‘இரவு 3 மணி.. இந்தியாவில் ஒருபோதும் இது முடியாது..’ சிங்கப்பூரில் பெண் பகிர்ந்த வீடியோ! #Viral
சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியப் பெண், இரவு 3 மணிக்கு பயமின்றி நடந்து செல்லும் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இந்தியாவில் இது சாத்தியமில்லாதது என அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது, பாதுகாப்பு உணர்வின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது.
சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு இந்தியப் பெண், இந்தியாவில் தன்னுடைய வீட்டில் பழகியதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு எளிமையான இரவு நேர பயணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். பொதுவாக பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாமல், தன்னால் எப்படி இரவில் பயணிக்கமுடிகிறது என்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வு இரவில் தனியாக நடப்பது போன்ற சாதாரணமான ஒன்றைக் கூட, இந்தியாவில் எப்படி அச்சுறுத்தும் ஒன்றாகவும், அசாதாரண ஒன்றாகவும் இருக்கிறது என்ற உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டார். அவருடைய இந்த பதிவு இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியப் பெண்ணான கிருத்திகா ஜெயின், அதிகாலை 3 மணிக்கு ஒரு காலியான சாலையில் தனியாக நடந்து செல்வதைக் காட்டும் வீடியோ இன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அமைதியான தெருக்கள், நிசபதமான சூழல் என அனைத்தும் இருந்தபோதும் ஜெயின் எந்தப் பயமும் இல்லாமல் அமைதியாக வீடு திரும்புவதை இந்த வீடியோ படம் பிடித்துள்ளது.
இந்த வீடியோவை பகிருந்திருக்கும் அப்பெண், ”இது அதிகாலை 3 மணி. என் வீட்டுக்கு நிம்மதியாக நடந்து செல்கிறேன். எந்த பயமும் இல்லை. யாரும் பின்தொடர்கிறார்களா என திரும்பி பார்க்கவில்லை. ஆனால் இந்தியாவில் இந்த நேரத்தில் தனியாக வெளியே செல்ல வேண்டும் என நினைத்து கூட பார்க்க மாட்டேன். சிங்கப்பூரில் இது லக்ஸரி அல்ல. சாதாரணமான ஒன்று. பெரிய கட்டடங்களோ, ஆடம்பரமான சூழலாலோ எனக்கு சிங்கப்பூரை பிடிக்க காரணமாக இருக்கவில்லை, மாறாக பாதுகாப்பு உணர்வுக்காகவே சிங்கப்பூர் நேசிக்க வைக்கிறது” என எழுதியுள்ளார்.
இவருடைய பதிவு இணையத்தில் விவாத்தை கிளப்பியுள்ளது. ஒருவர், ”சிங்கப்பூர் ஒரு தனித்துவமான மற்றும் மிகவும் பாதுகாப்பான நாடு. தண்டனைகளும் அபராதங்களும் கடுமையானவை, மேலும் நம் நாட்டை போல அல்லாமல், அவை விரைவாக வழங்கப்படுகின்றன. உலகின் பிற பகுதிகளும் சிங்கப்பூரைப் போலவே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என எழுதியுள்ளார்.
மற்றொருவர், ’ஒரு டீனேஜ் மகளின் தந்தையாகப் பேசுகிறேன், இதுபோன்ற மனப்பான்மையை ஊக்குவிப்பது முற்றிலும் பொறுப்பற்றதாக இருக்கிறது’ என எழுதியுள்ளார்.

