செங்கோட்டையனின் அடுத்த திட்டம் என்ன.. சந்தித்துப் பேசிய முன்னாள் எம்பி!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவை கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியான நிலையில், அதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவை கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியான நிலையில், அதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாகப் பரவலாகக் கூறப்படுகிறது. கட்சியில் தனக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவதால், அவர் பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பரப்புரைக் கூட்டங்களை புறக்கணித்ததும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இப்படியான நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தும் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக சசிகலாவுடன் செங்கோட்டையன் பேசி வருவதாகவும், இருவரும் சந்தித்துக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக செங்கோட்டையனிடம் கேட்டபோது, ”அப்படி யாரையும் தாம் சந்திக்கவில்லை” என பதில் கூறினார். ஏற்கெனவே, கட்சித் தலைமை மீதான தனது கருத்துகளை 5ஆம் தேதி தெரிவிப்பதாக செங்கோட்டையன் கூறிய நிலையில், அதனையும் மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், ஈரோட்டில் தாம் பங்கேற்கவிருக்கும் கூட்டங்களில் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றும், தன்மீது கொண்ட பாசத்தால் யார் வேண்டுமானாலும் கூட்டத்தில் கலந்துகொள்ள நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு இருக்க, ஈரோட்டில் முன்னாள்அமைச்சர் செங்கோட்டையனை, முன்னாள் எம்.பி. சத்யபாமா சந்தித்துப் பேசினார். நீண்டநேரம் நடந்த இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபாமா, செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக தெரிவித்துள்ளார். வரும் 5ஆம் தேதி செங்கோட்டையன் என்ன பேசப் போகிறார், மாற்றுப்பாதையில் பயணிக்கப் போகிறாரா அல்லது பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கப் போகிறாரா என்ற கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. அதற்குள் செங்கோட்டையனுடன்பழனிசாமி பேசி சமாதான முயற்சியில் ஈடுபடுவார் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.