Shivank Avasthi
Shivank AvasthiPT WEB

இரண்டு வாரங்களுக்குள் அடுத்த நபர்.. கனடாவில் கேள்விக்குறியாகிறதா இந்தியர்களின் பாதுகாப்பு?

டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் அருகே சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர்.
Published on

கனடாவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றின் அருகே இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு வாரங்களுக்குள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இருவர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டிருப்பது கனடாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தபோதும் இந்த இரு கொலைகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்று காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

TORONTO UNIVERSITY
TORONTO UNIVERSITY PT WEB

கனடாவில் இருக்கும் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு முனைவர் பட்டப்படிப்பு படித்து வந்த, ஷிவாங்க் அவஸ்தி என்ற (20 வயது) மாணவர் பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்தின் அருகிலேயே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

டொராண்டோ பகுதி காவலர்கள் அளித்த தகவல்களின் படி, "ஹைலேண்ட் க்ரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலை அருகே செவ்வாய் கிழமை பிற்பகல் 3:34 மணியளவில் பலத்த காயங்களுடன் ஒருவர் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி காவலர்கள் அங்கு சென்று பார்த்ததில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மாணவர் அவஸ்தி கிடந்தார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்" எனர் தெரிவித்துள்ளனர்.

மேலும், "இந்த குற்ற சம்பவத்தை செய்த நபர் யார்? சம்பவத்திற்கான காரணம் என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. அருகில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில், மாணவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு குற்றவாளி தப்பி ஓடியதாக தெரிகிறது. இப்பகுதியில் உள்ள cctv கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளியை கைது செய்வோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக டொராண்டோ பகுதியில் உள்ள இந்திய துணை தூதரகம் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஷிவாங்க் அவஸ்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த கடினமான நேரத்தில் மாணவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Shivank Avasthi
Shivank AvasthiPT WEB

பல்கலைக்கழக மாணவர் ஒருவர், கல்வி நிலைய வளாகத்தில் அருகே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கும் நிலையில், மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பல்கலைகழக நிர்வாகம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில், பல்கலைக்கழக வளாகத்தில் குற்ற சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வெளிநபர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை முடியும் வரை வளாகத்தில் உள்ளவர்கள் வெளியேற வேண்டாம் என தெரிவித்துள்ளது.

- ராஜ்குமார். ர

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com