடையில்தான் விவாதம் வரும். அவர் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். நான் எழுதிய சில வார்த்தைகளை ஓசைக்கு நயமாக இல்லை எனக் கூறி வேறு வார்த்தைகளைக் கேட்பார். நான் அந்த வார்த்தைகள்தாம் வேண்டும் என்பேன். எப்படியோ பெரும்பான்மை அடிப்படையில் நானும் கௌதமும் விரும்புவதை பாடலில் கொண்டு வந்துவிடுவோம். 'ஒன்றா ரெண்டா ஆசைகள்' பாடலில் ‘கலாபக்காதலா’ என்ற வார்த்தையை ஹாரிஸ் முதலில் வேண்டாம் என்றார். பின் நானும் கௌதமும் அந்த வார்த்தையின் அழகியல் குறித்து பேசிய பின்பு ஹாரிஸ் ஒப்புக் கொண்டார்.
வேறு ஓர் உதாரணமும் இருக்கிறது. ‘அனல்மேலே பனித்துளி’ பாடலில் ‘இரு இரு உயிர் தத்தளிக்கையில்… வழிசொல்லுமா கலங்கரையே…’ என்று எழுதி இருந்தேன். இதில் ‘தத்தளிக்கையில்’ எனும் சொல் தான்நினைத்த ஓசையில் இல்லை எனக்கூறி ஹாரிஸ் அந்த சொல்லை மாற்றச்சொன்னார். ஆனால், அந்த சொல்தான் பாடலில் அந்த இடத்தில் அந்தவுணர்ச்சியைக் கடத்த மிகச்சரியாக இருந்தது. எனவே நான் மாற்ற விரும்பவில்லை. இந்த விவாதம் எங்களுக்குள் பல நாட்கள் நடந்தது. இறுதியில் நான் ‘தத்தளிக்கையில்’ என்றே வைத்துவிட்டேன். அந்தச் சொல்லை ஹாரிஸ் மனக்குறையோடுதான் பதிவு செய்தார். ஆனால், முழு பாடலையும் கேட்கும்போது உணர்வுகள் மிகச்சிறப்பாக வெளிப்பட்டது புரிய வந்தது.
உரையாடல்களில் நீங்கள் சமரசம் செய்துகொண்ட அல்லது காட்சிக்காக மாற்றிக்கொண்ட வார்த்தைகள் ஏதும் இருக்கின்றவா?
இருக்கிறதே! ‘பார்த்த முதல் நாளே’ பாடலில்,
போகின்றேன் என நீ பல நூறு முறைகள்…
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்…
சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி…
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்…
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்… இவை வரிகள்.
இங்கு ‘கதவோரம்’ எனும் வார்த்தைக்கு மாற்றாக ‘நகராமல்’ என்ற வார்த்தையை எழுதி இருந்தேன். தனது கணவனை வழியனுப்ப வாயிலுக்கு வரும் பெண்ணும் ''நகர' மனமின்றி அதே இடத்தில் நிற்கிறாள். இதுதான் நான் எழுத நினைத்தது. ‘கதவோரம்’ என்பதை மாற்றுச் சொல்லாகத்தான் வைத்திருந்தேன். ஆனால், ஹாரிஸ்க்கும் கௌதமிற்கும் ‘கதவோரம்’ என்ற வார்த்தைதான் பிடித்திருந்தது. ‘கதவோரம்’ என்ற வார்த்தை காட்சிப்படுத்த மிக நன்றாக இருக்கும் என கௌதம் சொல்கிறார். வார்த்தையின் ஒலி நன்றாக இருக்கிறது என்கிறார் ஹாரிஸ். இந்த இடத்தில் சரியென்று நான் சமரசம் செய்து கொண்டேன். இப்படி செதுக்கிதான் ஒரு பாடலைக் கொண்டு வருவோம்.
