1957 - 2014|‘வாக்களிக்க மட்டும்தான் பெண்களா? போட்டிக்களத்தில் பெண்கள் ஏன் இல்லை?’ ECI Data ஓர் அலசல்

தேர்தல் களம் என வரும்பொழுது, நாடாளுமன்றம் – சட்டமன்றம் இரண்டிலுமே பெண்களின் கை ஓங்கி இருப்பதேயில்லை. மொத்த உறுப்பினர்களில் வெறும் 15% பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர்.
இந்திய அரசியல் | பெண்கள்
இந்திய அரசியல் | பெண்கள் கோப்புப்படம்

இன்றைய தேதியில் இந்திய வாக்களார்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள், பெண்கள்தான். இதனால் இந்த நாட்டை யார் ஆட்சி செய்யவேண்டும், தொகுதியை யார் ஆட்சி செய்ய வேண்டும் என தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர் பெண்கள். ஆனால் தேர்தல் களம் என வரும்பொழுது, நாடாளுமன்றம் – சட்டமன்றம் இரண்டிலுமே பெண்களின் கை ஓங்கி இருப்பதேயில்லை. மொத்த உறுப்பினர்களில் வெறும் 15% பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர்.

கள நிலவரம் சொல்லும் இந்த யதார்த்த உண்மையை, தேர்தல் ஆணையம் தரும் புள்ளிவிவரங்களுடன், இங்கே பார்க்கலாம்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்ட்விட்டர்

1950களின் தொடக்கத்தில் இந்தியாவில் முதன் முதலாக நடந்த ஜனநாயக தேர்தலின்போது படிப்பறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை மிகமிக சொற்பம்தான். அதனாலேயோ என்னவோ, தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைத்த பெண்களும் குறைவாகவே இருந்தனர். 1957 தேர்தலில் (இரண்டாவது மக்களவை தேர்தல்) 45 வேட்பாளர்கள்தான் (2.9% பேர்) பெண்கள். 

இந்திய அரசியல் | பெண்கள்
பயிற்சி வகுப்புக்கே செல்லாமல் 22 வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி - இளம்வயது ஐஏஎஸ் ஆன உ.பி பெண்!

இன்று நிலைமை அப்படி கிடையாது. படித்த பெண்களே அதிகம். ஆளுமைமிக்க பெண் தலைவர்களும் உண்டு. எனில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கையும் உயர்ந்திருக்க வேண்டும்தானே? உயர்ந்திருக்கிறது… ஆனால் மிக மிக மிக குறைவான வேகத்தில். அதாவது 2019-ல் 726 (9%) பெண் வேட்பாளர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதே ஆண் வேட்பாளர்கள் புள்ளிவிவரம்படி பார்த்தால், 1957-ல் 1,474 ஆண்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்; 2019-ல் 7,322 ஆண்கள் போட்டியிட்டுள்ளனர்.

இதற்கே அதிர்ச்சியடைந்துவிட வேண்டாம். ஏனெனில் சரி இந்த எண்ணிக்கையே பரவாயில்லை எனும் அளவுக்கு உள்ளது தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை. 1957-ல் 4.5% உறுப்பினர்கள் மக்களவையில் இருந்தனர்; 2019-ல் 14.4% தான் உள்ளனர்.

படித்த பட்டதாரி பெண்கள் பல்வேறு துறைகளில் கோலோச்சி இருந்தாலும்கூட, கடந்த 74 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அவர்களின் குரல் எடுபடவில்லை. அதை பறைசாற்றும் வகையிலான சில புள்ளிவிவரங்கள், இதோ…

பெண் வாக்களார்கள்

1962ல், 42 %

2019-ல் 48.2%

பெண் வேட்பாளர்கள்

1962-ல் 3.2%

2019-ல் 9%

நாடாளுமன்றத்தில் பெண்கள்…

1962ல், 6.3%

2019ல் 14.4%

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்pt web

பெரிய கட்சியில் பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட் (சதவிகிதமாக)

  • பாஜக                1996ல் 5.7%        2019ல் 12.6%

  • காங்கிரஸ்       1996ல் 9.3%        2019ல் 12.8%

  • சிபிஐ                 1996ல் 7.0%        2019-ல் 8.2%

  • சிபிஎம்              1996ல் 6.7%        2019-ல் 14.5%

  • BSP                      1996ல் 0%           2019-ல் 6.3%

1996 - 2019 வரையிலான 7 தேர்தல்களில், தேசியளவில் பெரிய கட்சிகள் எதுவும் 10%-க்கு மேல் பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கவில்லை. காங்கிரஸ் 10-ல் ஒருவர் பெண் வேட்பாளர் என்றுள்ளது; BSP 20-ல் ஒருவர் பெண் வேட்பாளர்கள் என்றுள்ளது. இதுவே பாஜக-வும் சிபிஐ-யும் 8% என்றும், சிபிஎம் 9% என்றும் உள்ளது.

இந்திய அரசியல் | பெண்கள்
Election With PT | “இரவில் பெண்கள் சாலையில் நடக்கும் போது கூட பாதுகாப்பு இல்லை”

பெண் வேட்பாளர்கள் வெற்றி பெறும் விகிதம் என்ன?

  • 1957-ல் 45 பேரில் 22 பேர் வெற்றி பெற்றனர்  - 48.88% என இருந்தது வெற்றி விகிதம்

  • 2019-ல் 726 பேரில் 78 பேர் தான் வெற்றி பெற்றனர் – இதனால் 10.74% என்றானது வெற்றி விகிதம்

ஒவ்வொரு தேர்தலின்போதும் எல்லா அரசியல் கட்சிகளின் கண்களும், பெண் வாக்காளர்களின் நலனை சுற்றியே இருக்கும் என்பதையும் நாம் இந்த நேரத்தில் கவனிக்க வேண்டியுள்ளது.

