தமிழக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுரை.. கூட்டத்தில் பங்கேற்காத அண்ணாமலை.. மாறும் அரசியல் களம்!
உட்கட்சிப் பூசலைக் களைந்து, அனைவரும் இணக்கமாகப் பணியாற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என தமிழக பாஜக தலைவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுரை
உட்கட்சிப் பூசலைக் களைந்து, அனைவரும் இணக்கமாகப் பணியாற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என தமிழக பாஜக தலைவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பாஜக தேசிய உயர்நிலைக் குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு, தமிழக தேர்தல் களம், கூட்டணி விவகாரம், தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசித்தனர். அத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிலவும் முரண்பாடுகள், கூட்டணியை விரிவாக்குவது தொடர்பாகவும் தமிழக தலைவர்களுடன் தேசிய தலைமை விவாதித்தது. இதனிடையே, நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோருடன் அமித் ஷா தனியாக ஆலோசனை மேற்கொண்டார். அதில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், பரப்புரையை விரைவில் தொடங்குவது தொடர்பாக அறிவுறுத்தினார். மேலும், தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம், மக்கள் சந்திப்பு நிகழ்வுகளைத் தீவிரப்படுத்தவும் அமித் ஷா வலியுறுத்தினார். கூட்டணிக் கட்சியினருடன் இணக்கமாகச் செல்லவும், உட்கட்சிப் பூசல்களைக் களைந்து, ஒற்றுமையுடன் பணியாற்றவும் தமிழக பாஜக தலைவர்களுக்கு அவர் அறிவுறுத்தல்களை வழங்கியதாகத் தகவல் வெளியாகிவுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்காத அண்ணாமலை
அதேநேரத்தில், அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்காதது பேசுபொருளாகியுள்ளது. அண்ணாமலை பங்கேற்காததன் பின்னணி என்ன, அண்ணாமலைக்கு அழைப்பு இல்லையா அல்லது வந்த அழைப்பை நிராகரித்தாரா என்ற கேள்வி பாஜகவைத் தாண்டியும் விவாதப்பொருளானது. இதனூடாக தமிழகத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, “அதிகமான திருமண நிகழ்வுகள், வேலைப்பளு இருப்பதால் கூட்டத்துக்குச் செல்லவில்லை” என்று கூறினார். அண்ணாமலையின் இந்தப் பதில், விவாதத்தை மேலும் சூடாக்கியது. ஒரு கட்சியின் முன்னணித் தலைவர், தேசிய தலைமையின் அழைப்பைவிட, தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்த சூழலில், அண்ணாமலைக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பே இல்லை என்று ஒருதரப்பும், “இல்லை; அண்ணாமலைக்கு அழைப்பு போனது; ஆனால், அவர் டெல்லி செல்வதைப் புறக்கணித்தார்” என்று இன்னொரு தரப்பும் மாற்றிமாற்றி தகவல்களைப் பரப்பிக்கொண்டிருந்தன. இரண்டில் எது உண்மையாயினும், அது அண்ணாமலைக்குச் சங்கடமான விஷயம்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அண்ணாமலைக்குக் கடிவாளம் போடப்படுகிறதா?
அதேநேரத்தில், தேசிய தலைமை அழைத்தும் அண்ணாமலை டெல்லி செல்லவில்லை என்றால், அப்படிச் செல்ல முடியாத சங்கட பின்னணி என்ன; அல்லது அண்ணாமலைக்கு அழைப்பு இல்லை என்றால், ஏன் முன்னணித் தலைவர்களில் ஒருவரான அவருக்கு அழைப்பு இல்லை என்ற கேள்வியை டெல்லியின் அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர். சமீபத்தில் சென்னை வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர்களுடன் நடத்திய சந்திப்பையும், அவர்களுடன் பேசுகையில் அண்ணாமலை தொடர்பாக அவர் வெளிப்படுத்திய அதிருப்தியையும் இப்போதைய டெல்லி ஆலோசனைக் கூட்டத்தோடு இணைத்துப் பேசுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அண்ணாமலை மீது இதுநாள் வரை அதிருப்தியில் இருந்தவர்கள் அவ்வளவு பேரும் இப்போது ஒன்றுபட்டிருக்கிறார்கள்.
“தமிழக பாஜகவில் இதுவரை எந்தத் தலைவருக்கும் அனுமதிக்கப்படாத தனிநபர் முக்கியத்துவத்தை அண்ணாமலைக்கு பாஜக தேசிய தலைமை அனுமதித்தது. அதன் விளைவையே இப்போது கட்சி அனுபவிக்கிறது” என்று சொல்லும் அவர்கள், அண்ணாமலைக்கு கடிவாளம் போடப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிகிறது. தமிழக தலைவர்களின் கருத்துகளை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்ட டெல்லி தலைவர்கள் அடுத்து, அதிமுக உள்ளிட்டகூட்டணிக் கட்சிகள் சார்ந்த நிலவரத்தை விசாரித்துள்ளனர். இப்போதைக்கு கட்சியின் ஒன்றுபட்ட செயல்பாட்டிலும், ’கூட்டணிக் கட்சிகளை அரவணைப்பதிலும் கவனம் செலுத்துங்கள்’ என்று கூறினாலும், தமிழகச் சூழல் குறித்து மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. பிரதமர் மோடியுடன் இந்த விஷயங்களை அமித் ஷா அடுத்த சில நாட்களுக்குள் விவாதிப்பார் என்றும் அதன் அடிப்படையில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்றும் சொல்கின்றன டெல்லி பாஜக வட்டாரங்கள்.
கூட்டணியிலிருந்து விலகல்.. பொறுப்பைக் கையிலெடுக்கும் பாஜக
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழ்நாட்டில் கூட்டணிக் குழப்பங்களால் அதிருப்தி அடைந்துள்ள மோடி- அமித் ஷா, மெகா கூட்டணி அமைக்கும் பொறுப்பை பாஜக கையில் எடுக்க வேண்டும் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுடனான கூட்டணியை அமித் ஷா உறுதிசெய்தாரோ, அந்த நாளிலிருந்தே பாஜகவின் பழைய கூட்டாளிகளிடம் குழப்பங்கள் தொடங்கிவிட்டன. பாமகவுக்குள் நிலவும் சிக்கல், திசை மாறும் தேமுதிக, டிடிவி தினகரனின் விலகல், செங்கோட்டையனின் அடுத்தகட்ட நகர்வு என போன்ற விவகாரங்களால் மோடி - அமித் ஷா குழப்பத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் மோடி தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைக்கும் பொறுப்பை முழுமையாக அதிமுகவிடம் ஒப்படைத்துவிட முடியாது; அந்தப் பொறுப்பை பாஜக கையில் எடுக்க வேண்டும் என பாஜக தேசிய தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கேற்ப கட்சி நிர்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதோடு, மாறிவரும் சூழலுக்கேற்ப கூட்டணி வியூகத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக பி.எல்.சந்தோஷிடம் ஆலோசனை செய்யுமாறும் கூறியதாகச் சொல்லப்படுகிறது.