உங்களது பாடல்களில் கதையை பாடலாகக் கேட்பதுபோல் இருக்கும். அதில், உவமையும் இருக்கும், கவிதையும் இருக்கும். இந்த பாணியை எப்படி கைக்கொண்டீர்கள்?
இதற்கு என் கற்பனை, இயல்பான தமிழார்வம் போன்றவை காரணமாக இருக்கலாம். தனிப்பட்ட திறமை என்றும் சொல்லலாம். நான் சிறுவயதில் இருந்தே அதிகமாக பாடல்களைக் கேட்டு வளர்ந்தவள். 60களில், 70களில் வந்த பாடல்கள் எல்லாம் வரிகளாக, காட்சிகளாக மனதில் படிமங்களாகவே படிந்திருக்கின்றன. எம்.எஸ்.வி, கண்ணதாசன், வாலி, டி.எம்.எஸ், பி.சுசிலா போன்றோரெல்லாம் மிகப்பிடித்தவர்கள். இரசிகையாக இவர்களது பாடல்களைக் கேட்டு, பாடலென்றால் எப்படி இருக்க வேண்டும் என மனதில் உருக்கொண்டுவிட்டது. ஒரு பாடலை எழுதும்போது வேறு உலகத்திற்குப் போய்விடுவேன். ஆணுக்கு எழுதும்போது ஆணாகவும், பெண்ணுக்கு எழுதும்போது பெண்ணாகவும் இருப்பேன்.
ஒரு பாடலை எழுதுவதற்கு நீங்கள் பின்பற்றும் முறைகள் என்ன?
பொதுவாக பாடல் எழுதும்போது சில கேள்விகள் எழும். அந்தப் பாடல் நடக்கும் காலம், நேரம்.. காதல் பாடல் என்றால் அந்த காதல் கைகூடுமா? கூடாதா? கல்யாணத்திற்கு முந்தைய காதலா? அல்லது தம்பதிக்குள் நிகழும் காதலா? அவர்களிடையே அதுவரை நடந்தது என்ன? இந்தப் பாடலுக்குப் பின் அவர்களுக்கு நடக்கப்போவதென்ன? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் எழும்.. யார் ஒளிப்பதிவாளர்? எங்கே படமாக்கப்போகிறீகள்? என்பது வரை இயக்குநரிடம் கேட்பேன். இந்த உரையாடலில்தான் பாடலை எப்படி எழுதப்போகிறோம் என்ற உத்தி பிடிபடும். கதையை முன்பே கேட்டுவிடுவதால் ஒரு படத்தில் கதாநாயகன் உயிரிழக்கப்போகிறார் என்பதுகூட எனக்குத் தெரியும். பாடலின் உச்ச உணர்வை ஒரு சொல்லில் அல்லது ஒரு வரியில், கேட்பவர்களுக்குக் கடத்த, கதையின் அழுத்தமான காட்சிகளை தெரிந்துகொள்வது அவசியம் என நினைக்கிறேன். எனவே, ஒரு படத்தில் ஒரு பாடலை மட்டுமே எழுதினால் கூட, முழு கதையையும் கேட்ட பின்பே எழுதுவேன். எப்போதும் அப்படித்தான்.
உதாரணத்திற்கு ஏதேனும் ஒன்றைச் சொல்ல முடியுமா?
சுப்ரமணியபுரம் படத்தில் ‘கண்கள் இரண்டால்’ பாடலில் வரும் ‘தடையில்லை சாவிலுமே உன்னோடு வர’ எனும் வரி கூட திரைப்படத்தின் இறுதிக்காட்சியை ஒட்டி எழுதியதுதான். அந்த பாடல் அவ்வளவு பெரிய வெற்றி அடையும் என்பதை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அக்காலகட்டங்களில், இறப்பு எனும் சொல்லை அமங்கலம் எனக் கூறி பாடலில் இடம்பெற விடமாட்டார்கள். ஆனால், நாங்கள் அந்த மரபை உடைத்தோம்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பாடல்கள் எப்போதும் கொண்டாட்டத்திற்கு உரியவை.. அந்தப் பாடல்கள் உருவாக்கத்தில் சுவாரஸ்யமாக ஏதும் இருக்கிறதா?
உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில்தானே
இரு துருவம் சேரும் அந்த ஓர் இடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை
அன்பே..... இவை வரிகள்
இங்கு நான் முரணாகத்தான் எழுதி இருப்பேன். இரு துருவம் சேரவே சேராது. அங்குதான் அவர்கள் சேர்ந்ததாகச் சொல்லி இருப்பேன். புவி ஈர்ப்பு என்பது இழுக்கும் விசை. அதன் மையத்தில் அவர்கள் பிரிந்தனர் என எழுதி இருப்பேன். படத்திலும்கூட, அவர்களிருவரும் பிரிய முடிந்திடாத இடத்தில்தான் பிரிவார்கள். இனி சேரவே முடியாது என்ற இடத்தில்தான் கதாநாயகி தனது காதலை ஒப்புக்கொள்வாள். இதைப் பாடலிலேயே கொண்டு வந்துவிட வேண்டும் என்றுதான் அந்த வரிகளை எழுதினேன்.
ஏ.ஆர். ரஹ்மானுக்கு நீங்கள் எழுதிய பாடல்கள் எல்லாம் தனி ரகம். அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்துச் சொல்லுங்களேன்?
ரஹ்மானுக்கு பாடல் எழுதுவது எப்போதும் புதுமாதிரியான அனுபவம். திடீரென அழைத்து திருக்குறள் சொல்லுங்கள் என்பார். ‘மன்னிப்பாயா’ பாடலில் வரும் குறள்களெல்லாம் பாடல் முடிவடைந்த பின்னர் சேர்த்தவை. அதேபோல், ‘மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்’ வரிகள் முதலில் பாடலில் இல்லை. பாடல் முழுமையான வடிவத்தை எட்டிய பின் திடீரென்று ரஹ்மான் அதற்கான இடத்தினை உருவாக்கினார். அதுதான் ரஹ்மானின் மேதமை.
‘பாதி கனாவினில் தூங்கிவிடு மீதிய வாழ்ந்திடலாம்’.. எதிர்காலம் குறித்தான கனவுகளோடு இருக்கும் பெண் மடோனா.. மெய் வாழ்க்கையில் பலரும் அப்படித்தான்.. முழு கதையையும் கேட்டதால் இம்மாதிரியான வரிகள் சாத்தியமாகிறதா?
'பாதிதான் கனவு; மிச்சத்தை வாழ்ந்து தீர்த்துவிடலாம்' என்பது எவ்வளவு பெரிய செய்தி! நலன் குமாரசாமி என்னிடம் கதை சொல்லும்போது, உங்களது வழக்கமான பாணி வேண்டாம் என்றார். சரி வேறு வழியில் எழுதிப் பார்ப்போமென்று எழுதியதுதான் இந்தப் பாடல். ஆக, எழுதுவது நானாகவே இருந்தாலும் இயக்குநர்களுக்கு ஏற்ப வரிகள் மாறுபடும். எனவே, உங்களுக்கும் விதவிதமான பாடல்கள் கிடைக்கின்றன.
உங்கள் காதல் பாடல்களில் வீடு குறித்தான விவரணைகள் அதிகம் வருகின்றனவே? உதாரணத்திற்கு, ‘என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்’, ‘பெண் உனை தேடும் எந்தன் வீடு’, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.. காரணத்தைத் தெரிந்துகொள்ளலாமா?
