ஒரே ஆண்டில் ரூ.23,000 கோடியை இழந்த இந்தியர்கள்.. அதிகரிக்கும் சைபர் மோசடிகள்.. காரணம் என்ன?
2024இல் மட்டும் சைபர் மோசடிகளால் ரூ.22,842 கோடியை இழந்த இந்தியர்கள்
உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் ஆன்லைன் உலகைச் சொல்லவே வேண்டாம். குற்றங்களுக்குப் பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. குற்றம் செய்பவர்கள் புதுப்புது யுக்தியினைக் கையாண்டு மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வருகின்றனர். இதனைத் தவிர்க்க சைபர் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், குற்றங்களும் அதனால் இழப்புகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டு மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்கள் ரூ. 22,842 கோடியை இழந்துள்ளதாக, டெல்லியை தளமாகக் கொண்ட ஊடக மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான டேட்டாலீட்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெல்லி நிறுவனத்தின் டேட்டாலீட்ஸ் அறிக்கையில் வெளியான தகவல்
’இந்தியாவில் ஆன்லைன் நிதி மோசடிகள் மற்றும் டீப்ஃபேக்குகளின் தொடர்ச்சியான மற்றும் வளர்ந்து வரும் ஆபத்து' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அதன் அறிக்கையில், கடந்தாண்டில் மட்டும் சைபர் மற்றும் மோசடிக் குற்றங்களால் ரூ.22,842 கோடியை இந்தியர்கள் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023-இல் நிகழ்த்தப்பட்ட ரூ.7,465 கோடியைவிட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும். 2022-இல் ரூ.2,306 கோடியைவிட 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, நடப்பாண்டில் ரூ.1.2 லட்சம் கோடிக்கு மேல் இந்தியர்கள் இழப்பர் என்றும் கணித்துள்ளனர்.
இந்திய ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?
கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது, 2025/26 நிதியாண்டின் முதல் பாதியில் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது. மேலும் இழந்த பணத்தின் அளவு ரூ.2,623 கோடியிலிருந்து ரூ.21,367 கோடி வரை திகைப்பூட்டும் வகையில் இருந்துள்ளது. இதுபோன்ற அனைத்து சம்பவங்களிலும் கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கு தனியார் துறை வங்கிகள் காரணமாக இருந்துள்ளன. ஆனால், பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மொத்தமாக ரூ.25,667 கோடியை இழந்துள்ளனர்.
அதிகரிக்கும் சைபர் குற்றம் தொடர்பான புகார்கள்!
அதேபோல், 2023-இல் சுமார் 15.6 லட்சமாக இருந்த சைபர் குற்றம் தொடர்பான புகார்கள், 2024-இல் 20 லட்சமாக அதிகரித்திருப்பதாகவும், இது 2019இல் பதிவு செய்யப்பட்டதைவிட பத்து மடங்கு அதிகமாக உள்ளதாகவும், 2024, ஜனவரி மாதத்தில் மட்டும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் உள்ள சமூக வலைதளங்கள் வாயிலாகப் பதிவுசெய்யப்பட்ட சைபர் புகார்களின் எண்ணிக்கை 15,000 எனவும், அதற்கு அடுத்த மாதமான பிப்ரவரியில் 14,000 மற்றும் மார்ச்சில் 15,000 புகார்களும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மோசடி செயலில் ஈடுபட என்ன காரணம்?
இந்தியாவில் டிஜிட்டல் மோசடி செயலில் ஈடுபடுபவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் திறமையாகவும் மாறிவருவதும், வளர்ந்துவரும் டிஜிட்டல் கட்டண முறைகளின் பயன்பாடு அதிகரித்தலும், நிதி விவரங்களை ஆன்லைனில் பகிர்தலுமே இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஜூன் 2025இல் மட்டும் 190 லட்சத்திற்கும் அதிகமான UPI அல்லது ஒருங்கிணைந்த கட்டண இடைமுக பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும், இவை மொத்தம் ரூ.24.03 லட்சம் கோடி மதிப்புடையவை என்றும் மத்திய அரசின் தரவுகள் கூறுகின்றன. உண்மையில், டிஜிட்டல் கட்டணங்களின் மதிப்பு 2013இல் தோராயமாக ரூ.162 கோடியிலிருந்து ஜனவரி 2025இல் ரூ.18,120.82 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் உலகளவில் இதுபோன்ற அனைத்துக் கட்டணங்களிலும் கிட்டத்தட்ட பாதியை இந்தியா கொண்டுள்ளது.
மறுபுறம், டிஜிட்டல் மோசடி செயலில் ஈடுபடுபவர்கள், இன்று இந்தியாவில் உள்ள அனைத்துத் துறைகளையும் அதாவது, வங்கி முதல் காப்பீடு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் சில்லறை விற்பனை வரை எனப் பலவற்றையும் அவர்கள் குறிவைக்கின்றனர். மேலும் அவர்கள், இன்றைய செயற்கை நுண்ணறிவு அல்லது AI போன்ற தொழில்நுட்பங்கள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். மேலும் மோசடியில் ஈடுபடும் வகையில் போலிச் சான்றிதழ்கள், உருவங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல் மோசடியாளர்களுக்கு ஆயுள், சுகாதாரம், வாகனம் ஆகியவற்றின் காப்பீடுகளும் பெருமளவில் லாபமானதாகதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆன்லைன் வணிகத் தளங்களைப் பயன்படுத்தி, பரிசுக் கூப்பன், தள்ளுபடி எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட ஆபர்களை வழங்கி அதன்மூலம் பொதுமக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். அந்த வகையில் வாட்ஸ் அப் மூலமே அதிகளவில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக, புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.