Women's Day | பாலியல் வன்கொடுமைகளுக்கு பழகிவிட்டதா இந்தியா? தொடரும் கொடூரங்களுக்கு தீர்வுதான் என்ன?

“3 விஷயங்கள்... அவற்றில் நடவடிக்கை எடுக்காத அரசுதான் உண்மையான குற்றவாளி!” - கம்யூனிஸ்ட் பாலபாரதி
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைமாதிரிப்படம்

இன்று சர்வதேச மகளிர் தினம். இணையம் எங்கும் ‘பெண்மை போற்றுவோம், மதிப்போம், வாழ்த்துவோம், வாழ்ந்து காட்டிய பெண்கள், வாழவேண்டிய பெண்கள்’ என பக்கம் பக்கமாக ரைட்-அப்களும், அதுதொடர்பான சில பல மீம்ஸ்களும் நிரம்பி வழிகிறது. அதிலும் அங்கும் இங்கும், ‘பெண்கள் தினத்துக்கு மட்டும் வாழ்த்து சொல்றாங்கறாங்கப்பா, ஆண்கள் தினத்துக்கு ஆளையே காணோம்’ கூட்டம் ஒருபக்கம்!

இந்த ‘நன்’நாளில், நாம் (இந்தியர்கள்) எவ்வளவு மோசமான சூழலை பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதற்கான சில உதாரணங்களை, இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

(குறிப்பு - பெண்களுக்கு அவநம்பிக்கையை கொடுப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. நம்மை சுற்றியுள்ள பெண்கள் எவ்வளவு அவதிப்படுகிறார்கள் என்பதை தரவுகளின் வழியே நாம் உணரவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை இனியாவது தரவேண்டும் என்ற நினைவு நமக்கு வரும். அதற்காகவே இப்பதிவு.

பெண்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது, அதன் நோக்கம் என்ன என்பதுமாதிரியான அடிப்படை தகவல்களை, கீழ் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் கண்டுகொள்ளுங்கள்.)

பாலியல் வன்கொடுமை
சும்மா கிடைத்ததா இந்நாள்! லட்சக்கணக்கான பெண்கள் போராடி கண்டடைந்த உலக மகளிர் தினம் உருவான வீர வரலாறு!
விஷயத்துக்கு வருவோம். பெண்கள், பெண் குழந்தைகள் மீது நிகழ்ந்த / நிகழ்த்தப்பட்ட கொடுமைகளில் பேசுபொருளான சமீபத்திய சில சம்பவங்கள்...

- புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்ய கடத்தப்பட்ட போது, கொலை. போக்ஸோவின் கீழ் இருவர் கைது

- உலகின் பாதி நாடுகளை சுற்றிப்பார்த்துவிட்டு இந்தியாவிற்கு சுற்றுலாவிற்கு வந்த பெண்ணை, அவரின் கணவன் முன்பே பாலியல் வன்கொடுமை செய்த ஜார்க்கண்ட் இளைஞர்கள் (ஜார்க்கண்ட்டின் தலைநகர் ராஞ்சியில் இது நிகழ்ந்தது); இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியது ‘காவல்துறை’ . கிட்டத்தட்ட இந்திய சினிமாக்களில் ஆலமர பஞ்சாயத்துகளில் , பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவார்களே , அதற்கு கொஞ்சமும் சளைக்காத அவலத்தை அரங்கேற்றியிருக்கிறது ஜார்க்கண்ட் மாநில காவல்துறை.

- மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு ஆசிட் வீச்சு

- மத்தியப் பிரதேசத்தில் 7 வயது பெண் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை முயற்சி; குழந்தை தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றபோது கொலை

- சத்தீஸ்கரில் பெண் மேடைக்கலைஞர் ஒருவர், பணி முடித்து வீடு திரும்புகையில் தன் உடன் பணிபுரிந்தவர்களாலயே பாலியல் வன்கொடுமை

-உ.பி.-யில் ஹத்ராஸ் மாவட்டத்தில் திருமண நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடுதிரும்பிய 17 வயது சிறுமி, 2 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

- மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை அபகரித்து, அங்குள்ள பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்டது. இதில் அவர் கைதும் செய்யப்பட்டார்.