உளவியல் ரீதியாகவும் இதைச் பார்க்கலாம். ஆணின் அக உலகமும் பெண்ணின் அக உலகமும் வேறுவேறானவை. திருமணம் என்று வந்தால், தனக்கான வீட்டை எப்படி அமைக்க வேண்டும் என்றுதான் பெண் முதலில் யோசிப்பாள். ஆண் வீட்டைத் தவிர மற்றதை எல்லாம் யோசிப்பான். நானும் ஒரு வீட்டுப் பறவை.. அதிகம் வெளியில் செல்லமாட்டேன். எங்கேயாவது சென்றாலும் வீடு திரும்புவதே நோக்கமாக இருக்கும். எனவே, வீடு குறித்த வரிகள் பாடல்களில் அதிகம் வெளிப்படுகிறது போலும்.
அப்படியானால் பயணத்தைப் பற்றிய ‘யார் அழைப்பது?’ பாடல் எப்படி சாத்தியமானது?
திரைப்படங்களில் பயணங்களினூடே பாடல்கள் வந்ததுண்டு. பயணப் பாடல்களில் கதைகள் நகர்வதுண்டு. ஆனால், 'பயணத்தை' கருப்பொருளாக வைத்து பாடல் வந்தது கிடையாது. அது எழுத எனக்கு வாய்த்தது. பயணமே மேற்கொள்ளாத என்னை பயணம் குறித்து எழுதச் சொன்னால் என்ன செய்வேன். கற்பனைப் பயணம் தானே மேற்கொள்ள முடியும்!
அலைவார்
அவரெல்லாம் தொலைவார்
வசனம் தவறு
அலைவார்
அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல் பெரிது
அடங்காத நாடோடி காற்றல்லவா...
காற்றாகவே நான் மாறி மனக்கண்ணில் மேற்கொண்ட பயணம் பாடல் வரிகளாக வந்து விழுந்தன. எழுதி முடித்த எனக்கும், கேட்டு முடித்த இயக்குநர் திலீப்பிற்கும் பெரிய அலையடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது.
உங்களது வரிகளுக்கு உங்கள் வாசிப்பு எந்த அளவிற்கு கைகொடுத்துள்ளது?
நான் ஒரு புத்தகப்புழு.. வீட்டில் அவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றன. சிறுவயதில் இருந்தே புத்தகம் படிப்பதும், பாடல் கேட்பதும்தான் எனக்கு வேலைகள். புத்தகமும் பாடலும் வளர்த்த பிள்ளை நான்.. அந்த அத்திவாரத்தில்தான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. நன்றாக எழுத விரும்பினால் நிறைய படியுங்கள். இதுதான் என் அறிவுரை.
‘தமிழுக்காகவும், படைப்புகளுக்காகவுமே என் கற்பனை. வியாபாரத்திற்காக அல்ல’ என்பது உங்கள் கொள்கை. ஆனால், இன்றைய தலைமுறையில் ஆங்கிலம்தான் எல்லாமே என்று ஆகிவிட்டதே?
ஆங்கில வார்த்தைகள்தாம் இன்று தமிழாக பலர்மனதில் பதிந்துள்ளன. ஒரு தலைமுறையே ஆங்கிலம் கலந்துதான் பேசுகிறது. மொழி நம் கண் முன்னேயே சீரழிகிறது. அழிந்துவிடுமோ என்ற பயம் வருகிறது. மொழியை யார் காப்பாற்றுவது? நானும் நீங்களும்தான் காப்பாற்ற வேண்டும். நான் 28 ஆண்டுகளாகப் பாடல்கள் எழுதுகிறேன். நான் சொல்ல நினைத்த உணர்வுகளையெல்லாம் தமிழில்தான் சொல்லியுள்ளேன். ரசிகர்கள் என் பாடல்களைக் குறித்து உணர்வுபூர்வமாகப் பேசுகிறார்கள். ஆக, பாடல்களில் உணர்வைக் கடத்த முடியும்போது பேச்சில் முடியாதா? ரசிகர்களை கைகூப்பி ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன்.. ஆங்கிலம் கலவாத தமிழில் பேசுங்கள்..