ராப் பாடகர் ’வேடன்’ மீது பாலியல் புகார்.. அதிர்ச்சியை கிளப்பிய பெண் மருத்துவர்!
கேரள மண்ணில் பிறந்தாலும், தன்னைச் சுற்றிச் சுழன்ற சர்ச்சைகளாலும், அடக்குமுறைகளாலும் குறுகிய காலகட்டத்திலேயே பான் இந்தியா அளவில் பிரபலமானார் பாடகர் ‘வேடன்’. எளிய நடையிலான எழுத்துக்களாலும், பாடல்களாலும், சமீபத்திய மாதங்களில் வேடனுக்கான ஆதரவு அதிகரிக்கவே செய்துள்ளது.
இந்த நிலையில்தான், அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார் பெண் மருத்துவர் ஒருவர்.
பாலியல் வன்கொடுமை புகார்.. என்ன நடந்தது?
வேடனுக்கு ரசிகையான தான் சமூகவலைதளம் மூலம் அவருக்கு அறிமுகமானதாகவும், பின் நாட்களில் ஒன்றாக பழகியதில், வேடன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்துள்ளார் பெண் மருத்துவர்.
குறிப்பாக, 2021 முதல் 2023 ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தன்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று பலமுறை வன்கொடுமை செய்ததாகவும், பணத்தையும் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெண் மருத்துவரின் புகாரின் பேரில் கேரள மாநில திக்காக்கரா காவல்நிலையத்தில், வேடன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. FIR பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திக்காக்கரா காவல்நிலைய போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, கடந்த ஏப்ரலில் கனியம்புழாவில் அபார்ட்மென்ட்டில் நண்பர்களோடு வீடு எடுத்து தங்கியிருந்த வேடன் கைது செய்யப்பட்டிருந்தார். போதைப்பொருள் வழக்கில் தேடுதல் வேட்டையின் போது, அவர்கள் தங்கியிருந்த வீட்டில் 6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, வேடன் உட்பட மொத்தமாக 9 பேர் கைதாகினர். இந்த விவகாரம் பெரும் பேசுபொருளான நிலையில், அடுத்ததாக அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.