- மத்தியப் பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண்ணை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைக்கப்பட்டுள்ளார்

- உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன 9 வயது பெண் குழந்தை காட்டில் சடலமாக ஆடையின்றி கண்டெடுப்பு

- இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் உத்தரப்பிரதேசத்தில் இரு பெண்களின் சடலங்கள் கண்டறியப்பட்டன. அவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகள் என்பதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டார் என்பது கூடுதல் தகவல்.

.

.

.

இன்னும் இன்னும் இன்னும்... இப்படி இந்தியாவில் அன்றாடம் பல வன்கொடுமை நிகழ்வுகளும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இவையெல்லாம்தான், இந்தியாவில் வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மனதில் ‘இந்தியா பாலியல் வன்கொடுமைகளுக்கு பழகி வருகிறதோ’ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022-ம் ஆண்டு தரவின்படி, ஒரு நாளில் இந்தியாவில் கிட்டத்தட்ட 90 பாலியல் வன்கொடுமைகள் நிகழ்கின்றன.

குடும்ப கௌரவம், பெண் மீதி திணிக்கப்படும் கற்பொழுக்கம்... போன்ற போலி முகமூடிகளுக்கு பயந்து வழக்கே பதிவுசெய்யாதோர், இன்னும் அதிகம் இருப்பர் என்கின்றனர் செயற்பாட்டாளர்கள். குடும்பத்துக்குள்ளேயே நடக்கும் பாலியல் வக்கிரங்கள் சொல்லி மாளாதவை.
((‘நாம் என்றைக்கு பேசவேண்டிய விஷயங்களுக்காக பேசுகிறோமோ, அன்றைக்குதான் நம் வாழ்வு தொடங்கும்’ என்கிறார் எழுத்தாளர் மார்ட்டின் லூதர். ஆகவே பேசவேண்டிய இடத்தில் உரக்கப் பேசுவோம் என்றும், என்றென்றும்!))

இன்னொருபக்கம், தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022-ம் ஆண்டு தரவின்படி, 4,45,256 வழக்குகள் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளின்கீழ் பதிவாகியுள்ளது. ஒருமணி நேரத்துக்கு 51 வழக்குகள். பெரும்பாலான வழக்குகள் (31.4%) கணவன் / உறவினரால் நிகழ்த்தப்பட்ட கொடுமையாக இருக்கிறது; 19.2% கடத்தல் மற்றும் துன்புறுத்தல் வழக்குகளும், 18.7% அவமானப்படுத்தும் நோக்கில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளும், 7.1% பாலியல் வன்கொடுமைகளாகவும் இருக்கின்றன.

இப்படியாக நம்முடன் பணிபுரியும் பெண்ணோ, பக்கத்துவீட்டு பெண் குழந்தையோ, நம் வீட்டு பெண் குழந்தையேவோ, நம் உறவுக்காரப் பெண்ணேவோ தொடர்ந்து... அன்றாடம்... ஏதோவொரு வகையில் துன்புறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டேதான் இருக்கின்றார். ஆனால் இப்படியான சம்பவங்களின்போது நாமெல்லாம் சொல்வது, ‘பிள்ளையை சரியா வளர்க்கல இவங்க’ என்பதுதான். அடுத்து கொஞ்ச நாட்களுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுப்போம் நம் பிள்ளைகளுக்கும் உடனிருப்பவர்களும். பின் அடுத்தப்பிரச்னை... அடுத்த பஞ்சாயத்து... இதை கடந்து சென்றுவிடுவோம்.

எனில் தீர்வுதான் என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலபாரதி அவர்கள் நம்மிடையே பேசியபோது,

ஒரேடியாக பொதுச்சமூகத்தை மட்டுமே இதுபோன்ற குற்றங்களுக்கான காரணமென சொல்லிவிட முடியாது” என்றார்.

விரிவாக அவரிடம் பேசினோம். மூன்று தீர்வுகளை சொன்னார். மூன்றுமே மிகமிக முக்கியமானவை.

1. “கல்வியே ஆயுதம்!”

“அரசாங்கம் தரப்பில்தான் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவர வேண்டும், கொண்டுவரவும் முடியும். தனிமனிதர்களை குற்றவாளிகளாக்குவது ஆபத்து. ஏனெனில் 10-ல் 2 பேர்தான் குற்றவாளிகளாக இருப்பார்கள். அவர்களை மனதிற்கொண்டு, மற்ற 8 பேரையும் சந்தேகித்தால் எப்படி சரியாகும்?

