"மகளிர் இடஒதுக்கீடு சட்டமாக மாறினாலும் யதார்த்தத்தில் அமலுக்குவர பல ஆண்டுகள் பிடிக்கும்"-ப.சிதம்பரம்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இம்மசோதா சட்டமாக மாறினாலும், யதார்த்தத்தில் அமலுக்கு வர பல ஆண்டுகள் பிடிக்கும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்pt web

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டமானது.

இந்நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், சில ஆண்டுகள் வரை அமல்படுத்த முடியாத ஒரு சட்டத்தை கொண்டு வருவதால் என்ன பலன் என கேள்வி எழுப்பியுள்ளார். நிச்சயமாக 2029 மக்களவை தேர்தலுக்கு முன்பாக கூட இந்த சட்டம் அமலுக்கு வராது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா
மகளிர் இடஒதுக்கீடு மசோதாpt web

நீர் நிரம்பிய பாத்திரத்தில் நிலவின் ஒளி பிரதிபலிப்பது போல, ஒரு மாயை தான் இந்த சட்டம் என விமர்சித்துள்ள ப. சிதம்பரம், தேர்தல் நாடகத்திற்காக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட இம்மசோதா பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார். சிறப்பு கூட்டத் தொடரில் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதே போல் மாநிலங்களவையிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

தாமதம் குறித்து ஏன் கேள்வி எழுகிறது?

இதற்கு முன்பு பலமுறை அறிமுகப்படுத்தப்பட்டு தோற்று போயிருந்தாலும், தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் கிட்டதட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு ஒருமித்த குரலுடன் மசோதா நிறைவேற்றப்படும் நிலையில் அதாவது எந்தக் கட்சிகளெல்லாம் கடுமையாக எதிர்த்தனவோ அவையெல்லாம் கொஞ்சம் கூட எதிர்ப்பே இல்லாமல் தற்போது ஆதரித்து இருக்கும் நிலையில், மகளிர் இடஒதுக்கீடு எப்போது நடைமுறைக்கு வரும்? அடுத்த 5 ஆண்டுகளிலா? அல்லது அடுத்த 10 ஆண்டுகளிலா? என்ற கேள்வி ஏன் எழுகிறது.

இதற்கு முக்கியமான காரணம், தற்போது முன்மொழியப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்ட பின்னரே மசோதாவில் உள்ள மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால்தான், மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அவசர அவசரமாக பாஜக அரசு கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com