கள்ளக்குறிச்சி | மகனை இரண்டாவதாக திருமணம் செய்த பெண்.. மாமியார் செய்த கொடூர செயல்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நந்தினி என்ற பெண் தன்னுடைய மகனை இரண்டாவது திருமணம் செய்தது மாமியாருக்கு தெரிய வந்ததால், மாமியார் கிறிஸ்தவமேரி அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. நந்தினியின் கணவர் ரோசாரியோ, மனைவியை காணவில்லை என புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி, மாமியாரின் கொடூர செயல் வெளிச்சத்துக்கு வந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து, அவருடைய கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தசூழலில் குடும்பத்துடன் வசித்து வந்த நந்தினி, சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மரியா ரோசாரியோ என்பவரிடம் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டு வேறொரு கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகனுக்கு திருமணம் நடந்ததும், திருமணம் செய்த பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது ரொசாரியோ தாய் கிறிஸ்தவ மேரிக்கு தெரியவந்துள்ளது. இதனால் தாய்க்கும், மகன் மற்றும் மருமகளுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கொடூரமாக வெட்டிக் கொலை!
இந்தசூழலில் தான் மருமகளை சாங்கியம் செய்வதற்காக அழைத்துச் செல்வதாக மகனிடம் தெரிவித்துவிட்டு, மருமகளை கிறிஸ்தவமேரி அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது. தாயுடன் சென்ற மனைவி நந்தினி இரண்டு நாட்கள் ஆகியும் வீடு திரும்பாத நிலையில், மனைவி எங்கே என தாய் கிறிஸ்தவமேரியிடம் மகன் கேட்டுள்ளார்.
ஆனால் இதுகுறித்து கேட்டபோது முன்னுக்கு பின்னாக பதில் தாய் அளித்த நிலையில், சந்தேகம் அடைந்த நந்தினியின் இரண்டாவது கணவர் ரொசாரியோ, நந்தினியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்ததாக தெரிகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த மரியா ரோசாரியோ சங்கராபுரம் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்துள்ளர். புகாரைப் பெற்ற காவல்துறையினர் முதற்கட்டமாக மருமகளை அழைத்துச் சென்ற மாமியார் கிறிஸ்தோவமேரியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்த நிலையில், சோழம்பட்டு பகுதியில் அழகாபுரம் செல்லும் சாலையில் மணிமுத்தா ஆற்றின் கரையோரம் தனது மருமகளை தலையைத் துண்டித்து கொலை செய்து, ஆற்றங்கரையோரம் புதைத்து விட்டதாக போலீசாரிடம் மாமியார் கிறிஸ்தவமேரி கூறியுள்ளார். இந்த சூழலில் தான் சம்பந்தப்பட்ட இடத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