சந்தேக உணர்வோடே நம்மை (பெண்களை) பயணிக்க இந்த சமூகம் நிர்ப்பந்திப்பதை தவிர வேறென்ன கொடுமை நமக்கு இருந்துவிட முடியும்?

இது மட்டுமன்றி மனிதத்தின் அடிப்படையையே சந்தேகப்பார்வை மாற்றிவிடும். சமீபத்தில் சந்தேகத்தின் பேரில் ‘குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்கள்’ என்ற அடிப்படையில் சில அப்பாவிகள் மீதான தாக்குதல்களை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பாலியல் வன்கொடுமை
குழந்தை கடத்தல் தொடர்பாக கிருஷ்ணகிரியில் பரவும் வதந்தி: காவல்துறை விளக்கம்...

குழந்தைகளும் பெண்களும் மட்டுமல்ல, பல பெற்றோர்களும்கூட இப்போதெல்லாம் தங்கள் குழந்தையை நெருங்கும் எல்லோரையும் சந்தேகித்துக்கொண்டே இருக்கின்றனர். அதையே சரியென்பதுபோல நாம் அவர்களுக்கு போதிக்கிறோமும். இது எப்படி சரி?

இந்த சமூக அமைப்பே அடிப்படையில் பெண்ணடிமைத்தன கட்டமைப்பை கொண்டதுதான். நாமே பலவற்றை கடந்துதான் இங்கு வந்துள்ளோம். உதாரணத்துக்கு இந்த சமூகம் பெண் சிசுக்கொலை, உடன்கட்டை ஏறுதல் என பல கொடூர பெண்ணடிமைத்தனங்களை கடந்துதான் வந்துள்ளது.

பெண்ணை அடுப்படியைவிட்டே வெளியே வரவிடாத காலமெல்லாம் நம்மிடையே இருந்துள்ளது. தனியார்மயம், முதலாளித்துவமெல்லாம் வந்தபின் அது கொஞ்சம் உடைந்து பெண்கள் வெளியே வந்தார்கள். ஆனால் அங்கும் அடிமைத்தனம்தான் இருக்கிறது. இன்று பணிக்கு செல்லும் பெண்கள் அதிகம்தான். ஆனால் உயர்பதவிகளை அலங்கரிக்கும் பெண்கள் எவ்வளவுபேர்? நிகர் சம்பளம் பெறும் மகளிர் எத்தனை பேர்? இதையெல்லாம் பேசக்கூட நாம் மறந்துவிட்டோம். அந்தளவுக்கு பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்துவிட்டன.

பாலபாரதி, சிபிஐஎம்
பாலபாரதி, சிபிஐஎம்

முன்பு இருந்த அடிமைத்தனங்களெல்லாம் (உடன்கட்டை ஏறுதல், அடுக்களையை விட்டு பெண் வெளியே வருதல், படிப்பை பெறுதல், பணிக்கு செல்லுதல், வரதட்சணை கொடுமையை தடுத்தல் போன்றவை) இன்று பெரும்பாலும் ஒழிய மிக முக்கியமான ஒரு காரணம், கல்வியறிவு. ஆக இன்றுள்ள அடிமைத்தனமும் அடக்குமுறையும் வன்முறையும் ஒழியவும் கல்வியே நம் ஆயுதமாக இருக்கும். நம்முடைய இப்போதைய கல்வி போதவில்லை.

அதைத்தான் இன்றைய நம் (பெண்கள்) மீதான வன்முறையின் நீட்சியாக நாம் பார்க்க வேண்டும். ஆக, இங்கு இன்னும் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக பெண் கல்வியையும், பாலியல் கல்வியையும் ஆரம்பக் கல்வி நிலையங்கள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை கொண்டு செல்லப்பட வேண்டும். இது நீண்டகாலத்துக்கு போகும்போதுதான், இந்த பிரச்னைகள் சரியாகும். மனிதர்களை அடிப்படையிலிருந்து மாற்றினால்தான் பிரச்னை சரியாகும்.

2. “சட்டம் துரிதமாக வேலை செய்ய வேண்டும்!”

இதேபோல மற்றொரு விஷயம், சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். இப்போதுமே சட்டம் கடுமையாக இருக்கிறதுதான்... ஆனாலும் அதில் பல பிரச்னைகள் உள்ளன என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன. அதன்மூலம் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியும். வெறும் மக்கள் மத்தியிலான விழிப்புணர்வு மட்டுமே எல்லாவற்றுக்கும் தீர்வாகிவிடாது.