மகளிருக்கு இலவச பஸ், மகளிர் உரிமைத்தொகை, உதவித்தொகை, சுய தொழிலுக்கான வாய்ப்பு, மகளிர் குழுக்களுக்கான முதலீடு, பெண் பிள்ளைகளை படிக்க வைக்க ஊக்கத்தொகை, அதிலும் முதன்முறை வாக்காளர்களாகப்போகும் கல்லூரி மாணவியருக்கென ஊக்கத்தொகை… இப்படி பல நலத்திட்டங்களை கொண்டு வருகின்றனர் அரசியல்வாதிகள். அவை அனைத்துமே பெண் நலனுக்கு முக்கியம்தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

ஆனால் பெண் வேட்பாளர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்பதையும் ஆட்சியாளர்கள் யோசிக்க வேண்டியுள்ளது. நாட்டிலுள்ள பெண்களுக்கு செய்யும் ஒதுக்கீட்டில், கொஞ்சமேனும் கட்சிக்குள் காட்டலாமில்லையா? ஏனெனில் அதற்கான காலம் வந்துவிட்டது. ‘பெண்களின் ஓட்டுக்கள் வேண்டும், ஆனால் பெண்கள் பதவிக்கு வரக்கூடாதா?’ என்று பெண்களே கேட்கும் காலம் இது!

கடந்த காலத்தில் பெண்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்புகள் வழங்கப்பட்டன என்றாலும்கூட, அது சம அளவில் வழங்கப்படவில்லை. மிக மிக பொறுமையாக அது உயர்கிறது. எந்த அளவுக்கு என்றால், வெறும் 6% உயர்வதற்கு பெண்கள் 50 வருடங்களாக காத்திருக்கும் அளவுக்கு! இதேவேகத்தில் சென்றால், சம வாய்ப்பை பெற பெண் வேட்பாளர்கள் மற்றும் பெண் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் எத்தனை தலைமுறை செல்ல வேண்டுமோ என்பதே நம் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது! 

இந்திய அரசியல் | பெண்கள்
Women's Day | பாலியல் வன்கொடுமைகளுக்கு பழகிவிட்டதா இந்தியா? தொடரும் கொடூரங்களுக்கு தீர்வுதான் என்ன?

‘பெண்கள் பல துறைகளில் இருக்கலாம், பணிபுரியலாம்… ஆனால் எந்தச் சூழலிலும் அவர்கள் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் சம அளவில் சென்றுவிடக்கூடாது’ என நினைக்கின்றனரா நம் அரசியல்வாதிகள் என்ற கேள்வி எழாமல் இல்லை. அரசியல்களம் மட்டுமல்ல, இன்னும் பல பல துறைகளில் பெண் ஊழியர்கள் உயர் பதவிகளில் பணியமர்த்தப்படுவதில்லை. குடும்பம், குழந்தைகள் என இன்றும் பல அலுவலகங்களில் பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. இதை பல உலகளாவிய புள்ளிவிவரங்கள் நமக்கு நிரூபிக்கின்றன.

இந்த பின்னடவை போக்க உதவும் முக்கிய அம்சமாக இருக்கிறது ‘பெண் அரசியல் ஆளுமைகள், அதிகாரத்தை சம அளவில் பெறுவது’ என்பது. இதை சாத்தியப்படுத்த இரு விஷயங்களை நாம் சாத்தியப்படுத்த வேண்டியுள்ளது. ஒன்று, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33இடஒதுக்கீடு வழங்கப்படுவது. இதன்மூலம் கட்சிகள் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்.

இந்திய அரசியல் | பெண்கள்
"மகளிர் இடஒதுக்கீடு சட்டமாக மாறினாலும் யதார்த்தத்தில் அமலுக்குவர பல ஆண்டுகள் பிடிக்கும்"-ப.சிதம்பரம்

மற்றொன்று, ஒவ்வொரு கட்சியும் இவ்விஷயத்தில் தாமே முன்வந்து பெண் ஆளுமைகளை உருவாக்குவது, அவர்களுக்கு தாமே வாய்ப்பும் வழங்குவது. இவை இரண்டுமே நிரந்தர தீர்வை நோக்கி நம்மை நகர்த்தும். பெரிய கட்சிகளை பொறுத்தவரையில், இன்றளவும் பொறுப்புகளேவும் பெண்களிடம் கொடுக்கப்படுவதில்லை. சொற்ப அளவிலேயே பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.

உலகளவில் மனிதவள மேம்பாட்டு குறியீடு அதிகம் உள்ள நாடான நியூசிலாந்தில் 50% நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண்கள்தான். இதேபோல ஸ்பெயின், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்றவற்றிலும் 30%-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பெண்கள்.

36 வயதினிலே படத்தில் வசந்தி எனும் முதன்மை கதாபாத்திரம் கேட்கும் ஒருகேள்வியோடு இக்கட்டுரையை முடிக்கிறோம்…

“இந்தியாவில் 16 பிரதமர்களில் ஒருவர் மட்டும்தான் பெண்; 15 ஜனாதிபதிகளில் இருவர் மட்டும்தான் பெண். ஏன்? இந்த தேசத்தில் அறிவாளியான தகுதியான பெண்களே இல்லையா? இல்லை, அவர்களின் கனவுகளை யாரும் தடை செய்துவிட்டார்களா? Who Decides the expiry date of a Woman’s Dream?”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com