பயிற்சி வகுப்புக்கே செல்லாமல் 22 வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி - இளம்வயது ஐஏஎஸ் ஆன உ.பி பெண்!

நாட்டின் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 22 வயதேயான அனன்யா சிங் என்பவர் பெற்றுள்ளார்.
அனன்யா சிங்
அனன்யா சிங்Instagram

ஒவ்வொரு வருடமும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் யுபிஎஸ்சி தேர்வானது நடைப்பெற்று வருகிறது. இத்தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் எழுதிவருகிறார்கள். ஆனால் கனவு அனைவருக்கும் பலிப்பதில்லை. கடின உழைப்புடன் விடாமுயற்சியுடன் தொடர்ந்து படித்து வருபவர்கள் இத்தேர்வில் சாதனை படைக்கின்றனர்.

அந்தவகையில், நாட்டின் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 22 வயதேயான அனன்யா சிங் என்பவர் பெற்றுள்ளார்.

யார் இந்த அனன்யா சிங்?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரை சேர்ந்தவர் அனன்யா சிங். இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவர். பள்ளிக்கல்வியை சிறப்பாக முடித்துவிட்டு டெல்லி கல்லூரியில் பொருளியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். சிறுவயதில் இருந்தே குடிமைப்பணி அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் இருந்த அனன்யா சிங், யுபிஎஸ்சி தேர்வெழுத எந்தவித பயற்சி மையத்திலும் சேராமல் சுயமாக தயாரானார். முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான அனன்யா சிங், தற்போது மேற்குவங்க மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவை சேர்ந்த அன்சார் ஷேக் என்ற 21 வயது இளைஞர், ஐஏஎஸ் அதிகாரியாகி சாதனை புரிந்தார். 2016 ஐஏஎஸ் தேர்வில் வெறும் 21 வயதில் அகில இந்திய அளவில் 361 வது இடத்தைப் பிடித்தார்.

தற்போது மேற்கு வங்காளத்தில் உள்ள கூச் பெஹாரில் ADM ஆக பணியாற்றும் ஷேக்கின் பெற்றோர்கள் மகாராஷ்டிராவின் ஜல்னா கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவரது தந்தை ஒரு ஆட்டோரிக்ஷா ஓட்டுனர் என்பது கூடுதல் தகவல். இளம் வயது ஐஏஎஸ் அதிகாரி அன்சார்தான் என்றபோதிலும், பெண்களில் அனன்யா சிங்-தான் இளம் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார்.

அன்சார் ஷேக்
அன்சார் ஷேக்

இந்தியாவில் பெண்கள் பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளில் உள்ளபோதிலும் மிக குறைந்த வயதில் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் ஆனவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் 22 வயதே ஆன அனன்யா சிங்.

இதற்கு முன்னதாக, மத்தியப் பிரதேச கேடரின் 2007ம் ஆண்டு நடந்த UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் ஸ்வாதி மீனா என்பவர் தனது 22வது வயதில் ஐ ஏ எஸ் வெற்றி பெற்றார். இவரும் தனது முதன் முயற்சியிலேயே வெற்றி பெற்றார் என்பது கூடுதல் தகவல்.

யாரிந்த ஸ்வாதி மீனா?

ராஜஸ்தானின் சிகார் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வாதி. அவரது தந்தை ராஜஸ்தான் நிவாக சேவை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரது தாயார் டாக்டர் சரோஜ் மீனா பெட்ரோல் பம்ப் நடத்தி வருகிறார். ஸ்வாதி மீனா அஜ்மீரில் உள்ள சோபியா பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்றவர். அவர் ஒருமுறை ஒரு நேர்காணலில் தான் ஒரு டாக்டராக விரும்பியதாகவும் ஆனால் அவர் 8ம் வகுப்பு படிக்கும் போது அதிகாரியான அவரது அத்தையிடமிருந்து உத்வேகத்தை கற்றுக்கொண்டதாகக் கூறினார்.

அதுமுதல் அவர் இந்திய நிர்வாக சேவை அதிகாரியாகி தேசத்திற்காக பணியாற்ற வேண்டும் என்று கனவு கண்டாராம். ஸ்வாதி மீனா upsc cse தேர்வில் air (அகில இந்திய அளவிலான ரேங்க்) 260 மூலம் வெற்றி பெற்று வரலாற்றை உருவாக்கி இருக்கிறார். தற்போது மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் கீழ் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையின் இயக்குனராக உள்ளார். முன்னதாக ஸ்வாதி மீனா மத்தியப் பிரதேச அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் செயலாளராகப் பணியாற்றினார். இவரது சகோதரியும் ஸ்வாதியைப்போன்று 2011ல் இந்திய வெளியுறவு சேவை IFS அதிகாரியானார் என்பது கூடுதல் தகவல்.

ஸ்வாதி மீனா
ஸ்வாதி மீனா

விடாமுயற்சியுடன் படித்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை மாணவர்களுக்கு செயலில்காட்டியதுடன் பல மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்கிறார்கள் இவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com