இன்று பல வன்கொடுமை, வரதட்சனை, வீட்டுக்கொடுமை வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. இந்தியாவில் 2023-ல் 28,432 வழக்குகள் பதிவுசெய்ய்யப்பட்டுள்ளன என்கின்றன தரவுகள். ஆனால் அதில் எத்தனை வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவதிலேயே என்பதே இங்கு பிரச்னைகள் உள்ளன. அதிலும் அவர்களுக்கு எதிராக சாட்சிகள் இல்லையென்றால், வழக்கு அவ்வளவுதான்... உண்மை குற்றவாளியை, ‘இவர் குற்றவாளி’ என கண்டறியவே காவல்துறை போராடுகிறது. சட்டமும், காவல்துறையும், நீதித்துறையும், அரசும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் துரித நடவடிக்கைகளை எடுத்தால்தான் பொதுச்சமூகத்தில் மாற்றம் வரும். அதற்கான முயற்சிகளை இந்த அரசாங்கம்தான் முன்னெடுக்க வேண்டும்.

மணிப்பூரில் இனக்கலவரத்தில் அங்கிருந்த பெண்கள் ஆடையின்றி இழுத்துச்செல்லப்பட்டனரே... அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? யாரிடமாவது பதிலுள்ளதா?
பெண் நீதிபதியொருவர் உ.பி--யில் தன் தலைமை நீதிபதியாலேயே வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் எழுப்பினாரே... அவருக்கு என்ன நீதி கிடைத்தது? இறுதியில் ‘சாக அனுமதி கொடுங்கள்’ என அவர் உச்சநீதிமன்றத்துக்கே கடிதம் எழுதியதுதான் மிச்சம்.
பாலியல் வன்கொடுமை
“நீதிபதி ஒருவராலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன்” - உ.பி பெண் நீதிபதி அதிர்ச்சி புகார்

இப்படி ஒவ்வொரு வழக்கும் இங்கு இழுத்துக்கொண்டே செல்கிறது. அதுதான் பிரச்னை! இன்று வரை பிரதமர் மணிப்பூருக்கு செல்லவே இல்லை. ஒன்றிய அரசும் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின் எங்கிருந்து மாற்றம் வரும்?

சட்டம் வேகமாக வழக்கை அனுக வழிகொடுக்கவில்லை என்றால், அதற்கு அரசு செய்யவேண்டியது, தேவையான சட்டதிருத்தங்களை கொண்டுவருவதுதான். அதை எப்போது அரசு செய்யும்?

3. “போதை பொருட்களை ஒழிக்க வேண்டும்”

போதைப்பொருட்களை சமூகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். ஏற்கெனவே இங்கு வேலை வாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. இதில் அந்த இளைஞர்களுக்கு போதைப்பொருளும் கிடைத்தால்...? இது யாருடைய தவறு? அந்த இளைஞர்களுடைய தவறு மட்டுமா? விமானம், கடல் போன்ற வழிகளில்தானே இப்படியான பொருட்கள் நாட்டுக்குள்ளே வருகிறது? அதை தடுக்க அரசு என்ன செய்தது? போதைப்பொருளை ஒழித்தால்தான் பிரச்னைக்கு பல வழிகளில் தீர்வு கிடைக்கும்!

“அரசுதான் குற்றவாளி; மாற்றம் வரவேண்டியது அரசிடம் இருந்துதான், பொதுச்சமூகம் குற்றவாளியல்ல!”

மகளிர் தினத்தில் இதையெல்லாம் செய்யாமல், யோசிக்கக்கூட செய்யாமல்... LPG விலையை 100 ரூபாய் குறைக்கிறார்கள். போதாக்குறைக்கு, இது பெண்களை மகிழ்விக்கிறது என்று வேறு சொல்கிறார்கள்... இதையெல்லாம் எந்த மூலைக்கு சென்று சொல்வது நாம்! கிச்சனில் இருந்து பெண்களை விடுவித்து அவர்களுக்கான வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்கும் காலம் இப்போதுதான் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதைப் போன்றதொரு தருணத்தில் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைவு என்பது மகளிர் தினத்துக்கான பரிசு என சொல்வது எவ்வளவு பிற்போக்குத்தனமானது. என்னைப்பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட விஷயங்களில் நடவடிக்கை எடுக்காத அரசுதான் உண்மையான குற்றவாளி!” என்றார் வேதனையுடன்.

இனியாவது விழிக்குமா அரசு?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com