”பேக்ரவுண்ட் இல்லாம வரவங்களுக்கு சிவகார்த்திகேயன் ஒரு நம்பிக்கை!” - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!
அமரன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தமிழ்சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் கிராஃப்ட் வேறொரு இடத்திற்கு நகர்ந்துள்ளது. ’அமரன்’ படத்தின் மூலம் 300-கோடிக்கு மேல் வசூலை ஈட்டிய தமிழ் ஹீரோக்கள் பட்டியலில் ரஜினி, விஜய், கமலுடன் தன்னை இணைத்துகொண்டார்.
இந்நிலையில் அமரன் படத்திற்கு பிறகு இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற திரைப்படத்திலும், டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ’பராசக்தி’ என்ற படத்திலும் அடுத்தடுத்து நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன்.
’மதராஸி’ திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், 'டான்சிங் ரோஸ்' சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குநர் ஏஆர் முருகதாஸுக்கு இது ஒரு கம்பேக் திரைப்படம் என்பதால், படத்தின் மீது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.
பின்புலம் இல்லாதவர்களுக்கு SK ஒரு நம்பிக்கை..
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயனின் சினிமா வளர்ச்சி குறித்து பேசினார்.
சிவகார்த்திகேயனை வச்சு மான் கராத்தே பண்ணீங்க, இப்போ மதராஸி பன்றீங்க, அப்ப இருந்த சிவகார்த்திகேயனுக்கும், இப்போ இருக்க சிவகார்த்திகேயனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு, அவரோட வளர்ச்சியை எப்படி பார்க்கிறீங்க என முருகதாஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய முருகதாஸ், “அப்போ நான் பார்த்தது டிவில இருந்து வந்த சிவகார்த்திகேயன், அப்போ தான் முடிச்சு வந்திருந்தாரு. நிறைய பேரு பேக்ரவுண்ட் இல்லாம வரவங்க, சினிமாவுல சாதிக்கணும்னு வரவங்க எல்லாருக்கும் திறமையும், கடின உழைப்பும் இருந்தா போதும் ஜெயிச்சிடலாம் என்பதற்கு சிவகார்த்திகேயன் தான் ஒரு நம்பிக்கை.
மான்கராத்தே டைம்ல ஒரு 6 படங்கள் பண்ணிருந்தாருனு நினைக்கிறன், அதற்குபிறகு அவருடைய படங்கள் தான் பார்த்தன். மதராஸிக்கு பார்த்து பேசும்போது அவரோட வளர்ச்சி பாசிட்டிவா இருந்தது. அவரோட வளர்ச்சில மகிழ்ச்சி தான்” என்று பேசியுள்ளார்.