ஆதார் அட்டை மூலமாக நூதன மோசடி - சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
OTP கேட்கும் நபர்களிடம் ஓடிபி-யை அளிக்க வேண்டாம்:
வங்கியின், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு புதிதாக கொடுக்கப்பட உள்ளதாகக் கூறி வங்கி அதிகாரிகள் போல் பேசி ஏமாற்றும் மோசடி கடந்த காலங்களில் நடைபெற்றது. அப்பொழுது OTP அனுப்புமாறு கூறி, மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடித்தனர். செல்போனில் அழைத்து OTP கேட்கும் நபர்களிடம் OTP-யை அளிக்க வேண்டாம் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு பல்வேறு நூதன முறையில் சைபர் க்ரைம் மோசடிகளை அரங்கேற்ற ஆரம்பித்தனர்.
ஆதார் அட்டையை பயன்படுத்தி நூதன மோசடி:
குறிப்பாக பல்வேறு சேவைகளை பெறுவதற்கு ரிஜிஸ்டர் செல்போன் நம்பருக்கு OTP அனுப்பி உறுதி செய்யும் அமேசான், flipkart போன்ற டெலிவரி நிறுவனங்களில் இருந்து அழைப்பதாக கூறியும், மக்களிடம் OTP யை பெற்று வேறு விதமாக மோசடியை அரங்கேற்ற ஆரம்பித்தனர். இந்த நிலையில் ஆதார் அட்டையை பயன்படுத்தி நூதன முறையில் வங்கியில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் மோசடி முயற்சியை வடமாநில கும்பல்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஓட்டுநர் புகார்:
சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரியும் நபர் ஒருவர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து அழைத்து தனது மகனுக்கு ஆதார் அட்டை விண்ணப்பித்ததாகவும் அதில் தவறுதலாக ரிஜிஸ்டர் செல்போன் நம்பருக்கு, தங்களது நம்பரை கொடுத்து விட்டதாகக் கூறி பேசியதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக மகனின் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட தனது செல்போன் எண்ணில் ஒரு நம்பர் மாறி தங்களது செல்போன் எண் பதிவு செய்யப்பட்டு விட்டதாக நம்ப வைத்ததாக கூறியுள்ளார்.
செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியது என்ன?
மேலும், தன்னை நம்புவதற்காக மகனின் ஆதார் விண்ணப்பத்தையும், பேசும் நபரின் ஆதார் அட்டையையும் வாட்ஸ் அப்பில் அனுப்பியதாக கூறியுள்ளார். அதில் தனது செல்போன் நம்பர் ஆதார் ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டது போன்று ஒரு ஆவணத்தை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார். ஆதார் நிறுவனத்தில் ஆன்லைனில் மகனின் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட தவறுதலாக பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை மாற்றுவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது OTP வரும் எனவும் அது தங்களது செல்போன் எண்ணிற்கு வரும் பொழுது அதை அனுப்புமாறு கூறி பேசியதாக தெரிவித்துள்ளார்.
இந்தியில் பேசிய மர்ம நபர்?
குறிப்பாக, போபாலில் இருந்து பேசுவதாக கூறி இந்தியில் பேசியதாகவும், தனக்கு இந்தி தெரியாது என கூறியதும் ஆங்கிலத்திலும் பேசியதாக கூறியுள்ளார் . தேவையில்லாமல் OTP-யை பகிரக்கூடாது என தனக்கு செல்போனில் அழைத்த நபர்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று வீடியோ கால் செய்யுமாறு கூறியதாக புகார் அளித்த ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அதன்பின் வீடியோ காலில் வந்த நபர் காவல் நிலையத்தில் இருப்பது போல் பேசியதாகவும் காவலர் உடையில் ஒருவரை காட்டி வீடியோ கால் பேசியதாக தெரிவித்துள்ளார்.
சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை:
காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரிடம் செல்போனை கொடுக்குமாறு கூறிய போது அந்த வடமாநில நபர் கொடுக்க மறுத்து வீடியோ காலை துண்டித்ததாக தெரிவித்துள்ளார். அதன் பின் தனது செல்போனுக்கு அழைப்பு வரவில்லை எனக் கூறியுள்ளார். இவ்வாறு வடமாநில கும்பல் மோசடி செய்ய முயற்சி செய்த ஆடியோவுடன், ஏமாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் ஆதார் அட்டை மற்றும் ஆதார் விண்ணப்ப ஆவணங்கள் உள்ளிட்டவையும் வைத்து சென்னை சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார்.
இதுபோன்று ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் பொழுது செல்போன் நம்பரை தவறுதலாக பதிவு செய்து விட்டதாக கூறி பேசும் மோசடி கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி சைபர் க்ரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.