டெல்லி சட்டசபை தேர்தல்: முக்கியப் பங்காற்றும் மகளிர் உதவித்தொகை.. ஆதிக்கம் செலுத்துமா ஆம் ஆத்மி?
டெல்லி சட்டசபைத் தேர்தல்
தேசிய அரசியலில் மிகுந்த சுவாரசியத்தை உண்டாக்கியுள்ள டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரே கட்டமாக டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று, பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தேர்தல் அறிவிப்பை செவ்வாய்க்கிழமை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டவுடன், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில், டெல்லிக்கு சிறப்பு அறிவிப்புகள் அனுமதிக்கப்படாது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். மத்திய அரசுக்கு இந்த நடைமுறையை பின்பற்ற கடிதம் அனுப்பப்படும் என அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் தாக்கம் உண்டாக்கும் அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட தடை ஏதுமில்லை எனவும் ராஜீவ் குமார் விளக்கினார். இதே நடைமுறை முந்தைய பட்ஜெட்கள் மற்றும் இடைக்கால பட்ஜெட்களில் பின்பற்றப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
மும்முனைப் போட்டி
ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே பிரதான போட்டி நடைபெறுவதாக கருதப்படும் நிலையில், காங்கிரஸ் மூன்றாவது சக்தியாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது. சென்ற வருடம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சி டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி கண்டது. அதற்கு முந்தைய சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் செயல்படும் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும் 2014, 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில், பாரதிய ஜனதா கட்சி டெல்லியில் உள்ள அனைத்து ஏழு தொகுதிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. இப்படி டெல்லி மக்கள் மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி என மாற்றி மாற்றி வாக்களித்து வருகின்றனர்.
முக்கிய வாக்குறுதி மகளிர் உதவித்தொகை
ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் தங்களுடைய முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மகளிர் உதவித்தொகையை குறிப்பிட்டுள்ளனர். ஆம் ஆத்மி கட்சி ஊழல் ஆட்சியை டெல்லியில் நிறுவியது எனவும் முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனக்காக வசந்த மாளிகை கட்டிக்கொண்டதாகவும் பாஜக பிரசாரம் செய்து வருகிறது. டெல்லி மக்களுக்கு இலவச மின்சார வசதி மற்றும் மகளிருக்கு இலவச பேருந்து வசதி அளித்த தங்களுக்கு மக்கள் மீண்டும் ஆதரவு அளிப்பார்கள் என ஆத்மி கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது.
கடந்த தேர்தல்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத காங்கிரஸ், இந்த முறை எப்படியாவது டெல்லியில் தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. ஊழலில் ஈடுபட்டதால் அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோதியா, மற்றும் சத்தியேந்திர ஜெயின் உள்ளிட்டார் சிறை சென்றார்கள் என சந்திப் தீக்ஷித் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜனவரி 17ஆம் தேதி வரை டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் ஜனவரி 18ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை ஜனவரி 20ஆம் தேதி வரை திரும்ப பெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர்கள் எண்ணிக்கை
யூனியன் பிரதேசமான டெல்லியில் மொத்தம் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 83.5 லட்சம் எனவும் பெண் வாக்காளர்கள் 71.7 லட்சம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 830 நபர்கள் நூறு வயதை கடந்தவர்கள் என்பதும் 1261 நபர்கள் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் 12 பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைய புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்காக 13,033 வாக்கு சாவடிகள் 2,697 இடங்களில் அமைக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு முழுமையாக நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.